
சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தொகுதியில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கான ஆய்வுக் கூட்டம் கீரமங்கலத்தில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் மாவட்ட, வட்டார, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்பி பேசும் போது, “இப்போது தேர்தல் இல்லையே ஏன் பூத் கமிட்டி என்ற கேள்வி எழும். நீங்கள் அடிக்கடி பொதுமக்களை சந்திக்க வேண்டும் என்பதற்காகவும், பொதுமக்களின் கருத்துகளை உங்கள் மூலமாக நான் அறிந்து கொள்ளவும் தான் இந்த கூட்டம். நாளுக்கு நாள் புதுப் புது கட்சிகள் வரும். ஆனால், பாரம்பரிய கட்சி என்பது காங்கிரஸ் கட்சி தான். நம் பிள்ளைகளையும் இந்தக் கட்சியில் சேர்க்க வேண்டும்.
ஒரு முக்கியமான அரசியல் பற்றிப் பேச வேண்டும். தமிழ்நாட்டிற்கு இருமொழிக் கொள்கையே போதும். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் மாநில பாடத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம் இருமொழியில் தான் மெட்ரிக்குலேசனில் படித்தேன். அதே போல தான் என் மகளும் படிக்கிறார். வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வருபவர்கள் வரும்போதே திருக்குறளையும், ஆத்திக்கூடியையும் படிச்சுட்டா வருகிறார்கள். வந்த இடத்தில் தமிழ் கற்றுக்கொள்கிறார்கள். அதே போல் தமிழர்கள் வேலைக்காக வடமாநிலம் போகிறவர்கள் இந்தி கற்றுக் கொள்ளட்டும். அதற்காக இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தியை கட்டாயப்பாடமாக்குவது அவர்களுடைய சூழ்ச்சி. நம்முடைய கலாச்சாரம், மொழியை அழிக்கப் பார்க்கிறார்கள். அப்புறம் என்ன தெரியுமா சொல்வார்கள், ‘தமிழக பள்ளிகளில் இந்தி வாத்தியார் இல்லை. அதனால் உத்தரப்பிரதேசத்தில் இருந்து இந்தி வாத்தியார் அனுப்பி வைக்கிறோம் என்பார்கள். தற்போதே பாருங்கள் ரயில்வே, தபால் அலுவலகம் ஆகிய இடங்களில் மொழி தெரியாதவர் இருப்பது போல நம் பள்ளிகளும் அப்படி ஆகிவிடும். இதுதான் அவர்களுடைய சூழ்ச்சி. எந்தக் காலத்திலும் இருமொழிக் கொள்கை தான் சரி. இதில் தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் எடுத்திருக்கும் நடவடிக்கையை ஆதரிக்கிறேன். நம் கட்சியும் ஆதரிக்கிறது.
எந்த சூழ்நிலையிலும் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளமாட்டேன். தமிழ் மொழியை கலாச்சாரம், அடையாளத்தை பாதுகாத்திட வேண்டும். கிராமங்களில் மக்களிடம் சொல்லுங்கள் தமிழ், ஆங்கிலம் படி, வடமாநிலம் வேலைக்கு போவதாக இருந்தால் இந்த கற்றுக்கொள். ஆனால் எந்தக் காலத்திலும் இந்தி திணிப்பை அனுமதிக்கவிடக் கூடாது. முழுமையாக எதிர்க்க வேண்டும்” என்றார். கார்த்தி சிதம்பரம் எம்.பியின் இந்த பேச்சுக்கு கட்சி நிர்வாகிகள் கரகோசம் எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.