Skip to main content

வருணாசிரம தர்மப்படி நடந்தால் பத்மா சுப்ரமணியன் வீட்டை விட்டு வெளியே வந்திருக்க முடியாது - வே. மதிமாறன் பேச்சு!

Published on 05/05/2020 | Edited on 05/05/2020
ுப



நாடு முழுவதும் கரோனா தொற்று பரவியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பிரபல நடன கலைஞர் பத்மா சுப்ரமணியன்  வருணாசிரம தர்மப்படி தற்போது யாரும் நடந்து கொள்ளாத காரணத்தாலே இந்த மாதிரியான நிகழ்வுகள் நடைபெறுகின்றது என்றும், மதம் மட்டுமே அனைவரையும் காப்பாற்றும் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுத்தாளர் வே. மதிமாறனிடம் கேள்விகளாக நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,


உழைக்கும் மக்களுக்கு மிகவும் கடினமாக இந்த கரோனா காலம் இருக்கின்றது. அனைவருக்கும் இதனால் பாதிப்பு இருக்கிறது என்றாலும் உழைக்கும் மக்களுக்கு  பாதிப்பு அதிகம் இருக்கின்றது. இதனை எப்படி பார்க்கிறீர்கள்? 

தினமும் வேலைக்கு தொழிலாளர்கள் சென்றாலே அவர்களுக்கு மாத வருமானம் என்பது போதுமானதாக இல்லை, இது அனைவருக்கும் பொருந்தும். தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் முதல் தினக்கூலி வரை அனைவருக்கும் இந்த பிரச்சனை இருக்கின்றது. அப்படி இருக்கையில் இந்த ஊரடங்கு அவர்களின் வாழ்க்கையை முழுவதுமாக முடங்கியுள்ளது. ஊரடங்கு ஆரம்பித்த நான்காவது நாளே அவர் ரோட்டில் அலைந்த அவல நிலையை நாம் நேரில் காண்டோம்.  இப்போது மாத சம்பளம் வாங்கியவர்களின் நிலைமையும் தற்போது அதே போன்று உள்ளது. முதல் மாதம் வாங்கிய சம்பளத்தை கொண்டு அடுத்த 40 நாட்களை ஓட்டி இருப்பார்கள். தற்போது அவர்களுக்கும் சம்பளம் இல்லை. அதனால் அவர்களும் வறுமை நிலையில்தான் இருப்பார்கள். இது ஒரு அவலமான சூழ்நிலைதான். 

 

 


இந்த இக்கட்டான நேரத்தில் நடன கலைஞர் பத்மா சுப்ரமணியன் ஒரு கருத்தை தெரிவிக்கிறார். இந்து வருணாசிரம தர்மத்தை கடைபிடிக்க வேண்டியது எவ்வளவு முக்கியமானது என்று அனைவரும் உணர வேண்டியது மிகவும் அவசியம் என்று கூறியுள்ளார். மதங்கள்தான் நம்மை காக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

 


வருணாசிரம தர்மப்படி அனைவரும் இருந்திருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்கள். வருணாசிரம தர்மப்படி முதலில் அவருக்கு நடந்திருந்தால் அவர்கள் நாடுநாடாக சென்று பரத நாட்டியம் ஆடியிருக்க முடியாது. அவர்கள் சொல்லும் வருணாசிரம தர்மப்படி அவர்கள் வீட்டில் அடிமையாகத்தான் இருந்திருக்க முடியும். வீட்டில் இருந்து வெளியே சென்றிருக்க முடியாது. எந்த நாட்டிற்கும் அவர்கள் சென்று நாட்டியம் ஆடி இருக்க முடியாது. பெண்களை அடிமையாகவும், கணவன் இறந்துவிட்டால் அவர்களை கூடவே இணைத்து கொளுத்திவிட வேண்டும் என்று சொல்லும் வருண அமைப்பு முறைதான் அவர்கள் சொல்லும் வருணாசிரம முறை. சின்ன வயது பெண்களை வயதானவர்களுக்கு கட்டிக்கொடுக்கலாம், கணவன் இறந்துவிட்டால் மொட்டை அடித்துக்கொள்ள வேண்டும், அமங்களம் என்று கூறும் அந்த தர்மம் உயர்ந்தது என்று அவர் கூறுகிறார். பெண்களை அபசகுனம், வாழாவெட்டி என்றும் கூறும் முறையை திரும்ப ஆரம்பிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். இதுதான் அவர்கள் சொல்லும் வேதம் கூறுகின்றது. இதை தற்போது அவர் கூறியுள்ளார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.