அம்பேத்கருடைய பிறந்த தினமான நேற்று முன்தினம் அவர் வாழ்ந்த வீட்டில் கருப்பு கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எவிடன்ஸ் கதிர் பேசும்போது, "இந்திய அரசியல் சாசனத்தை இயற்றிய மாமேதை அண்ணல் அம்பேத்கருடைய பிறந்ததினம் ஏப்ரல் 14. நேற்று முன்தினம் உலகமே அம்பேத்கருடைய பிறந்த தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தது. ஆனால் அம்பேத்கர் வாழ்ந்த அவருடைய வீட்டில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. அதற்கு காரணம் அம்பேத்கரின் பேத்தியைத் திருமணம் செய்துகொண்டுள்ள சிந்தனையாளர் ஆனந்த் தேவ்தும்டே கைது செய்யப்பட்டுள்ளார். அவரோடு சமூக ஆர்வலர் கவுதம் நல்லாகான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். எதற்காக இந்தக் கைது என்று பார்க்க வேண்டும்.
1818-ம் ஆண்டு பிரிட்டிஷ் படைக்கும், பேஷ்வா படைக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் ஆங்கில படை வெற்றிபெற்றது. பேஷ்வா படையில் உயர்ஜாதி என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம் இருந்தார்கள். ஆங்கில படையில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட அனைவரும் இருந்தார்கள். இதில் ஆங்கிலேயர் படை வெற்றி பெற்றதை ஆண்டுதோறும் கொண்டாடும் விதமாக விழா நடைபெறும். கடந்த 2018-ம் ஆண்டும் மராட்டியத்தில் இதே போன்ற ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கெடுக்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. மராட்டியத்தில் அதற்கு முன்பு அப்படி ஒரு கூட்டம் கூடியதில்லை என்று சொல்லுமளவுக்கு மக்கள் வெள்ளம் அணி திரண்டது. இதில் தாழ்த்தப்பட்ட மக்களை தவிர அனைத்து ஜாதி மக்களும் அணிதிரண்டு வந்திருந்தார்கள்.
இந்த எழுச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத மதவாத அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் அந்த விழாவை ஏற்பாடு செய்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பதிலுக்கு அவர்களும் தாக்குதல் நடத்தினார்கள். ஒருவர் கொல்லப்பட்டார். மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சேதமாயின. இந்தக் கலவரம் காரணமாக, இதில் ஏதோ பெரிய சதித்திட்டம் தீட்டியதைப் போல ஒரு 11 பேர் மீது வழக்கு போட்டார்கள். அதில் ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மீதியிருந்த இவர்கள் இருவரும் உயர்நீதிமன்றம் அணுகி தங்களுக்கான ஜாமீனைப் பெற்றுவந்தார்கள்.
உச்சநீதிமன்றம் தற்போது அவர்களுக்கான பெயிலை மறுத்த நிலையில் அவர்கள் நேற்று காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்கள். அவர்கள் தனக்கும் இந்தக் கலவரத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தொடர்ந்து கூறிவந்தார்கள். எழுதியும் வந்துள்ளார்கள். ஆனால் அவர்களின் பேச்சை ஏற்காமல் பலவிதமான தொல்லைகளை அவர்களுக்கு அதிகார வர்க்கம் தொடர்ந்து கொடுத்து வந்தது. அப்போதுதான் இந்த 'அர்பன் நக்சல்' என்ற வார்த்தையைக் கூட சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த வழக்கிற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு ஒரு துரும்பைக் கூட இதுவரை ஆதாரமாகக் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் இந்து பழமைவாத அமைப்புக்களுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார் என்பதே இதற்கு மிக முக்கியக் காரணம் ஆகும். இது சமூக நீதிக்கு எதிரானது" என்றார்.