Skip to main content

"நாங்கள் திருந்த மாட்டோம்... சரக்குதான் எங்களுக்கு எல்லாம்..." - குடிமகன்கள் ஓப்பன் டாக்!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

ர


கரோனா காரணமாக கடந்த நாட்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதிலும் உள்ள மதுபானக் கடைகளை அந்தந்த மாநில அரசுகள் மூடியது. இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிந்து மூன்றாம் கட்ட ஊரடங்கு ஆரம்பித்த நேரத்தில் மத்திய அரசு மாநிலங்களுக்குச் சில தளர்வுகளை அளிந்திருந்தன. அதன்படி சமூக இடைவெளியோடு பாதுகாக்கப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் மதுக்கடைகளைத் திறக்கலாம் என்று தளர்வுகளை வழங்கி இருந்தது. அதன்படி டெல்லி, அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 4- ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.  தமிழகத்தில் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு மதுக்கடைகள் திறப்பு பற்றிய எந்த அறிவிப்புக்களையும் தமிழக அரசு செய்யவில்லை. கர்நாடகத்தில் கடந்த 4- ஆம் தேதி மதுபானக்கடைகள் திறக்கப்பட்டவுடன் தமிழக எல்லையோர மாவட்டங்களில் இருக்கும் சிலர் அங்கு சென்று மது குடித்ததாகச் செய்திகள் வந்தன. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் கடந்த வாரம் வரும்  7- ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறப்பப்படும் என்று மாநில அரசு அறிவித்தது.


எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்தக் கடை திறப்புக்குக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தன. திமுக உள்ளிட்ட கட்சிகள் கருப்புக் கொடி ஏந்தி வீடுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தியது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. நீதிமன்றம் சில வழிக்காட்டு நெறிமுறைகளோடு கடை திறப்புக்கு அனுமதி அளித்தது. இதன் காரணமாகச்  சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டது. ஆனால் முதல் நாளே சமூக இடைவெளி கேள்விக்குறியானது. இதனால் சில இடங்களில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் வந்தது. நீதிமன்ற உத்தரவை முறையாகப் பின்பற்றாத காரணத்தால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. இது ஒருபுறம் என்றால் இந்த இரண்டு நாட்களில் டாஸ்மாக் சரக்கை வாங்க குடிமகன்கள் பட்டபாடு சொல்லி மாளாது. இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று மதுபானத்தை வாங்கிச் சென்றனர். 

இந்நிலையில் நேற்று டாஸ்மாக் கடைகளில் சரக்கை வாங்கி விட்டு வெளியே வந்தவர்களிடம் பேசியபோது பல்வேறு அதிர்ச்சிகரமான செய்திகள் கூறினார்கள். 40 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகளைத் தமிழக அரசு திறந்துள்ளதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நாம் கேள்வி எழுப்பிய போது அவர்கள் கூறிய பதில் நம்மை ஆச்சரியப்படுத்தியது. அவை பின்வருமாறு, "தமிழக அரசு கடை திறக்கப்படும் என்று அறிவித்ததில் இருந்து நாங்கள் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறோம். 40 நாட்கள் கடை திறக்கப்படாமல் இருந்தால் நாங்கள் மதுவை மறந்துவிடுவோம் என்று பலர் நினைத்திருந்தார்கள். 40 நாட்கள் அல்ல 80 நாட்கள் கடை திறக்காமல் இருந்தாலும் நாங்கள் மதுவை மறக்க மாட்டோம். நாங்கள் திருந்தமாட்டோம். நான் சனி, ஞாயிறு மட்டும் தான் குடிப்பேன். அதுவும் இந்த நான்கு வாரங்களாக மது இல்லாமல் ரொம்ப கஷ்டமாக இருந்தது. கை,கால் எல்லாம் ஒரே வலி. இதை ஒரு கப் அடித்தால் அனைத்தும் சரியாவது போல எங்களுக்கு இருக்கின்றது. டாஸ்மாக் கடைகளில் 6 அடி இடைவெளிவிட்டு நிற்கச் சொல்கிறார்கள். அதனால் நாம் எல்லோரும் அதைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்தால் நமக்கு மது தொடர்ந்து கிடைக்கும். இல்லை என்றால் அப்புறம் பூட்டி விடுவார்கள். நிலைமை சிக்கலாகிவிடும்" என்றார் மிகவும் சீரியசாக.