Skip to main content

தொகுதியை அறிவோம் - வேலூர் பாராளுமன்ற தொகுதி

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

 


வேலூர் நாடாளுமன்ற தொகுதி என்பது வேலூர், அணைக்கட்டு, கீழவைத்தான்குப்பம் என்கிற கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), ஆம்பூர், வாணியம்பாடி என 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் வேலூர், அணைக்கட்டு என இரண்டு தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. மீதியுள்ள நான்கு தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. அதில் தற்போது, ஆம்பூர், குடியாத்தம் (தனி) என இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளது.


2019 தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வாக்காளிக்கப்போகும் வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலையில் 14,07,817 பேர் உள்ளனர். 2014 தேர்தலின்போது, இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 12,80,415. ஆண்களை விட பெண்கள் 10 ஆயிரம் பேர் கடந்த தேர்தலில் அதிகமாக இருந்தனர். கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் புதிய வாக்காளர்கள் 1,30,000 அளவுக்கு உள்ளனர்.
 

vellore parliamentary constituency


இந்த தொகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள், இஸ்லாமியர்கள், கிருஸ்த்துவர்கள், முதலியார்கள், வன்னியர்கள் வலிமையாக உள்ளார்கள். இஸ்லாமியர்கள் வாக்குகள் வெற்றியை தீர்மானிப்பவையாக உள்ளன.


இந்தியா சுதந்திரம் அடைந்த பின் நடைபெற்ற பொதுத்தேர்தல்களின்போது இந்த தொகுதி மற்ற தொகுதிகளைப்போல் இரட்டை தொகுதியாகத்தான் இருந்தது. அதன்பின் 1962 முதல் ஒருவர் மட்டுமே நிற்கும் வகையில் மாற்றப்பட்டது. 1951ல் இடதுசாரியான ராமசந்திரரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.முத்துக்கிருஷ்ணனும், 1957ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன், முனியசாமியும் வெற்றி பெற்று எம்.பி.க்களாக இருந்தனர்.


1957க்கு பின் நிலைமை மாறத் தொடங்கியது. 1967ல் இந்த தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னம் வெற்றி பெற்று இங்கு தனது கணக்கை தொடங்கியது. அதுமுதல் திமுக அல்லது திமுகவோடு கூட்டணி வைப்பவர்களே பெரும்பான்மையாக வெற்றி பெற்று வந்தனர், வருகின்றனர். 1967ல் திமுகவின் குசேலர், 1971ல் திமுகவின் உலகநம்பி, 1977ல் காங்கிரஸ்சின் தண்டராயுதபாணி, 1980ல் சுயேட்சை சின்னத்தில் அப்துல்சமத், 1984ல் ஏ.சி.சண்முகம், 1989ல் காங்கிரஸ்சின் அப்துல்சமத், 1991ல் காங்கிரஸ்சின் அக்பர்பாஷா, 1996ல் திமுக அகரம்சேரி சண்முகம், 1998 மற்றும் 1999ல் பாமக என்.டி. சண்முகம், 2004ல் திமுக சின்னத்தில் இந்தியன் முஸ்லிம் லீக் காதர்மொய்தீன், 2009ல் திமுக சின்னத்தில் இந்தியன் முஸ்லிம் லீக் அப்துல்ரஹ்மான், 2014ல் அதிமுகவின் செங்குட்டுவன் என வெற்றி பெற்றனர்.
 


அந்த வகையில் காங்கிரஸ் 6 முறையும், திமுக 3 முறையும், திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் 4 முறையும், அதிமுக இரண்டு முறையும், திமுக, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து பாமக தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.
 


இந்த தொகுதியில் வெற்றி பெறுபவர்கள் பெரும்பாலும் தமிழக அரசியல் களத்திலும், அரசியலுக்கு அப்பாலும் பெரும் பேரோடும், புகழோடும் விளங்கிவந்தனர் என்பது அரசியல் வரலாறு. அந்த வரலாற்றை உடைத்தவர் 2014 முதல் 2019 வரை எம்.பியாக இருந்த செங்குட்டுவன்.


 

palarஇந்த தொகுதியில் இஸ்லாமியர்கள் நிறைந்து வாழ்வதால் இந்த தொகுதியில் நிற்கும் இஸ்லாமிய வேட்பாளர்கள் பெரும்பாலும் வெளியூர் வேட்பாளர்களாக இருப்பார்கள். அப்படி நின்று வெற்றி பெற்று எம்.பி.யானவர்கள், தங்களது பெயர் நிலைத்து நிற்கும் வகையில் இந்த தொகுதிக்கு ஏதாவது செய்துவிட்டே சென்றனர். ஆனால் வேலூர் மாநகரத்தை பூர்விகமாக கொண்ட எம்.பி செங்குட்டுவன், வெற்றி பெற்றபின் இந்த தொகுதி மக்களுக்கு நன்றி கூட சொல்லவில்லை என்பதே காலத்தின் கோலம்.
 


இதற்கு முன்பு இருந்த எம்.பி அப்துல்ரஹ்மான், ஆம்பூர் நகரில் அடிக்கடி தேசிய நாற்கர சாலையில் விபத்துக்கள் நடப்பதால் மேம்பாலம் அமைக்க முயற்சி எடுத்து 70 சதவிதம் வெற்றி பெற்றார். இன்னும் பாலம் பணிகள் தொடங்கவில்லை. அதேப்போல் வாணியம்பாடியில் இரயில்வே மேம்பாலம் அமைத்து தந்து மக்களின் பாராட்டை பெற்றார்.
 

 
இந்த தொகுதி மக்களின் பிரதான கோரிக்கைகள்.
 

1. ஒரு காலத்தில் வற்றாத ஜீவநதியான பாலாற்றில் தற்போது மணல் லாரிகள் தான் நிரந்தரமாக ஓடுகின்றன. அதோடு, தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர் பாலாற்றில் கலந்து மண்ணை, தண்ணீரை மலடாக்கியுள்ளன. கடந்த 30 ஆண்டுகாலமாக பாலாற்றை தூய்மைப்படுத்த வேண்டும் என்பது இம்மக்களின் கோரிக்கை. இதற்காக பலப்பல அமைப்புகள் வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, இராணிப்பேட்டை நகரங்களில் தனித்தும், ஒன்றிணைந்து இயங்கியும் இதனை சரிச்செய்ய கடும் முயற்சி செய்து வருகின்றனர். நாங்கள் வெற்றி பெற்றால் இதனை சீர்செய்வோம், தடுப்போம் என்கிற எந்த எம்.பியும் அதற்காக எங்கும் சிறுதுரும்பையும் அசைப்பதில்லை.
 

2.   மூடப்பட்ட தமிழ்நாடு அரசின் வெடிமருந்து தொழிற்சாலையில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக வேலை செய்து வந்தனர். அந்த தொழிற்சாலை படிப்படியாக தொழிலாளர்களை குறைந்து, தற்போது நிரந்தரமாக மூடப்பட்டது. இதனை திறக்க மத்தியரசின் தடையை உடைக்க கடந்த 10 ஆண்டுகளாக எந்த எம்.பியும் முயற்சிக்கவில்லை. இதனால் நிரந்தரமாக மூடப்பட்டதை, இனி வெற்றி பெற்று வரப்போகும் எம்.பியாவது திறக்க முயல வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
 

3.   குடியாத்தம் வெளிப்புறச்சாலை ( பை-பாஸ் ), நெசவுப்பூங்கா போன்றவை தேவை என்பது பல வருட கோரிக்கை இந்த கோரிக்கைளும் நிறைவேறவில்லை.
 

4.   வேலூர், பள்ளிக்கொண்டா, மாதனூர், ஆம்பூர், வாணியம்பாடி நகரங்களின் குடிநீர் தேவையை காதர்மொய்தீன் எம்.பியாக இருந்தபோது, உள்ளாட்சிதுறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்த ஸ்டாலினிடம் சொல்ல அவர் ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் வழியாக தீர்த்து வைத்தார். ஆனால், வேலூர் தொகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பது 25 வருட கோரிக்கை அதையும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை.
 

இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், இந்த தொகுதியில் வாழும் பெரும்பான்மை சமூகத்தின் மனதை வெல்பவர்களே வெற்றியை ருசிப்பார்கள்.


 

 

Next Story

தம்பியின் உடலை மீட்டுத் தாருங்கள்; ஆட்சியர் காலில் விழுந்து கதறிய அக்கா

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
sister asked collector to return body of her brother who passed away in Malaysia

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் பகுதியைச் சேர்ந்தவர் அனுன் தேவராஜ் (39). இவர் எலக்ட்ரீசியன் வேலை தேடி மலேசியா சென்ற நிலையில் அங்கு இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார். அவரது உடலை மீட்டுத்தரக்கோரி இன்று காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் மனு அளிக்க வந்த உயிரிழந்த அணு தேவராஜன் சகோதரி விக்டோரியா மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி காலில் விழுந்து கதறி விழுந்த காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

“எப்படியாவது எனது தம்பியின் உடலை மீட்டுத் தாருங்கள்..” எனக் கோரிக்கை வைத்து மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால் அவரை மருத்துவர்கள் பரிசோதித்துப் பிறகு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு சிகிச்சையாக அழைத்துச் சென்றனர். இங்கிருந்து தூதரகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பதிலளித்துள்ளார்.

Next Story

நீர் நிலைகளில் குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு; பொதுமக்கள் வேதனை 

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Damage to ground water table due to dumping of garbage in water bodies

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது மண்டலம் 15 வார்டு பகுதிகளில் உள்ள குப்பைகளைச் சேகரித்து அரசு முறையான இடம் தேர்வு செய்து அதற்கான இடத்தில் குப்பை கழிவுகளை கொட்டாமல் அதற்கான இடமும் தேர்வு செய்யாமல் காட்பாடி தாராப்படுவேடு ஏரியில் எடுத்துச் சென்று கொட்டி மலைபோல் குவித்து தீட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால் ஏரியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு ஏரியின் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகைமண்டலமாக காட்சியளிப்பதால் துர்நாற்றம் வீசுகின்றது.

இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மாநகராட்சி கழிவுகளை கொட்டுவதற்கு சரியான இடத்தை தேர்வு செய்து அதற்கான இடத்தில் குப்பைகளை கொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் என அப்பகுதியில் பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை வைக்கின்றனர்.