சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் மதுவந்தி, சில தினங்களுக்கு முன்பு சில தவறான தகவல்களைப் பத்திரிகைகளில் வந்ததாகக் கூறி பேசி இருந்தார். அதுபற்றி விமர்சனங்கள் எழுந்த நிலையில், தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக மனநல மருத்துவர் ஷாலினி அவர்களிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,

"மதுவந்தி பேசுவதை ஒருபொருட்டாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை, அவர் ஃபேம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகப் பேசுகிறார், அவரைப் புறக்கணித்துவிட்டுச் செல்ல வேண்டும்" என்று முகப்புத்தகத்தில் கூறியிருக்கிறீர்கள். அவர் இதற்கு முன்பு பேசி சர்ச்சையான சில விஷயங்கள் குறித்து ஏற்கனவே இதுகுறித்து நாம் பேசி இருக்கிறோம். இருந்தாலும் அவர் பேசுவது தொடர்ந்து வைரலாகிறது. அவர்களைப் பற்றி தொடர்ந்து மக்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மதுவந்தி சாதாரண ஒரு பெண் என்றால் அவர் பேசுவதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏதோ ஒரு பெண் பேசுகிறார் என்று எடுத்துக்கொண்டு போய்விடலாம். அவர்கள் இரண்டு தளங்களில் இருந்து இதைப் பேசுகிறார்கள். ஒன்று ஒய்.ஜி மதுவந்தி என்ற தளத்தில் இருந்து பேசுகிறார். அதில் பெரிய சோஷியல் கேப்பிட்டல் இருக்கிறது. அவர்கள் இங்கு ஏதோ செய்திருக்கிறார்கள் என்ற நினைப்பில் அவர் தொடர்ந்து இவ்வாறு பேசுகிறார். அவர்கள் கூறுவது யாருக்காவது பயனளிக்கும் வகையில் இருந்தால். அதை ஏற்றுக்கொள்ளலாம், அவர்கள் ஒரு லீடர்ஷிப் தன்மைக்கு தகுதியானவர் என்று நம்பலாம். ஆனால் அவர் கூறுவது எல்லாம் நான் அதனை நம்புகிறேன், நீங்கள் நம்பினால் நம்புங்கள் என்று கூறுவதைப் போன்று இருக்கிறது. அதனால் இவர்கள் தேவையில்லாத விஷயங்களை பற்றி பேசி பிரபலம் அடைய பார்க்கிறார்கள். அதைத்தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம்.மற்றொன்று அரசியல் தளம். இவரைப் போன்ற குழப்பவாதிகளைக் கட்சியில் வைத்திருப்பதனால் அந்தக் கட்சிக்கு காலமெல்லாம் பிரச்சனைகள்தான் வந்து சேரும்.

நான் எவ்வளவோ நல்ல விஷயங்களை எல்லாம் சொல்லி இருக்கிறேன். நீங்கள் அதைப் பற்றி எல்லாம் பேசவில்லை. நான் தவறாக ஒரு விஷயத்தைக் கூறியதை மட்டும் எதற்காகத் தொடர்ந்து பேசுகிறீர்கள் என்று அவர் கேட்கிறாரே?
அவர் வாய் தவறி பேசிவிட்டார் என்றால் அதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை. ஆனால் அவர் தவறாகப் பேசி விட்டேன் என்று கூறிவிட்டு, அவர்கள் தவறாகப் பேசவில்லையா? இவர்கள் தவறாகப் பேசவில்லையா? என்று கேட்கிறார். அப்படி இவர் சொல்பவர்கள் எல்லாம் எந்தத் தவறான தகவலையும் கூறவில்லை. தன் தவறை ஒப்புக்கொள்ளாமல் அடுத்தவர்களைக் குறை சொல்வதுதான் மன்னிப்பு கேட்பதன் லட்சணமா? அவர்கள் அடுக்கடுக்கான தவறான தகவலைத் தொடர்ந்து பேசி வருகிறார்கள், இந்தக் கருப்புச் சட்டைகாரர்கள் என்று பேசுகிறார்.
ஒரு தவறை அவருக்குச் சொல்லிக் கொடுத்தால் மீண்டும் வேறொரு தவறை அவர் செய்கிறார். ஒரு பத்து நாட்களுக்கு இங்கே வந்தால் அவர்களுக்கு அனைத்தையும் சொல்லிகொடுத்து அனுப்ப வேண்டும் போல. முழு அறியாமையில் அவர் இருக்கிறார். வெயிலில் அழியாத கரோனா விளக்கேற்றினால் அழிந்துவிடுமா என்று தெரியவில்லை. ஒரு கட்சியில் சேர்ந்திருப்பவர் அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொண்டு பேச வேண்டும். எதுவுமே தெரியாமல் பேசுவது எப்படிச் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை.