யாருக்காச்சும் பிறந்தநாள் பரிசு கொடுக்கனும்னு இருந்தா பொசுக்குனு எதையாச்சும் வாங்கிப்போய் கொடுக்குறதுதான் பலருக்கு வழக்கமா இருக்கும்.
ஆனால், பரிசு கொடுக்கிறதுக்கு முன்னாடி, அவருக்கு என்னா பிடிக்கும்? அந்த பரிசை அவர் பத்திரப்படுத்துவாரா? அந்த பரிசால் அவருக்கு எந்த விதத்திலேனும் பயன் இருக்குமா? என்றெல்லாம் யோசித்து பரிசு வழங்கும் குணம் ஒரு சிலருக்கே இருக்கும். அப்படிப்பட்ட சாமர்த்தியமான நண்பர்களில் ஒருவர்தான் ஜேம்ஸ் மெக்ஹென்றி. இவர் தனது நண்பரான ஜார்ஜ் வான்டெர்பில்ட்டின் 21 ஆவது பிறந்தநாளுக்கு கொடுத்த பரிசு விலை மதிப்பில்லாதது. 1883 ஆம் ஆண்டு நடந்தது இது.
ரயில் ரோடு பைனான்சியரான மெக்ஹென்றி தனது நண்பருக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா? மாவீரன் நெப்போலியன் கடைசி நாட்களில் பயன்படுத்திய செஸ்போர்டும் டேபிளும்.
இந்த செஸ்போர்டுக்கு ஒரு கதை உண்டு.
1815 ஆம் ஆண்டு நெப்போலியனை இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் கூட்டணி அமைத்து எதிர்த்தன. வாட்டர்லூ என்ற இடத்தில் மிகப்பெரிய யுத்தம் நடைபெற்றது. அந்த யுத்தத்தில் நெப்போலியன் தோல்வியடைந்தார். அதைத்தொடர்ந்து தென்மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியா கடற்கரையிலிருந்து சுமார் 2 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள செயின்ட் ஹெலனா தீவில் அவர் சிறைவைக்கப்பட்டார். அந்தத் தீவு எரிமலைகளும், அடர்ந்த வனங்களும் நிறைந்தது. அங்குதான் நெப்போலியன் சிறை வைக்கப்பட்டிருந்தார். கடற்கரையை ஒட்டிய பகுதியில் தனது குடியிருப்பில் நெப்போலியனின் பெரும்பகுதியான பொழுதுபோக்கு செஸ் விளையாடுவதுதான்.
அவர் விளையாடிய செஸ்போர்டு ஒரு டேபிளில் ஒட்டப்பட்டிருந்தது. வெள்ளை நிறத்திலும், சிவப்பு நிறத்திலும் தந்தத்தால் செய்யப்பட்ட காய்களை அவர் பயன்படுத்தினார். நெப்போலியனின் அனைத்துப் போர் வியூகங்களுக்கும் இந்த செஸ் விளையாட்டுதான் முக்கிய காரணமாக இருந்தது என்று வரலாற்று அறிஞர்கள் கூறுவது வழக்கம்.
புத்தகங்களைப் படிப்பது, தனது வாழ்க்கைக் குறிப்புகளை சொல்லி எழுதச் செய்வது ஆகியவற்றுடன் செஸ் விளையாடுவதை முக்கிய பொழுதுபோக்காக கொண்டிருந்த நெப்போலியன் கடுமையான வயிற்றுப் புற்றுநோய் காரணமாக 1821 ஆம் ஆண்டு இறந்தார். இறப்பதற்கு முன், தனது உடலை பிரேத பரிசோதனை செய்து, நோய்க்கான காரணத்தை அறிய வேண்டும் என்று நெப்போலியன் கேட்டுக்கொண்டிருந்தார். அவருடைய வேண்டுகோள்படி, பிரேதபரிசோதனை செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்டது. அப்போது, அவருடைய இதயத்தை தனியாக எடுத்து ஆல்ஹகால் நிரப்பிய ஒரு குடுவையில் பத்திரப்படுத்தி, அவருடைய செஸ் டேபிள் மீது வைத்தார்கள். பின்னர் அவருடைய உடல் பாரீஸ் கொண்டு செல்லப்பட்டபோது, அவருடைய இதயம் உடலுக்குள் வைக்கப்பட்டது.
பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டபோது உடனிருந்த அண்ட்ரூ டார்லிங் என்பவர் நெப்போலியனின் பொருட்கள் ஏலம் விடப்பட்டபோது செஸ் டேபிளை ஏலம் எடுத்தார். அப்போது ஏலம் விடப்பட்ட நெப்போலியனின் பொருட்கள் பின்னொரு நாளில் ஹாலண்ட் ஹவுஸ் என்ற அருங்காட்சியகத்துக்கு கொண்டு வரப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டன.
மெக்ஹென்றியின் நண்பரான ஜார்ஜுக்கு நெப்போலியன் பயன்படுத்திய பொருட்களை சேகரிப்பது பொழுதுபோக்கு. அவரிடம் நெப்போலியன் பயன்படுத்திய 162 பொருட்கள் இருந்தன. இது மெக்ஹென்றிக்கு தெரியும்.
இந்நிலையில்தான், ஹாலண்ட் ஹவுஸ் மீயூசியத்திற்கு செல்லும் வாய்ப்பு மெக்ஹென்றிக்கு கிடைத்தது. ஏற்கெனவே அந்த மியூசியம் பற்றி கேள்விப்பட்டிருந்த மெக்ஹென்றி, அங்கு நெப்போலியன் பயன்படுத்திய செஸ் டேபிள் இருப்பதை பார்த்தார். அதை தனது நண்பன் ஜார்ஜுக்காக வாங்கிக் கொடுத்தார்.