![kanimozhi](http://image.nakkheeran.in/cdn/farfuture/OEjKv4x5JZfV3Hl1PUcPxhlNhHoXAlH-_fjpAfPyt8A/1588398255/sites/default/files/inline-images/606_12.jpg)
கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் முதல்வர் எடப்பாடி, வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வருவதிலும் திடீரென அக்கறை காட்டத் துவங்கியிருக்கிறார். இதற்காக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் அவசரம் அவசரமாக ஒரு குழுவை அமைத்திருக்கிறார் எடப்பாடி. இப்படி அவசரம் அவசரமாக ஒரு குழுவை அமைக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்கின்றன கோட்டை வட்டாரம்!
இது குறித்து தமிழகத் தொழில்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘’உலக அளவில் ஸ்டீல் உற்பத்தியில் போஸ்கோ, ஹூண்டாய், மிட்டல் ஆகிய நிறுவனங்கள்தான் புகழ் பெற்றவை. இதில் போஸ்கோவும் ஹூண்டாயும் சீனாவிலிருந்து வெளியேற தயாராகிவிட்டன. இதனையறிந்து அந்த நிறுவனங்களை ஆந்திராவுக்கு கொண்டுவர ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடம் பேசி வருகிறார். புகழ்ப்பெற்ற அந்த நிறுவனங்கள், ஆந்திராவில் தொழில் துவங்குவதன் மூலம் தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளும் பெருகும் எனக் கணக்கிட்டே இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி.
சம்மந்தப்பட்ட நிறுவனங்களோ, தொழில் துவங்கும் இடம் துறைமுகத்துக்கு 50 கிலோ மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும். அதற்கேற்ப துறைமுகத்துக்கு அருகே குறைந்தபட்சம் 5,000 ஏக்கர் முதல் 10,000 ஏக்கர் வரை நிலம் இருக்க வேண்டும். தொழில் துவங்குவதற்கான அனுமதியளிப்பதில் கால தாமதம் கூடாது என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளைத் தெரிவித்திருக்கின்றன. ஆனால், துறைமுகத்துக்கு 50 கிலோ மீட்டர் அருகாமையில் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்குவதில் ஆந்திர அரசுக்குச் சில சிக்கல்கள் இருக்கின்றன.
இந்தநிலையில்தான், சீனாவிலிருந்து வெளியேறும் அந்தத் தொழில் நிறுவனங்களைத் தனது தூத்துக்குடி தொகுதிக்குள் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் திமுக எம்.பி.கனிமொழி. அதன்படி தனது தொகுதியை ஆய்வு செய்ததில், தூத்துக்குடி துறைமுகத்துக்கு 50 கிலோ மீட்டர் அருகாமையில் 5,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் இருப்பது உள்பட தொழில் நிறுவனங்கள் வைக்கும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் அனைத்து வாய்ப்புகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறார் கனிமொழி.
இதனையடுத்து, சம்மந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் தரப்பில், ’நீங்கள் எதிர்பார்க்கும் வசதிகள் அனைத்தும் தூத்துக்குடி துறைமுகம் அருகில் இருக்கிறது. அதனால் தமிழகத்துக்கு நீங்கள் வர வேண்டும்‘ எனச் சொல்லி சில முயற்சிகளை எடுத்துள்ளார் கனிமொழி. மேலும், இது குறித்து மத்திய அரசின் உதவியையும் கேட்டிருக்கிறார். கனிமொழியின் இந்த முயற்சி எடப்பாடி அரசுக்குத் தெரிந்த நிலையில்தான், ஸ்டீல் நிறுவனங்கள் மட்டுமல்ல; சீனாவிலிருந்து வெளியேறும் பல்வேறு நாடுகளின் தொழில் நிறுவனங்களையும் தமிழகத்துக்கு ஈர்க்க வேண்டும் என முடிவெடுத்து தலைமைச் செயலாளர் தலைமையில் அவசரக் குழு அமைக்கப்பட்டது‘’ என்று பின்னணிகளை விவரிக்கின்றனர் தொழில் துறையினர்.
![http://onelink.to/nknapp](http://image.nakkheeran.in/cdn/farfuture/f2-6VTdahUk7PVCzbD7NULmsVnFxGOu4I_v4Ab8hcRE/1586170537/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)
பிரபல தொழில் நிறுவனங்களைத் தனது தொகுதிக்குள் கொண்டு வர வேண்டுமாயின் மத்திய அரசின் உதவி இல்லாமல் நடக்காது என்பதை உணர்ந்துள்ள கனிமொழி, மத்திய அமைச்சர் பியூஸ்கோயலிடம் பேசி வருகிறார்.