பாலில் தங்கம் இருப்பதாக சில தினங்களுக்கு முன் மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜக தலைவர் திலீப் கோஷ் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் சில சர்ச்சையான கருத்துக்கள் சிலவற்றையும் அவர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மனநல மருத்துவர் ஷாலினியிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். இதோ அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜக தலைவர் திலீப் கோஷ் என்பவர் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் ஏன் நாய் கறி சாப்பிட வேண்டிய தானே? என்று சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நீங்களும் கருத்து தெரிவித்திருந்தீர்கள். அவரின் இந்த கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
நிச்சயமாக அவர்கள் சொல்வதை அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது. உயிர்கள் மீது பற்று இருப்பவர்களாக தங்களை வெளிகாட்டி கொள்பவர்கள் எல்லா உயிரினங்களையும் அப்படிதான் நினைக்க வேண்டும். ஆனால், மாட்டை உயர்வாகவும், நாயை தரம் குறைந்ததாக அவர்கள் பிரித்து பார்ப்பதை நாம் எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு உணவுப்பழக்க வழக்கங்கள் இருக்கிறது. அதன்படிதான் அவைகளின் செயல்பாடுகள் இருக்கும். வாழ்க்கை முறைகள் அமைந்திருக்கும். புலி, மானை தான் வேட்டையாடி சாப்பிடும். புலி சிங்கத்தை வேட்டையாடி சாப்பிடாது. ஒரு மாமிச பட்சி மற்றொரு மாமிச பட்சியை சாப்பிடுவது மிகக்குறைவு. இதற்கான ஆய்வு கூட செய்திருக்கிறார்கள். ஒருவர் காட்டிற்கு சென்று அங்குள்ள மாமிச பட்சியின் உடலை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டுவிட்டு மீண்டும் நகரத்திற்கு வந்துள்ளார். ஆனால், சில நாட்களிலேயே அவர் மரணமடைந்தார். அவர் மரணத்திற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்த போது, அவர் உடலில் வைட்டமின்கள் அளவு அளவுக்கு மிஞ்சிய நிலையில் இருந்ததே காரணம் என்று கண்டுப்பிடித்துள்ளார்கள். ஆக, மனித இனம் ஏற்றுக்கொள்ளும் வகையில், அவர்களின் உடலை பாதிக்காத உணவு வகைகளையே மனிதன் சாப்பிட வேண்டும்.
ஆனால், மேலை நாடுகளில் ஒன்றான சீனா போன்ற நாடுகளில் நாய், பூனை, பல்லி போன்ற உணவுகளை சாப்பிடுகிறார்களே?
அதற்கான காரணம் வேறு. அந்த நாடுகளில் அந்த காலகட்டங்களில் பசி பஞ்சம் உச்சத்தில் இருந்தது. ஆகையால் எந்த உணவு கிடைத்தாலும் போது என்ற மனநிலையில் அவர்கள் சாப்பிட்டார்கள். ஆகையால், இதுதான் அவர்களின் உணவு பழக்க வழக்கங்களுக்கான உண்மையான காரணம்.
அதே பாஜக தலைவர் பாலில் தங்கம் இருப்பாதாக கூறியிருப்பதை பற்றி உங்களின் கருத்து என்ன?
பாலில் தங்கம் இருப்பதாக ஒருவர் கூறுகிறார் என்றால் அவர் எவ்வளவு அறிவானவராக இருப்பார் என்பது நமக்கு புரிய வரும். பால் மஞ்சள் நிறமாக இருப்பதற்கு அதில் உள்ள அதிகப்படியான கொழுப்புதான் காரணம். அதைவிட அதிகமாக மனித பால் மஞ்சள் நிறமாக இருக்கும். ஆகையால் இது முட்டாள் தனமான வாதமாகவே இதனை பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.