Skip to main content

டெல்லி குளிரை உங்களால் தாங்க முடியாது! பொடி வைத்துப் பேசிய அமித்ஷா! கண்டுகொள்ளாத மோடி! எடப்பாடியின் டெல்லி விசிட்! 

Published on 25/01/2021 | Edited on 25/01/2021
dddd

அ.தி.மு.க.வுடனான பா.ஜ.க. கூட்டணியை இறுதி செய்வது, தமிழக அரசின் திட்டங்களுக்கான நிதி உதவியை பெறுவது எனும் இரண்டு அம்ச திட்டத்துடன் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க, அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தமிழக அரசின் உயரதிகாரிகள் சகிதம் 18-ந்தேதி டெல்லிக்கு விசிட் அடித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு, கே.பி.முனுசாமி எம்.பி. தலைமையில் டெல்லி ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு இல்லத்திற்கு வரும் போதும் பலமான வரவேற்பு. சந்திப்புகளுக்குப் பிறகு எடப்பாடி அளித்த பேட்டியில் உறுதியான தொனி இருந்தாலும் உற்சாகம் மிஸ்ஸிங்.
 

மோடி மற்றும் அமித்ஷாவுடனான எடப்பாடி சந்திப்பில் நடந்தவைகள் குறித்து டெல்லி சோர்ஸ்களிடம் விசாரித்தபோது, ’’அமித்ஷாவிடம், "டெல்லியில் குளிர் அதிகம்' என எடப்பாடி சொல்ல, "டெல்லி குளிரை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதுதான்' என அமித்ஷா பொடி வைத்துப் பேசினார்.

அசட்டுச் சிரிப்புடன் அதனை எதிர்கொண்ட எடப்பாடி, "அ.தி.மு.க.தான் கூட்டணியில் மேஜர் பார்ட்னர்' என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவியும், துக்ளக் விழாவில் "முதல்வர் எடப்பாடி ஆளுமை மிக்கவர்' என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் சொன்னதற்கு அமித்ஷாவிடம் நன்றிசொன்ன எடப்பாடி, தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியபோது, அமித்ஷா ரியாக்ஷன் அத்தனை உற்சாகமா இல்லை.

"இங்கே பா.ஜ.க. கூட்டணி பற்றி பேசி விட்டு, உங்கள் கட்சி யினரிடம், அதிமுகவை விட்டால் பா.ஜ.க.வுக்கு வேறு வழியில்லை என நீங்கள் பேசுகிறீர்கள்' என கோபப்படாமல் அமித்ஷா சொல்ல, அதற்கு எடப்பாடி மறுப்பு தெரிவித்தபோதும், அமித்ஷா ஏற்காமல் அடுத்த விசயத்துக்கு சென்றுள்ளார். தமிழகத்தில் தி.மு.க.வுக்கு சாதகமாக அரசியல் சூழல் இருப்பது பற்றி அமித்ஷா சொன்னபோது, "அது தி.மு.க ஆதரவு தரப்பிலிருந்து உருவாக்கப்படும் கருத்து' என்றும், "அ.தி.மு.கவுக்கு எதிராக எந்த அலையும் இல்லை என்றும், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியால் தி.மு.க.வை எளிதாக தோற்கடிக்க முடியும்' எனவும் சொல்லியிருக்கிறார் எடப்பாடி.

 

சீட் ஷேரிங் குறித்த பேச்சின்போது, "180 இடங்கள் அ.தி.மு.க.வும், மீதமுள்ள 54 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கும்' என எடப்பாடி சொன்னதை ஏற்காத அமித்ஷா, நாடாளுமன்ற தேர்தலில் உருவான கூட்டணி அப்படியே தொடர்வதாக இருந்தால் "பாஜகவுக்கு 45 இடங்கள் வேண்டும். இதில் 30 தொகுதிகள் நாங்கள் கேட்பதும் , மீதியுள்ள 15 தொகுதிகள் உங்கள் விருப்பப்படியும் இருக்கவேண்டும். அதேசமயம், இந்த கூட்டணி இல்லாமல் அ.தி.மு.க.-பா.ஜ.க. மட்டுமே கூட்டணியில் இருந்தால் பா.ஜ.க.வுக்கு 100; அ.தி.மு.க.வுக்கு 134' என்கிற கணக்கை சொல்லியிருக்கிறார் (சென்னைக்கு அமித்ஷா வந்தபோது சொன்ன அதே கணக்கு). இதற்கு எடப்பாடி தரப்பில் சொன்ன எந்த விளக்கமும் ஏற்கப்படவில்லை.

அ.தி.மு.கவின் வாக்குகள் சிதறாமல் இருக்க, பிரிந்து சென்றவர்களை (சசி, தினகரன்) சேர்க்க வேண்டும் என அமித்ஷா வலியுறுத்த, அ.ம.மு.க.விலிருந்து 99% பேர் அ.தி.மு.கவுக்கு திரும்பிட்டாங்க. சசிகலா, தினகரனைத் தவிர யார் வந்தாலும் சேர்த்துக்கலாம். செல்வாக்கு இல்லாத அவங்களை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பது டெல்லிக்கும் தலைவலிதான். அ.தி.மு.க ஜெயிக்க இரட்டை இலை போதும் என அழுத்தமாக விவரித்திருக்கிறார் எடப்பாடி.

 

சந்திப்பின் முடிவில், முதல்வர் வேட்பாளர் பற்றி எடப்பாடி மீண்டும் நினைவுப்படுத்திய போதும், பிரதமரிடம் விவாதிக்கிறேன் என மட்டும் சொல்லி எடப்பாடியை அனுப்பி வைத்து விட்டார் அமீத்ஷா. பிரதமருடனான முதல்வரின் சந்திப்பில் 12 கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. அதனை முதன்மைச் செயலாளர் மிஸ்ராவிடம் கொடுத்துவிட்டார் பிரதமர். ஜி.எஸ்.டி.யில் தமிழக அரசுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை 19,500 கோடியை விரைந்து ரிலீஸ் செய்ய வேண்டும் ; கடன் வாங்கும் அளவினை அதிகரித்துத் தர வேண்டும் என்பதை விவரிக்க, ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையில் என்ன இயலுமோ அதனை கவனிக்கச் சொல்கிறேன் என்றிருக்கிறார் பிரதமர் மோடி.

அரசியல் ரீதியான பேச்சை எடப்பாடி எடுத்தபோது, நேற்றே ஹோம் மினிஸ்டர் (அமித்ஷா) எல்லாத்தையும் என்னிடம் சொல்லிட்டார் என முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரதமர்.
 
டெல்லி பயணத்தில், கூட்டணியை இறுதி செய்வது மற்றும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தன்னை ஏற்க வைப்பது என்கிற அஜெண்டாவுடன் வந்திருந்தார் எடப்பாடி. அழுத்தமாக அவர் அதைச் சொன்னபோதும், அமித்ஷா எந்த உத்தரவாதமும் தரவில்லை’ என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள் பா.ஜ.க.வின் மேலிட தொடர்பாளர்கள்.

எடப்பாடிக்கு நெருக்கமான அ.தி.மு.க. சீனியர் எம்.பி. ஒருவரிடம் நாம் பேசிய போது, ‘’கூட்டணியை இறுதி செய்யலாம் என பா.ஜ.க. தலைமை முடிவு செய்திருந்தால் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் டெல்லிக்கு அழைத்திருப்பார் அமித்ஷா. ஓ.பி.எஸ்.சை தனி ஆவர்த்தனம் செய்யுமாறு அவரை தூண்டிவிடுவதே பா.ஜ.க.தான். ஆனால், முதல்வர் வேட்பாளராக தன்னை பாஜக தலைமை ஏற்கும் வகையிலான சில செயல் திட்டங்களுக்கு வெவ்வேறு ரூட்டில் விதை ஊன்றி விட்டே டெல்லியிலிருந்து கிளம்பினார் எடப்பாடி‘’ என்கிறார் மிக உறுதியாக.

உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, ’’""தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. கூட்டணியை வலிமைப்படுத்துவதில் குறியாக இருக்கின்றனர் பா.ஜ.க. தலைவர்கள். இந்த மாதத்தின் துவக்கத்தில் டெல்லி வந்த தினகரனிடம் பா.ஜ.க. மேலிடம் விரிவாகப் பேசியுள்ளது. அ.தி.மு.க.-அ.ம.மு.க. இணைப்பின் அவசியம், சசிகலா விடுதலை, சொத்துகளை முடக்குவது நிறுத்தம், கட்சித் தலைமை சசிகலா வசம், எம்.எல்.ஏ. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப் பட்டவர்களுக்கு தேர்தலில் மீண்டும் சீட் உள்ளிட்டவை தினகரனால் வலியுறுத்தப்பட்டுள்ளது. எடப்பாடியிடம் அமித்ஷா இது பற்றி பேசியதன் பின்னணியும் இதுதான்.


டெல்லி பா.ஜ.கவைப் பொறுத்த வரை, ஓ.பி.எஸ். அல்லது செங்கோட்டையன் ஆகிய இருவரில் ஒருவ ரைத்தான் ஆட்சி தலைமைக்கு கொண்டுவர நினைக்கிறது. இந்த நிலையில், சசிகலா வெளியே வந்ததும், அ.தி. மு.க.வில் உருவாகும் சாதக - பாதகங்களை வைத்தே இறுதி முடிவை எடுக்க தீர்மானித் துள்ளது பா.ஜ.க. தலைமை'' என்கின்றனர் உளவுத்துறையினர்.

ஜெயலலிதா நினைவிடத்தை வரும் 27-ந்தேதி திறக்க முடிவு செய்துள்ள எடப்பாடி, பா.ஜ.க.வின் எதிர்பார்ப்புகளை விவரித்து இறுதி முடிவெடுக்க அ.தி.மு.க.வின் மா.செ.க்கள் கூட்டத்தை கடந்த 22ஆம் தேதி கூட்டி விவாதித்திருக்கிறார்.