டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட "கஜா" புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களுக்கு அரசு அதிகாரிகள் செல்லவில்லை. அரசின் நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அப்பகுதிகளில் ஏற்பட்ட சேதத்தை நேரில் பார்வையிட்டும், புயலால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிவாரண உதவிகளை அளிக்கும் வகையிலும் கடந்த 21- 11- 2018 முதல் 23 -11 -2018 வரை மூன்று நாட்கள் தங்கி 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிவாரண உதவிகள் செய்திருக்கிறார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்.
புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களிலுள்ள திருமண மண்டபங்களில் தங்கி தன் சொந்த நிதியிலிருந்து இரண்டு கட்டமாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தற்போது மூன்றாவது கட்ட நிவாரண பணிகளுக்காக ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்குத் தேவையான அரிசி, பிரட், பிஸ்கட், பால், போர்வை, தார்பாய்கள், உடைகள், கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி ஆகியவற்றை வழங்கி வருகின்றார். நிவாரண உதவிகளுக்கான பொருட்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக இயங்கி வருகின்றனர் தமிழக வாழ்வுரிமை கட்சியினர்.
கீழையூர் ஊராட்சியில் உள்ள தாழபந்து கிராமத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசிக்கின்றனர். புயலால் பாதிக்கப்பட்டு சிதிலமடைந்து கிடக்கிறது இந்த கிராமம். இப்பகுதிக்கு சென்ற வேல்முருகனிடம்,
"புயலால் பாதிக்கப்பட்டு நான்கு நாட்களாகியும் ஒருத்தரும் இந்த பகுதிக்கு எட்டிப் பார்க்கலை. அரசாங்க அதிகாரிங்களும் வரலை தம்பி. குடிக்க தண்ணீ இல்லாம. குழந்தைகளுக்கு பாலில்லாம கஷ்டப்படுறோம். நாங்க என்ன தீண்டத்தகாதவங்களா? " என கேட்டு கதறியுள்ளனர் மூதாட்டிகள். அவர்களை ஆறுதல் படுத்திய வேல்முருகன், " அரசாங்கம் வரலைன்னு கவலைப்படாதீங்கம்மா. உங்களுக்கு தேவையானதை அனைத்தும் நாங்க செய்றோம் " என சொல்லி, நிவாரன உதவிகள் அனைத்தையும் செய்துள்ளார்.
அதேபோல, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோவில் பத்து கிராமத்தை பார்வையிட்டு நிவாரண உதவிகளை செய்து வந்தனர் வேல்முருகனும் வாழ்வுரிமைக் கட்சியினரும். அப்போது, அப்பகுதி மக்கள் , " இன்று காலைதான் ஆளுநர் வந்து பார்த்து விட்டு போனார். ஆனால் நிவாரண உதவிகள் எதுவும் எங்களுக்கு இதுவரையில் கிடைக்கவில்லை. எங்கள் கிராமத்துக்கு வந்து முதன்முதலில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை அளித்தது நீங்கள்தான்" என்று நெகிழ்ச்சியோடு கூறினார்கள்.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வேல்முருகன் வழங்கிய போது, அங்குள்ள பள்ளிவாசலில் ஒன்றாக தங்கியுள்ள முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்த மக்கள், நிவாரண பொருட்களை தங்களிடம் மொத்தமாக கொடுத்து விடுமாறும் அதை தங்களுக்குள் ஒற்றுமையாக பங்கிட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தனர். அவர்களின் ஒற்றுமையக் கண்டு மெய்சிலிர்த்த வேல்முருகன், நிவாரணப் பொருட்களை மொத்தமாக அவர்களிடம் வழங்கினார்.
நிவாரண உதவிகள் குறித்து வேல்முருகனை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, "புயலால் கடும் சேதத்தையும் பாதிப்புகளையும் சந்தித்துள்ள டெல்டா மாவட்டங்களில் பல கிராமங்களுக்கு அரசின் நிவாரண உதவி கிடைக்கவில்லை. பல இடங்களை அதிகாரிகள் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. இதனை மக்கள் வேதனையுடன் சொல்லி கதறும் போது நெஞ்சே வெடித்துவிடுவது போலிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக் கொல்லையில் அமைந்துள்ள ஈழத்தமிழர் குடியிருப்புகள் பக்கமும் அரசு ஊழியர்களின் பார்வை படவே இல்லை. இதனையறிந்து ஈழத்தமிழர் குடியிருப்பு பகுதிகளைப் பார்வையிட்டு அங்கிருந்த மக்களிடம் புயலால் அவர்கள் சந்தித்த இழப்புகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடி வழங்கினேன்.
அத்துடன் எமது வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகளை எந்த நேரத்திலும் தொடர்புகொண்டு எந்த உதவிகள் வேண்டுமானாலும் உரிமையுடன் கேளுங்கள் என அவர்களிடம் தெரிவித்தேன். இப்படி நிவாரண உதவிகள் எட்டிப்பார்க்காத கிராமங்களை கண்டறிந்து மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள்" என்கிறார் .