கடந்த 12-ஆம் தேதி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், ஜாமின் எடுப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கலால் மதுரை மத்திய சிறையிலிருந்து நிர்மலாதேவி வெளிவராத நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இன்று (20-3-2019) அவர் ஆஜராக வேண்டியிருந்தது.
நேற்றே, ஜாமின்தாரர்கள் அளித்த பிணைய சொத்துப் பத்திரங்களை விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், சிறையிலிருந்து நிர்மலாதேவியை விடுவிப்பதற்கான காரியங்கள் விறுவிறுவென்று நடந்தன. அதனால், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் காவலை நீட்டிக்க வேண்டிய அவசியம் எழவில்லை. அதேநேரத்தில், அவரால் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலும் ஆஜராக முடியவில்லை.
நிர்மலாதேவிக்காக, செக்ஷன் 317-ன் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாத தவறு வேண்டுமென்றே ஏற்பட்டதல்ல. எனவே, நேரில் ஆஜராகாத தவறை மன்னித்து, வேறு ஒரு தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று நிர்மலாதேவி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் அம்மனுவை ஏற்றுக்கொண்டு, வழக்கை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஏற்கனவே ஜாமினில் வெளிவந்திருக்கும் உதவிப் பேராசிரியர் முருகனும், ஆய்வு மாணவர் கருப்பசாமியும் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். மொத்த குடும்பத்தினரையும் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்திருந்தார், முருகன். ஏதோ, பிக்னிக் ஸ்பாட்டுக்கு வந்ததுபோல், முருகனின் குடும்பத்தினர் கோர்ட் வளாகத்தில் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். கோர்ட் படியில் அமர்ந்து குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டனர். வழக்கை 27-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டதும், நடை சாத்துவதற்குள் சென்றுவிட வேண்டும் என்று முருகனின் குடும்பம் அவசர, அவசரமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குக் கிளம்பியது. கருப்பசாமி ‘தனி ஒருவன்’ ஆக வந்திருந்தார். அவர் முருகன் குடும்பத்தினர் இருந்த பக்கம் தலைகாட்டவே இல்லை.
வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நிர்மலாதேவியின் காவலை நீடிக்க ஆரம்பித்ததுமே, செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு வருவதை நிறுத்திவிட்டனர். இன்றும், அதே நிலைதான். அதனால், முருகனும் கருப்பசாமியும் “என்ன சார் நக்கீரன் மட்டும்தான் வந்திருக்கீங்க?” என்று கேட்டனர்.
இதே நேரத்தில், நிர்மலாதேவியை மதுரை மத்திய சிறையிலிருந்து விடுவித்தனர். அவரை அருகில் வைத்துக்கொண்டு, பேட்டி அளித்தார் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன். “கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி அரசியல் பின்னணி காரணமாக கைது செய்யப்பட்டு, இன்று சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்திருக்கிறார். நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அவர் பத்திரிகையாளர்களைச் சந்திக்க மாட்டார். அவருடைய வழக்கறிஞர் என்ற முறையில் நான் பேசுகிறேன். நிர்மலாதேவி கைது செய்யப்பட்டவுடன் 24 மணி நேரத்தில் கவர்னர் பேட்டி கொடுத்தார். சந்தானம் கமிட்டியையும் உடனே அமைத்தார். இன்றைக்கு உலகையே உலுக்கும் அளவுக்கு பொள்ளாச்சியில் கொடூர சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
தமிழகத்தில் கவர்னர் இருக்கிறாரா? இல்லையா என்றே தெரியவில்லை. இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். நிர்மலாதேவி வழக்கில் உள்நோக்கம் இருக்கிறது. அரசியல் சதி இருக்கிறது. சிறையிலிருந்து வெளியில் வந்துவிடக்கூடாது என்று அரசியல் தலையீடு இருந்தது. ஜாமின் கிடைத்தபிறகும், நிர்மலாதேவி வெளியில் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தோடு, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இடையூறுகள் செய்தனர். இது பொய் வழக்கென்று நீதிமன்றத்தில் நிரூபிப்போம். நிச்சயம் அவர் விடுதலை ஆவார்.” என்று கூற, மவுன சாட்சியாக நின்றுகொண்டிருந்த நிர்மலாதேவி, கிளம்பும்போது செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பக்கம் திரும்பி கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.
ஜாமினில் விடுதலையானாலும், தான் இனி சந்திக்கப்போகும் வெளிஉலகம் குறித்த கவலை நிர்மலாதேவியின் முகத்தில் அப்பியிருந்தது.