Skip to main content

ஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி! 

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு வரையறை, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகளை சரி செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முன்வந்த மாநில தேர்தல் ஆணையத்தை எதிர்த்து ஏற்கனவே தி.மு.க. தொடர்ந்த வழக்கில், 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த தடை விதித்தும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பஞ்சாயத்துராஜ் சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்தவும் கடந்த 6-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம். அதனையேற்ற எடப்பாடி அரசின் கண் அசைவில் இயங்கும் தேர்தல் ஆணையத்தின் ஆணையர் பழனிசாமி, கடந்த 7-ந்தேதி தேர்தலுக்கான புதிய அறிவிப்பைச் செய்தார். அதில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இரண்டு கட்ட தேர்தல் தேதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மனுதாக்கல், பரிசீலனை, வாபஸ் பெறுதல் உள்ளிட்ட தேதிகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டது.

 

admk



இந்த நிலையில்தான் இதனையும் எதிர்த்து நீதிமன்றப்படிகளில் மீண்டும் ஏறியுள்ளது தி.மு.க.. இது குறித்து மூத்த வழக்கறிஞரும் எம்.பி.யுமான வில்சனிடம் பேசியபோது, "கடந்த 6-ந்தேதி தீர்பளித்த உச்சநீதிமன்றம், பஞ்சாயத்து ரிசர்வேசன் மற்றும் ரொட்டேஷன் விதிகள் 1995, பிரிவு 6-ன் படி விதிகளை கடைப்பிடித்து தேர்தலை நடத்த வேண்டும்'' என உத்தரவிட்டது. ஆனால், இதனை ஒரு பொருட்டாகவே மதிக்காத மாநில தேர்தல் ஆணையம், மீண்டும் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
 

dmk



நிறுத்திவைக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் வார்டு வரையறையை முறையாக பிரிக்கப்பட்ட பிறகே இட ஒதுக்கீட்டின் அளவை சரியாக கணக்கிட முடியும். ஆனால், இதனை செய்யாமல், பெண்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டையும் தாழ்த்தப்பட்டோருக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டையும் எப்படி தீர்மானிக்க முடியும்? 9 மாவட்டங்களில் வார்டு வரையறையை முடித்து 4 மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை செய்து முடித்து ஒட்டுமொத்த கிராம பஞ்சாயத்துகளுக்கும் தேர்தலை நடத்தலாமே? வார்டு வரையறையை கேட்டால், 2016-ல் நடந்த வார்டு வரையறையை காட்டுகிறார்கள். அது எப்படி இந்த தேர்தலுக்குப் பொருந்தும்?

ஏற்கனவே இப்படிப்பட்ட தில்லுமுல்லுகளைத்தான் செய்தார்கள். இப்போதும் பழைய தில்லுமுல்லுகளின்படியே நடத்துகிறார்கள். உச்சநீதிமன்றம் கண்டித்தும் மாநில தேர்தல் ஆணையம் திருந்தவில்லை. இதனை எதிர்த்துதான் மீண்டும் கோர்ட்டுக்கு வந்திருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் நடக்கக்கூடாது என உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு. எடுபிடியாக செயல்படும் ஆணையத்தின் பித்தலாட்டங்களை நீதிமன்றத்தில் அம்பலப்படுத்துவோம். பழனிசாமி அரசும் பழனிசாமி ஆணையமும் இணைந்து நாடகம் ஆடுகின்றன. நீதிமன்றத்தில் நிச்சயம் எங்களுக்கு வெற்றி கிடைக்கும்'' என்கிறார் மிக அழுத்தமாக.

 

dmk



புதிய தேர்தல் தேதியை அறிவித்த ஆணையம், கிராம ஊராட்சிகளுக்கான தேர்தலை டிசம்பர் 27 மற்றும் 30-ந்தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்துகிறது. ஆனால், முதல் கட்டத்தில் எந்தெந்த ஊராட்சிகளிலும், இரண்டாவது கட்டத்தில் எந்தெந்த ஊராட்சிகளிலும் தேர்தல் நடக்கிறது என்கிற பட்டியலை தேர்தல் தேதி அறிவித்த அன்று வெளியிடாமல் ரகசியமாகவே வைத்திருந்தது தேர்தல் ஆணையம். இது குறித்து ஆணையத்தை தொடர்புகொண்டு எதிர்க்கட்சிகள் விசாரித்தபோது, அந்த பட்டியலை தராமல் அடாவடித்தனமாக பதில் தந்திருக்கிறது. அதேசமயம், அ.தி.மு.க. தலைமைக்கும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் மட்டும் அந்த பட்டியலை முன்கூட்டியே அனுப்பி வைத்திருக்கிறார்கள் தேர்தல் அதிகாரிகள். இந்த வில்லங்கம் பிரச்சனையாவதையறிந்து மனு தாக்கல் துவங்கிய 9-ந்தேதி 10 மணிக்கு மேல் அந்த பட்டியலை வெளியிடுகிறது ஆணையம்.


ஆணையத்தின் அடாவடிகள் இப்படி இருக்க, தேர்தலை எதிர்கொள்வது குறித்து தங்கள் கட்சியின் மா.செ.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் ஆலோசனை நடத்தி முடித்திருக்கின்றன. அ.தி.மு.க. தரப்பினர் ஆலோசனை குறித்து விசாரித்தபோது, "ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி, "இங்கு அமைச்சர்களாக இருக்கும் பலரும் மா.செ.க்களாகத்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு நம் வியூகம் தெரியும். அமைச்சர்களை தவிர்த்து மற்றவர்களுக்காக சில விசயங்களை சொல்லவேண்டியதிருக்கிறது. தி.மு.க.வும் ஸ்டாலினும் போடும் கணக்குகள் எதுவும் வொர்க் அவுட் ஆகாது. ஸ்டாலினை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் கவனம் தேர்தலில்தான் இருக்கணும். ஒவ்வொரு வார்டிலும் தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்து போட்டியிட வைக்க வேண்டும். அமைச்சர்கள் உங்களிடம் சில பட்டியல்களை தருவார்கள். அதன்படி வேட்பாளர்களை களமிறக்க வேண்டும்.

கிராம வார்டுகளில் கட்சியோ சின்னமோ இல்லையென்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதற்கேற்ப, நாம் நிறுத்தும் வேட்பாளரையும் அவர் போட்டியிடும் சின்னத்தையும் மக்களிடம் அழுத்தமாக பதிவு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். மேலும், கூட்டணிக் கட்சிகளிடத்தில் சமரசம் ஆகாமல் அவர்களை கையாள வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் பெரும்பான்மை இடங்களில் அ.தி.மு.க. போட்டியிடுகிற மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள் என அட்வைஸ் செய்த எடப்பாடி, "ஏதேனும் ஒரு பிழையை கண்டுபிடித்து கோர்ட்டுக்கு தி.மு.க. போகும். அதில் எப்படிப்பட்ட உத்தரவு வந்தாலும் நமக்கு நல்லதுதான்' என்றிருக்கிறார். அப்போது, "தேர்தல் நடக்குமா? நடக்காதா?' என தென்மாவட்ட மா.செ.க்கள் கேள்வி எழுப்ப, "தேர்தலை நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். மக்களுக்கு பொங்கல் பரிசு அறிவித்ததும் அதற்காகத்தான். அதனால், நம்பிக்கையாக இருங்கள்' என அழுத்தமாக சொன்னார் எடப்பாடி''’ என்கிறார்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட மா.செ.க்கள்.


இதற்கிடையே கூட்டணிக் கட்சிகளிடத்திலும் பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறது அ.தி.மு.க. தலைமை. மாநகராட்சி மேயர் பதவிகளும், நகராட்சி தலைவர் பதவிகளும் இத்தனை இடங்கள் வேண்டுமென எதிர்பார்ப்பில் இருந்த தோழமைக் கட்சிகள், தற்போது அந்த யோசனைகளை விட்டுவிட்டு கிராம ஊராட்சிகளில் கணிசமான இடங்களை கைப்பற்ற துடித்துக்கொண்டிருக்கின்றன.

அ.தி.மு.க.வைப் போலவே மா.செ.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தியது தி.மு.க. மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கு சொந்தமான சென்னை அக்கார்ட் ஹோட்டலில் நடந்த ஆலோசனைக் கூட்டத் தில் பேசிய அனைவருமே, "எடப்பாடியும் தேர்தல் ஆணையரும் இணைந்து தேர்தலை நடத்துவது போல நாடகம் ஆடுகிறார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை உதாசீனப்படுத்துகிறார்கள். கோர்ட் அவமதிப்பு வழக்குப் போட வேண்டும்' என வலியுறுத்தினர். முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, நேரு போன்றவர்கள், தங்கள் மாவட்ட ஊராட்சிகளில் உள்ள வார்டு குளறுபடிகளை பற்றி விவரித்தனர். நீதிமன்ற உத்தரவுகளும் விதிகளும் எப்படியெல்லாம் மீறப்பட்டது என்பதும் கூட்டத்தில் எதிரொலித்தது. குறிப்பாக, வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ அதனை சுட்டிக்காட்டினார். ஜெ.அன் பழகனின் பேச்சுதான் கூட்டத்தை சூடாக்கியது.

இது குறித்து தி.மு.க. மா.செ.க்களிடம் விசாரித்தபோது, ‘ஸ்டாலினிடம் சில கேள்விகளை முன் வைத்தார் அன்பழகன். அதாவது, "சட்டமன்ற தோல்வியை ஆராய கட்சி நிர்வாகிகளுடன் கள ஆய்வை நடத்தினீர்கள். பலரும் புகார் வாசித்தார் கள். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக சொன்ன நீங்கள் எடுக்கவில்லை. இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகும் அதே ரீதியிலான அணுகுமுறைதான். நடவடிக்கை எடுத்தீர்களா? பல பேர் அ.தி.மு.க. தலைமையோடு நெருக்கமாக இருக்கிறார்கள். நம்முடைய கூட்டணியில் இருந்த ஒரு கட்சியின் தலைவரே, முதல்வரை சந்திக்கிறார். ஆலோசிக்கிறார். அப்படின்னா என்ன அர்த்தம்?

"அவர்களையெல்லாம் கூட்டணியிலிருந்து கழட்டி எறியுங்கள்' என காட்டமாக சொல்ல, கூட்டமே அதிர்ச்சியாக ஸ்டாலினை பார்த்தது. அதேசமயம், அன்பழகனின் பேச்சுக்கு எதிர்ப்பும் வந்தது. அப்போது பேசிய நேரு, "கூட்டணிக் கட்சிகளை நாமாக கழட்டிவிடுவதில்லை. அவர்களாகவே கழண்டு போகும் யுக்தியை கலைஞர் கடைப்பிடிப்பார். அது போன்று தலைவர் ஸ்டாலினும் செய்வார்' என சொன்னார். இறுதியாக பேசிய ஸ்டாலின், அன்பழகன் சொன்னதை மனதில் நிறுத்தி, "எடப்பாடியோடு பிஸ்னெஸ் ரீதியாக தொடர்பு வைத்திருப்பவர்கள் இப்போதே தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும்' என எச்சரித்தார் என சுட்டிக்காட்டினார்கள்.

இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீத இட ஒதுக்கீடு மகளிர்க்கு இருப்பதால் தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தை ஹோட்டல் சவேராவில் நடத்திய கனிமொழி எம்.பி., தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதித்தார். இந்தச் சூழலில், விதிகளுக்குப் புறம்பாக நடக்கும் தேர்தலுக்கு தடை கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது தி.மு.க.