சட்டரீதியாக தடைசெய்யப்பட்ட விசயங்கள் கூட நம் நாட்டில் சர்வ சாதரணமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. உதரணமாக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது, சாலை விதிகளை மீறுவது, பொருட்களை அதிக விலை வைத்து விற்பது போன்றவற்றை குறிப்பிடலாம். இவை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றங்கள் தான். இந்த வரிசையில் நம்மை நேரடியாகப் பாதிக்கும் ஒன்று 'கலப்படம்'. பால் முதல் மருந்துப் பொருட்கள் வரை இந்தக் கலப்படங்கள் நடைபெறுகின்றன. இவை சட்டப்படி குற்றம் என்பதையும் தாண்டி, கலப்படம் நுகர்வோரின் உடல் நலனுக்கே தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதுதான் மிகக் கொடுமையான விசயம்.
இப்படித்தான் நாட்டுச்சர்க்கரை, அச்சுவெல்லத்தில் கலப்படம் நடைபெறுகிறது. அது நுகர்வோருக்கு உயிர் கொல்லியாகவும் மாறுகிறது என்ற தகவல் நமக்கு கரூர் மாவட்டத்தில் இருந்துவர நாம் விசாரணையில் இறங்கினோம்.
கரூர் மாவட்டத்தில் இருந்து 20 கிலோ மீட்டரில் இருக்கிறது வெள்ளக்கல் மேடு. கரும்பு மற்றும் விவசாயம் நன்றாக விளையும் பூமி இது. இங்கே தான் மிகவும் பிரம்மாண்டமான முறையில் அந்த அச்சு வெல்ல தொழிற்சாலை இயங்கி வருகிறது. மிகவும் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வரும் இந்த தொழிற்சாலைக்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை. இங்கு வேலை செய்யும் பலரும் மாஸ்க் இல்லாமலேயே வேலை செய்கிறார்கள்.
அதேபோல் இவர்கள் பெரிய கொப்பறை சட்டியில் கரும்புசாற்றை போட்டுத்தான் காய்ச்சுகிறார்கள். தொடர்ந்து அதில் உள்ள அழுக்கை நீக்க சோடா உப்பை குறிப்பிட்ட அளவில் போடுகிறார்கள். சிறிது நேரத்தில் அழுக்கு அப்படியே மேலே வந்து விடும். அதனை எடுத்து அகற்றி விடுகிறார்கள். பின்னர் வெல்லத்துக்கு கலர் கொடுக்க அவர்கள் நினைத்த அளவு சோடியம் ஹைட்ரோ சல்பேட்டை போடுகிறார்கள். தொடர்ந்து இரண்டு மணி நேரம் கிளறினால் கரும்பு சாறு பாகு ரெடியாகி விடும். பின்னர் நாட்டுச்சர்க்கரை, அச்சுவெல்லம் தயாரித்து விடுகிறார்கள்.
இந்த சோடியம் ஹைட்ரேட் சல்பேட்டால்தான் நம் உடம்பில் பல பிரச்சினை ஆகிவிடுகின்றன என்பது பலருக்கும் தெரியாமலே போய்விடுகின்றன. உதாரணமாக இந்த சோடியம் ஹைட்ரோ சல்பேட்டை ஒரு டம்ளரில் கால்டம்ளர் போட்டு தண்ணீர் கலந்து குடித்துவிட்டால் மரணம் நிச்சயம் என்கிறார்கள். அப்படியென்றால் மஞ்சள் நிற வெல்லத்தை தொடர்ந்து சாப்பிடுபவர்கள் கதி சொல்லவே வேண்டாம், வெல்லத்தை தின்பதால் இந்த நோய்க்கு ஆளாகியுள்ளோம் என்று தெரியாமலேயே பலரும் நோயை விலைக்கு வாங்கிக் கொண்டுள்ளார்கள்.
சரி இந்த ஹைட்ரோ சல்பேட்டை போடுவதற்கு காரணம் என்ன? முன்பெல்லாம் வெல்லம் காய்ச்சும்போது, வெல்லப்பாகில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சுண்ணாம்பைக் கலந்துவிடுவார்கள். இது வெல்லப்பாகில் உள்ள அழுக்கை வெளியேற்றுவதுடன், சுண்ணாம்பு சத்தாகவும் வெல்லத்தில் கலந்து ஆரோக்கியத்தைக் கொடுத்தது. ஆனால் வெல்லத்தின் இயல்பான நிறமான பழுப்பு நிறத்தைப் போக்குவதற்கு சோடியம் ஹைட்ரோ சல்பேட், சூப்பர் பாஸ்பேட், கேசரிபவுடர், மைதா மாவு ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
தமிழக மக்கள் தான் நிறத்தைப் பார்த்து மயங்குபவர்கள் ஆச்சே.. ஒரிஜனலாக அச்சு வெல்லம் தயாரித்தால் கொஞ்சம் விலைகூட அவ்வளவுதான். ஆனால், அந்த வெல்லம் அடர் பழுப்பு நிறத்தில் தான் இருக்கும். அது சுத்தம் இல்லாத வெல்லம் என்று மக்கள் நினைப்பதோடு அதை வாங்கவும் தயங்கினார்கள். அதனால் தான் சர்க்கரை ஆலை அதிபர்கள் ஹைட்ரோ சல்பேட்டை கலந்து, மக்கள் உயிரோடு விளையாட ஆரம்பித்து விட்டார்கள். இந்த ஆலை அதிபரும் அதைத்தான் செய்கிறார்.
இந்தத் தொழிற்சாலை மட்டும் இங்கே கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக இயங்குகிறதாம். இதில் வரும் கழிவு நீரை முறையாகச் சுத்திகரிக்காமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். இதனால் இந்தப் பகுதி மக்களுக்குப் பலவித நோய்களும் வருவதாகச் சொல்கிறார்கள்.
அசல் வெல்லம்
இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் முதல் கரூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முதல் யாரிடம் புகார் கொடுத்தாலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை பலத்த கவனிப்பு நடக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, இதே கரூர் மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்ட காவிரி கரை ஓரப் பகுதிகளில் நிறைய போலி நாட்டுச் சர்க்கரை மற்றும் அச்சு வெல்ல தொழிற்சாலைகள் நிறைய இயங்கி வருகின்றது. அவர்கள் 'அஸ்கா' எனப்படும் வெள்ளை சர்க்கரையைக் கலப்படம் செய்து வெல்லம் என்ற பெயரில் வெளி மார்க்கெட்டுகளில் விற்பனை செய்து வருகிறார்கள். இதில் இன்னொரு அதிர்ச்சியான விஷயம், வெல்லத்தில் கலப்படம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் சர்க்கரையைக் கூட, பெரும்பாலானவர்கள் மூன்றாம் தர சர்க்கரையைத் தான் உபயோகப்படுத்துகின்றனர். இதனால் வெல்லம் சாப்பிடுவதாக நினைத்துச் சொந்த காசில் சூனியம் வைத்து உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கின்றனர்.
சமீபத்தில் தான் நாமக்கல் மாவட்டத்தில் சில போலி அச்சு வெல்ல தொழிற்சாலைக்கு சீல் வைத்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள். கரூர் மாவட்ட அதிகாரிகளோ லஞ்சத்தில் 'மஞ்சள்' குளித்துக் கொண்டிருக்கிறார்கள். மாவட்ட கலெக்டர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.