தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகாராஷ்ட்ராவில் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறார் சிவசேனா கட்சித் தலைவரும் முதல்வருமான உத்தவ் தாக்கரே! முதல்வர் பதவியில் இருப்பவர் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது எம்.எல்.சியாகவோ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு பதவிகளில் ஏதேனும் ஒரு பதவியிலும் இல்லாதவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்திற்குள் இந்த இரண்டு பதவிகளில் ஒரு பதயிலிருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லையெனில் அவரின் முதல்வர் பதவி பறிபோகும்!
அந்த வகையில், கடந்த நவம்பர் 28-ம் தேதி மகாராஷ்ட்ராவின் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட உத்தவ்தாக்கரே, எம்.எல்.ஏ.வாகவோ அல்லது எம்.எல்.சி.யாகவோ இல்லை. இதனால், இதனைப் பயன்படுத்தி உத்தவ்தாக்கரேவின் முதல்வர் பதவியைப் பறிக்க மத்திய மோடி அரசு திட்டமிடுவதாக மகாராஷ்ட்ரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
மே மாதம் 28-ந் தேதிக்குள் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது எம்.எல்.சி. யாகவோ உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், கரோனா தாக்கத்தால் எந்த ஒரு தேர்தலையும் நடத்தும் சூழல் இல்லை. இந்த நிலையில், எம்.எல்.ஏ.சிக்கான 8 இடங்கள் காலியாக இருக்கிறது. இதில், 2 நியமன எம்.எல்.சி.க்களும் அடங்கும். அந்த 2 நியமன எம்.எல்.சி.க்கள் பதவியும் மாநில கவர்னரால் பூர்த்தி செய்யப்படும். அந்த இடங்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.
இந்த நியமன எம்.எல்.சி.க்களில் முதல்வரும் கவர்னரும் இணைந்து ஆரோக்கியமான முடிவை எடுப்பதால், பெரும்பாலும் ஆளும் கட்சியின் சிபாரிசுகளை ஏற்று அந்த நியமன எம்.எல்.சி.க்களுக்கு கவர்னர் ஒப்புதலளிப்பது மரபு. அந்த வகையில், கவர்னால் நியமிக்கப்படும் நியமன எம்.எல்.சி. பதவியில் ஒரு இடத்தில் உத்தவ்தாக்கரேவை நியமிக்க வேண்டும் என சிவசேனா முடிவு செய்தது. அதற்கேற்ப, தாக்கரேவின் அமைச்சரவையில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, ’உத்தவ்தாக்கரேவை எம்.எல்.சி.யாக நியமிக்க வேண்டும்‘ என மகாராஷ்ட்ரா கவர்னர் பகத்சிங்கோஷ்யாரிக்கு சமீபத்தில் பரிந்துரை செய்துள்ளது தாக்கரேயின் அமைச்சரவை. ஆனால், இது குறித்த முடிவை எடுக்காமல் கிடப்பில் வைத்திருக்கிறார் கவர்னர் பகத்சிங்!
’’மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சியைக் கவிழ்த்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்த கூட்டணி ஆட்சியின் முதல்வராகத் தற்போது இருக்கிறார் உத்தவ்தாக்கரே. பாஜக கூட்டணியில் தேர்தலைச் சந்தித்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு தங்களின் எதிரிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியைக் கைப்பற்றி முதல்வராகியுள்ள தாக்கரே மீது, மோடிக்கும் அமீத்ஷாவுக்கும் கோபம் உண்டு. அது நீறுபூத்த நெருப்பாகவே இன்னும் கனன்று கொண்டிருக்கிறது. கவர்னரின் எம்.எல்.சி. நியமனம் மட்டுமே உத்தவ் தாக்கரேயின் முதல்வர் பதவியைத் தற்போதைய நெருக்கடியான சூழலில் பாதுகாக்க முடியும் என்பதால் தாக்கரே மீதிருக்கும் மோடி-அமீத்ஷாவுக்கான கோபம் தான், அமைச்சரவை பரிந்துரையில் எந்த முடிவையும் கவர்னர் எடுக்காமல் கிடப்பில் போட வைத்திருக்கிறது‘’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
தாக்கரேவை நியமிக்க அவரது அமைச்சரவையின் பரிந்துரையில் எந்த முடிவையும் எடுக்காமல் கவர்னர் காலதாமதம் செய்து வருவதால், அவர் மீது கடும் கோபமடைந்துள்ள சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்கள், ‘’தாக்கரேவுக்கு எதிராக அரசியல் சதி நடக்கிறது. அதில் கவர்னர் சிக்கக்கூடாது‘’ எனக் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில், தன்னை முதல்வர் பதவியிலிருந்து அகற்ற சதி செய்வது யார்? பாஜகவா? அல்லது கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத்பவாரா? என்கிற கேள்விகள் உத்தவ் தாக்கரேவை குடைந்து வருவதாகவும் அரசியல் விமர்சகர்களிடம் ஒரு கருத்து எதிரொலிக்கிறது. இதற்கிடையே, கவர்னரை வலியுறுத்தும் முயற்சியை சிவசேன தலைவர்கள் தொடர்ந்தபடி இருக்க, நியமன எம்.எல்.சி. விவகாரத்தில் டெல்லியின் முடிவுக்காகக் காத்திருக்கிறாராம் கவர்னர்.