சேலம் மாநகராட்சியில் ஊருக்கு நடுவே நுண்ணுயிரி உரக்கிடங்கு திறக்கப்பட்டதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், இப்போது பள்ளிக்கூடத்தை மூடி உரக்கிடங்கைத் திறக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாநகராட்சி 91.35 சதுர கி.மீ., பரப்பளவு உடையது. பத்து லட்சம் பேர் மக்கள் தொகையும், ஒன்றரை லட்சம் கட்டடங்களும் இருக்கின்றன. நாள்தோறும் சராசரியாக 400 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகின்றன. கடந்த திமுக ஆட்சியின்போது மாநகராட்சி எல்லைக்கு வெளியே செட்டிச்சாவடியில், 100 ஏக்கர் பரப்பளவில் குப்பைகள் கொட்டவும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்காகவும் இடம் ஒதுக்கப்பட்டது.
ஆனால், 2014ம் ஆண்டில் ஏற்பட்ட தீவிபத்தில், அங்கு செயல்பட்டு வந்த திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு சாம்பலானது. இந்த தீவிபத்தே கூட ஆளும் அதிமுக தரப்பினரே கமிஷனுக்காக செய்த சதி திட்டம்தான் என்ற பேச்சும் அப்போது எழுந்து அடங்கியது.
இந்த நிலையில்தான், சேலம் மாநகராட்சி பொலிவுறு நகரமாகும் (ஸ்மார்ட் சிட்டி) பட்டியலில் இணைக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக, நாள்தோறும் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் எனத் தரம் பிரித்து, காய்கறிக் கழிவுகள், இலைதழைகள் போன்ற மக்கும் குப்பைகளில் இருந்து நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
உண்மையில், நுண்ணுயிரி உரத்தயாரிப்புத் திட்டம் வரவேற்கக்கூடியதுதான். என்றாலும், இத்திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா இடங்களுமே கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. டிவிஎஸ் சுடுகாடு சாலையிலும், ஜான்சன்பேட்டையிலும் ஊருக்கு நடுவே அமைக்கப்பட்ட உரத்தயாரிப்பு கூடத்தால் ஈக்கள், கொசுக்கள் மற்றும் துர்நாற்றத்தால் தொற்றுநோய்கள் பரவுவதாகவும், குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலம் கெட்டுப்போவதாகவும் புகார்கள் எழுந்தன. இவற்றை எதிர்த்து மக்களும் கடந்த சில மாதங்களுக்கு முன் சாலை மறியலும் நடத்தினர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், வழக்கம்போல் காவல்துறையினரைக் கொண்டு, மக்கள் போராட்டங்களை அடக்கி ஒடுக்கிவிட்டனர். ஆனாலும், மாநகராட்சி உரக்கிடங்குகளுக்கு இப்போது வரை எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, 15வது கோட்டத்திற்கு உட்பட்ட ராம் நகரில், முன்பு மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. அந்தப்பள்ளியில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்ததால், இப்போது அந்தப்பள்ளிக்கூட கட்டடத்தை இடித்துவிட்டு, நுண்ணுயிரி உரத்தயாரிப்புக் கூடம் கட்டும் வேலைகளில் சேலம் மாநகராட்சி இறங்கி உள்ளது. இதுவும் ராம் நகர் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதே வளாகத்தில்தான் குப்பை லாரிகள், பழுந்தடைந்த கனரக வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த வளாகத்தின் இன்னொரு பகுதியில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருவது ஆகப்பெரும் வேடிக்கை.
குப்பை வண்டிகள் நிறுத்தும் இடமாக மாறியதாலும், உரக்கிடங்கு வருவதாலும், இந்த வளாகத்திற்கு அருகில் இயங்கி வரும் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அடியோடு சரிந்து விட்டது. நடப்பு ஆண்டில், கடந்த ஆகஸ்ட் வரை 15 குழந்தைகள் படித்து வந்த நிலையில், சுகாதாரச் சீர்கேடு காரணமாக 5 குழந்தைகள் இப்பள்ளியை விட்டு பாதியிலேயே வெளியேறியுள்ளனர்.
இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலரும், பாஜகவின் முன்னாள் கிளைத்தலைவருமான தாதை சிவராமன் நம்மிடம் பேசினார்.
''நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் கிடங்குகளை ஊருக்கு வெளியிலோ அல்லது சுடுகாட்டுப் பகுதியிலோதான் அமைக்க வேண்டும். இப்படி ஊருக்கு நடுவே அமைப்பதால் துர்நாற்றம் வீசுவது ஒருபக்கம் இருந்தாலும், கொசுக்கள், ஈக்களால் குழந்தைகள், முதியவர்களுக்கு சுவாசக் கோளாறுகள், நுரையீரல் தொற்று, வயிற்றுப்போக்கு, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.
இப்படி எல்லாம் செயல்பட சேலம் மாநகராட்சிக்கு யார் யோசனை சொல்கிறார்களோ தெரியவில்லை. அரசியல் கட்சிகளும் இதை தட்டிக்கேட்காமல் மவுனம் சாதி க்கின்றன. இந்த வளாகத்திற்கு வெளியே செயல்படும் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் பத்து குழந்தைகள் மட்டுமே படிக்கின்றனர். இதுபோன்ற சுகாதாரமற்ற சூழல் காரணமாக பெற்றோர்கள், இந்தப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முன்வருவதில்லை. இந்தப்பள்ளியில் முதல் மற்றும் 3ம் வகுப்பில் தலா ஒரு குழந்தையும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் தலா 2 குழந்தைகளும், இரண்டாம் வகுப்பில் மட்டும் அதிகபட்சமாக 4 குழந்தைகளும் என மொத்தமே 10 குழந்தைகள்தான் படிக்கின்றனர்.
இதேநிலை நீடித்தால், அடுத்த ஆண்டில் இந்தப்பள்ளியையும் மூடி, அங்கேயும் உரத்தொழிற்சாலை கட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. 15வது கோட்டத்திற்கென்று, மாநகராட்சி சார்பில் இந்த ஒரு பள்ளி மட்டுமே செயல்படுகிறது. 1896ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியும் குப்பை வண்டிகள், உரக்கிடங்கால் மூடப்படும் அபாயத்தில் இருக்கிறது. இதையும் மூடிவிட்டால் அடித்தட்டு மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதே கனவாகி விடும். உடனடியாக ராம் நகரில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த இடத்தில் உரக்கிடங்கு அமைக்கப்படுவதை கைவிட வேண்டும். இங்குள்ள குப்பை வண்டிகளையும் அப்புறப்படுத்த வேண்டும்,'' என்றார்.
குப்பை வண்டிகள் நிறுத்தப்படுவதாலும், வளாகம் முழுவதும் புதர்ச்செடிகள் மண்டிக்கிடப்பதாலும் அடிக்கடி பாம்பு, தேள் உள்ளிட்ட ஜந்துக்கள் பள்ளிக்குள் நுழைந்து விடுவதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர். குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானது குறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்ற பிறகுதான், திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் தனது தொகுதி நிதியில் இருந்து ராம் நகர் துவக்கப்பள்ளிக்கு பாதுகாப்பு சுவர் கட்டிக்கொடுத்துள்ளார். அதில் தனது முயற்சியும் அடங்கி இருப்பதாகச் சொன்னார் தாதை சிவராமன்.
ராம்நகரைச் சேர்ந்த குடும்பத்தலைவி சத்யா, ''என் கணவர் தையல் வேலைக்குச் செல்கிறார். நான் வீட்டு வேலை செய்து வருகிறேன். என் வசதிக்கு இந்த மாநகராட்சி துவக்கப்பள்ளியில்தான் என் குழந்தையைப் படிக்க வைக்க முடியும். ஆனால், இப்போது பக்கத்து வளாகத்தில் உரக்கிடங்கு கட்டப்படுவதாகச் சொல்கிறார்கள். ஏற்கனவே குப்பை வண்டிகளால் துர்நாற்றம் வீசுகிறது.
அதனால்தான் பலர் இங்கிருந்து குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க அழைத்துச் சென்றுவிட்டனர். இன்னும் உரக்கிடங்கெல்லாம் வந்தால் இந்தப்பள்ளியில் இப்போதுள்ள பத்து குழந்தைகள்கூட படிக்க வர மாட்டார்கள். இங்கு உரக்கிடங்கு வரக்கூடாது என்று பொதுமக்கள் தரப்பில் கலெக்டரிடம் புகார் அளித்திருக்கிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,'' என்றார்.
சேலம் மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''பரந்து விரிந்து கிடக்கும் செட்டிச்சாவடி அருகே உரக்கிடங்கு தயாரிக்கலாம் என்ற திட்டமும் பரிந்துரை செய்தோம். ஆளுங்கட்சியினர் எங்கே விடுகிறார்கள்? அவர்கள் எடுக்கும் முடிவுப்படிதான் எல்லாம் நடக்கிறது. ஆட்சியில் இருப்பவர்களை மீறி அதிகாரிகளால் என்ன செய்துவிட முடியும்? மேற்கொண்டு இதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை,'' என்று பட்டும் படாமலும் முடித்துக்கொண்டார்.
இருப்பதையாவது காப்பாற்ற வேண்டாமா என்ற பரிதவிப்பில் சாமானியர்களும், யார் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன... நம் கடன் கல்லா கட்டுவதே என்ற சர்வாதிகாரப் போக்கில் ஆளும் அதிமுகவும், சேலம் மாநகராட்சியும் கைகோத்து செயல்பட்டு வருகிறது.