மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர்,
எனக்குத் தெரிந்து மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்கிய புயல் கஜா. இதற்கு முன்பு இதுபோன்று நடந்திருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. தானே புயலை மிகவும் கொடுமையானதாக பார்த்தோம். அதைவிட பல மடங்கு பாதிப்புகளை உண்டாக்கியுள்ளது கஜா.
ஆனால் அரசுக்கு இந்த புயல் வலிமையானது என்று முன்கூட்டியே தெரியும். இன்று உள்ள விஞ்ஞான வளர்ச்சியில் வானிலை ஆய்வு மூலம் 10 நாட்களுக்கு முன்பே இதுபோன்ற விளைவுகள் வரும் என தெரிந்து கொள்ள முடியும்.
முன்னெச்சரிக்கையாக இருங்கள் என்று பொதுமக்களை சொன்னார்களே தவிர, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்தது? தெரிந்தே மக்களை தவிக்கவிட்டுள்ளது அரசு என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. தெரியாமல் நடக்கவில்லை.
புயலுக்கு முன்பே எல்லா இடங்களிலும் தண்ணீர் தொட்டிகளை இறக்கி வைத்திருக்கலாம். ஏற்கனவே உள்ள மேல்நிலைத் தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி வைத்திருக்கலாம். முன்கூட்டியே மற்ற மாவட்டங்களில் இருந்து மின்சார ஊழியர்களை வரவழைத்திருக்கலாம். முன்கூட்டியே மற்ற மாவட்டங்களில் இருந்து ஜேனரேட்டர்களை இறக்கி வைத்திருக்கலாம். மற்ற மாவட்டங்களில் இருந்து முன்கூட்டியே நகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களை அழைத்து வந்து தங்க வைத்திருக்கலாம்.
இவற்றையெல்லாம் ஏற்கனவே முன்கூட்டியே தயாராக வைத்திருந்தால், புயல் அடித்து ஓய்தவுடனேயே புயலைவிட வேகமாக நிவாரணைப் பணிகளை, மீட்புப் பணிகளை தொடங்கியிருக்கலாம். ஆனால் இவர்கள் எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. கஜா புயலால் மக்கள் இப்படி கஷ்டப்படுவது அரசுக்கு மிகப்பெரிய தோல்வி.
இன்றோடு 6 நாள் ஆகிவிட்டது. இன்னும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் குடிக்க தண்ணீர் இல்லை. புயல் அடித்து ஐந்து நாள் கழித்தும் குடிக்க தண்ணீர் சப்ளை செய்ய முடிவில்லை என்றால் என்ன நிர்வாகம் நடக்கிறது?
தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு பிரைவேட் வாட்டர் டேங்கர்ஸ் இருக்கிறார்கள்... அவர்களிடம் பேசி குடிநீருக்கு வழிவகை செய்ய வேண்டியதுதானே?மறுநாளே குடிநீரை மக்களிடம் கொண்டு சென்றிருக்கலாம். செய்யவில்லை.
விவசாயப் பகுதிகளை பார்த்தீர்களா? விவசாயிகளிடம் பேசினீர்களா?
பார்த்தோம். பொதுவாக காற்று வீசும்போது, புயல் அடிக்கும்போது தோப்புகளில் வாழைகள் சரிந்து சாய்ந்து கிடக்கும். நாம் பார்த்திருக்கிறோம். இந்த கஜா புயலில் தென்னை தோப்புகள் அப்படியே சரிந்து சாய்ந்து கிடக்கிறது. வாழைத்தோப்பு மாதிரி கிடக்கிறது. விவசாயிகள் கண்ணீர் விடுகிறார்கள். எந்த எம்எல்ஏவும், எந்த அமைச்சரும் வந்து பார்க்கவில்லை என்கிறார்கள். அவர்களை சமாதானப்படுத்த நமக்கு வார்த்தைகள் வரவில்லை.
உள்ளாட்சி நிர்வாகம் இல்லாமல் இருப்பதால் நிவாரணப் பணிகள் தாமதப்படுகிறதா?
உள்ளாட்சி நிர்வாகம் இருந்திருந்தால் இந்த பாதிப்புகளை ஓரளவு சமாளித்திருப்பார்கள். தமிழக அரசின் கையாலாகாததனத்தால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் போனதால் மக்களுக்குத்தான் பெரிய தண்டனை. ஊராட்சி தலைவர், கவுன்சிலர், வார்டு மெம்பர் இருந்திருந்தால் அவரவர்கள் சில குடும்பங்களை காப்பாற்றியிருப்பார்கள். அரசின் நிவாரணத்தை கேட்டு பெற்றுத்தருவார்கள். இப்போது கிராமத்தில் யாருமே இல்லை.
இரண்டு கிராமத்திற்கு, மூன்று கிராமத்திற்கு ஒரு வி.ஏ.ஓ. இருக்கிறார். அந்த வி.ஏ.ஓ.வும் அந்த ஊரைச் சேர்ந்தவராக இருக்க மாட்டார். இவ்வளவு பெரிய புயல் வந்தால் அவர் எப்படி முகாம் அமைப்பார், எப்படி அவர் சமாளிப்பார்?
நேற்று (20.11.2018) பாமனி என்ற ஊரில் மதியம் 12 மணிக்கு சாலை மறியல் நடந்தது. அந்த வழியே சென்றபோது அவர்களை சந்தித்தோம். நேற்று (19.11.2018) காலையில் அதிகாரிகள் வந்து தேவையானவற்றை தருகிறோம் என்றார்கள். இதுவரை குடிக்கக்கூட தண்ணீர் இல்லை என்று சாலை மறியல் செய்தார்கள்.
புயல் பாதித்த இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு செய்யும் போது பொதுமக்கள் என்ற போர்வையில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர் என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை கூறியிருக்கிறாரே?
நீங்க (ஆளும் அரசு) செய்ய வேண்டியதை ஒழுங்காகச் செய்தால் யார் தூண்டிவிட்டாலும் மக்கள் போராடுவார்களா? நீங்கள் மக்களை சந்திக்கப் போகும்போதே மக்களுக்கு என்னென்ன வேண்டுமோ அதை எடுத்துக்கொண்டு சென்றால் உங்களை யார் மறிக்கப்போகிறார்கள்.
குடிக்க தண்ணீர் இல்லை, சாப்பாடு இல்லை. தொடர்ந்து மழை பெய்கிறது. குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்கள். துணிமணிகள் கிடையாது.
சிமெண்ட் தரையில் ஜில்லென்று இருக்கும் தரையில் படுத்துக்கிடக்கிறார்கள். பாய் கிடையாது. குழந்தை மேல போத்துறத்துக்கு ஒரு துணி கிடையாது. எவ்வளவு கொடூரம்? இப்படி இருக்கும்போது மக்கள் எப்படி அமைதியாக இருப்பார்கள்? மக்களை யாரும் தூண்டிவிடவில்லை. பொறுத்திருந்து பார்த்துவிட்டு அவர்களே போராடுகிறார்கள்.
நிவாரணப் பணிகளில் ஈடுபடாமல் எதிர்க்கட்சிகளை குறை சொல்லி இந்த நேரத்திலும் அரசியல் செய்கிறார்கள் ஆளும் கட்சியினர். இதில் தூண்டிவிட என்ன வேண்டியிருக்கிறது...
ஐந்து நாள் கழித்து முதல் அமைச்சர் புதுக்கோட்டைக்கு சென்றிருக்கிறாரே?
இவ்வளவு பெரிய சம்பவம் நடந்து ஐந்து நாள் கழித்து முதல் அமைச்சர் செல்கிறார். நான்கு நாளாக எங்கே போயிருந்தார்? சேலத்தில் நடக்கும் விழாவை நான்கு நாள் கழித்து கொண்டாடினால் ஆவாதா?
புதுக்கோட்டைக்கு வந்த முதல் அமைச்சர் எவ்வளவு நேரம் இருந்தார்? ஏற்கனவே சிலரை வரவழைத்துள்ளனர். அவர்களிடம் நிவாரணப் பையை கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார்.
நாகை, திருவாரூக்கு ஏன் செல்லவில்லை? வானிலையை காரணம் காட்டி ஏன் பாதியில் திரும்பி ஓடினார்? அதே மோசமான வானிலையில்தானே மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்... மின்சார ஊழியர்கள் முதற்கொண்டு தொழிலாளர்கள் மீட்புப் பணியில் உயிரை பணயம் வைத்து, தியாக மனப்பாண்மையோடு ஈடுபட்டுள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார ஊழியர்கள் செய்யும் பணிகளை நேரில் பார்த்தாரா முதல் அமைச்சர்? மழையில் நனைந்துகொண்டு, மரத்தில் ஏறி, மரங்களை அப்புறப்படுத்தி, அறுந்துபோன கம்பிகளை அகற்றி அவர்கள் தங்கள் பணிகளை அர்ப்பணிப்போடு செய்கிறார்கள். அதனை பார்க்கும்போது நமது கண்ணில் தண்ணீர் வருகிறது. வானிலையை காரணம் காட்டி முதல் அமைச்சர் திரும்பிப்போனது மிகப்பெரிய வெட்கக்கேடு.
எந்தெந்த மாவட்டங்களுக்குச் சென்றீர்கள்? மக்கள் என்ன சொல்லுகிறார்கள்?
நான் மற்றும் எங்கள் கட்சித் தலைவர்கள் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நான்கு நாட்களாக உட்கிராமங்களில் பயணம் செய்து மக்களை சந்தித்தோம். நாங்கள் பார்த்தது அதிகபட்சம் 35, 40 இடங்கள் அவ்வளவுதான். அதுக்கு மேல் எங்களால் பார்க்க முடியவில்லை.
உதாரணத்தற்கு ஒரு இடம் சொல்லுகிறேன். தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டை என்ற ஊரில் மாரியம்மன் கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ளனர் என்று கேள்விப்பட்டு அங்கு சென்றோம். அவர்களிடம் கேட்டபோது, 'இதுவரை எந்த அதிகாரியும் வரவில்லை. புயல் அடிக்கப்போகிறது என்று தகவல் தெரிந்து இங்கு வந்து தங்கினோம். இங்கு வயதான ஒருவர் உடல்நிலை மோசமான நிலையில் இருக்கிறார். அவரை காப்பாற்ற வழி தெரியவில்லை' என்றனர். அங்கிருந்து நாம் அமைச்சர் துரைக்கண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தோம். முன்னாள அமைச்சர் வைத்திலிங்கத்தை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தோம். பலனில்லை.
கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமரிடம் எடுத்துச் சொல்ல முதல் அமைச்சர் டெல்லி செல்கிறாரே?
போகட்டும் தவறில்லை. இன்னும் பாதிப்பை முழுமையாக இவர்கள் கணக்கெடுக்கவில்லையே. முதல் அமைச்சர் நேரில் சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று என்ன இருக்கிறது. அமைச்சரவை குழுவை அனுப்பலாம். முதல் அமைச்சர் இங்கு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை, நிவாரணப் பணிகளை முடுக்கி விடலாம்.
அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து பேசி, அனைவரையும் அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்கலாம். இதனை அவர்கள் செய்ய மாட்டார்கள். அனைத்துக் கட்சியினரையும் அழைத்துச் சென்றால் மோடிக்கு கோவம் வந்துவிடும்.
மோடியின் கடைக்கண் பார்வையில் இந்த ஆட்சி நடப்பதால் அவர் மனம் நோகும்படி நடந்துகொள்ள மாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களை ஏன் பார்க்கவில்லை என்றால், தமிழ்நாட்டு மக்களுக்காக மோடியை பார்க்கப்போகிறேன் என்கிறார். பாம்பும் சாகக்கூடாது, கொம்பும் உடையக்கூடாது என்பதுபோல நடந்து கொள்கிறார்கள்.