Skip to main content

வேட்பாளர்கள் தொல்லை தாங்க முடியலப்பா.. -முக்கிய பிரமுகர்கள் முனகல்!

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

“தேர்தலின்போது தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுவதென்பது ஒரு சம்பிரதாயமாகிவிட்டது. ஒருபுறம் பிரச்சாரம் செய்தாலும், இன்னொருபுறம் முக்கிய பிரமுகர்கள் சந்திப்புக்கும் வேட்பாளர்கள் நேரம் ஒதுக்கி வருகின்றனர்.   

 

vip

 

இந்த நடைமுறை ஏன் வந்தது தெரியுமா? கிராமமோ, நகரமோ குறைந்தது 10 பேராவது முக்கிய பிரமுகர்களாக இருப்பார்கள். குறிப்பிட்ட சமுதாயம் சார்ந்தோ, வியாபாரத்தின் அடிப்படையிலோ, செல்வாக்குள்ள குடும்பம் என்பதாலோ,  அவர்களுக்கென்று ஒரு அடையாளம் இருக்கும். 
 

அவர் ஒரு தொழிலதிபராக இருப்பார். அவருடைய நிறுவனத்தில் பலர் பணிபுரிவார்கள். முன்பெல்லாம், தேர்தலில்  யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தனது நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களிடம் அந்த முதலாளி சொல்வார். அவர்களும்,  ‘முதலாளி சொன்னால் சரியாகத்தான் இருக்கும்..’ என்று அவருடைய சொல்லுக்கு மதிப்பளித்து, குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள். இப்போது நிலைமை அப்படியா இருக்கிறது? முதலாளி சொன்னால் தொழிலாளர்கள் கேட்கும் காலமெல்லாம் மலையேறிவிட்டது. தொழிலாளர்கள் சுயமாகச் சிந்திக்கிறார்கள். அதனால்,  வாக்களிக்கும் விஷயத்தில் தொழிலாளர்களுக்கு ஆலோசனை கூற முதலாளிகளே முன்வர மாட்டார்கள். பல முதலாளிகள் தேர்தல் நாளில் வாக்குச்சாவடி பக்கமே போக மாட்டார்கள்.  ஆனாலும், அந்தப் பழைய சம்பிரதாயம் தொடரவே செய்கிறது.” தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளைக் கவனித்துவரும் ‘பெரிய முதலாளி’ எனப்படும் முக்கிய பிரமுகர் ஒருவர் இப்படிச் சொன்னார்.  

 

மேலும் அவர் “இந்தத் தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியலப்பா.  கவுண்டமணியோட ஃபேமஸ் டயலாக் இது. தேர்தல் சீசனில்,  அந்தத் தொழிலதிபர்களுக்கே தொல்லை தருபவர்களாக இருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.  சந்திக்க வருபவர்கள், பேசி முடித்துக் கிளம்புவதற்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகிவிடும். பொன்னான அந்த நேரம் எங்களுக்கு இழப்புதானே?” என்று சிரித்தார். 
 

vip

 

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியிலும், முக்கிய பிரமுகர்களிடம் ஆதரவு கேட்பது நடந்துவருகிறது.  சந்திப்பின்போது என்னதான் பேசுகிறார்கள்?

விருதுநகர் தொகுதியிலும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கும் படலம் நடக்கிறது. முக்கிய பிரமுகர் ஒருவருடைய வீட்டுக்கு  சாத்தூர் திமுக வேட்பாளர் சீனிவாசனை அழைத்துச் சென்றார் திமுக மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். “முதலாளி..   உங்க ஆதரவு எங்களுக்கு வேணும். அடுத்து சென்ட்ரல்லயும் ஸ்டேட்லயும் நம்ம ஆட்சிதான். ஊருக்கோ, பிசினஸுக்கோ என்ன பிரச்சனைன்னாலும் நாங்க பார்த்துக்குவோம்.” என்று கூற, அவர்களுக்கு டீ, பிஸ்கட் தந்து உபசரித்து அனுப்பினார் அந்தப் பிரமுகர்.  


மறுநாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சாத்தூர் தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியையும் அழைத்துச்சென்று, அதே முக்கிய பிரமுகரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தார்.  “கவர்மென்ட் நம்மகிட்ட இருக்கு. நாங்க உங்ககிட்ட இருக்கோம். நீங்கதான் ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கணும். இவங்கள்லாம் யாரோன்னு பார்க்காதீங்க.  இங்கே எம்.எல்.ஏ.வும் நான்தான்; எம்.பி.யும் நான்தான். தொகுதிக்கோ, தொழிலுக்கோ என்ன பிரச்சனைன்னாலும் சொல்லுங்க. உடனே சரி பண்ணிருவோம்.” என்று உறுதியளித்திட, அவர்களுக்கும் டீ, பிஸ்கட் தந்து உபசரித்து அனுப்பினார் அந்த முக்கிய பிரமுகர். 

 
தேர்தல் ஆதரவு கேட்டு தன்னுடைய முதலாளியான அந்த முக்கிய பிரமுகரிடம்  வேட்பாளர்கள் தரப்பு பேசிக்கொண்டிருந்தபோது, அடுத்த அறையில் அலுவலகப் பணியில் பிசியாக இருந்தார் ஒருவர்.  கடந்த 45 வருடங்களாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் அவரிடம் ‘வாக்களிக்கும் விஷயத்தில் உங்க முதலாளியின் எண்ண ஓட்டம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்தானே?’ என்று கேட்டோம். 

“முதலாளி மனசு யாருக்குத் தெரியும்? எங்க முதலாளியோட அப்பாவும் ஒரு முக்கிய பிரமுகர்தான். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம். அப்ப காமராஜர் இந்தப்பக்கம் வந்தா எங்க முதலாளி வீட்லதான் தங்குவார்; எனக்குத் தெரிஞ்சு.  இந்தக் குடும்பத்துல இப்ப யாருக்கும் அரசியல் ஈடுபாடு இல்லை. ஆரம்பத்துல இருந்தே, தேர்தல் நேரத்துல கே.கே.எஸ்.எஸ்.ஆர். எங்க முதலாளியைப் பார்த்துட்டுப் போறது வழக்கமா நடக்கிறதுதான்” என்றார். 
 

தொகுதிதோறும் இதுபோன்ற சந்திப்புக்கள் நடக்கின்றன. தங்களை முக்கிய பிரமுகர்களாகக் கருதி, அரசியல் தலைவர்கள்  தேடிவந்து ஆதரவு கேட்பதை பெருமையாக நினைப்பவர்களும் உண்டு. இந்த முக்கிய பிரமுகர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கட்டும். ஆனால், வாக்களிக்கும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

 

 

 

 

 

Next Story

'2 ரூபாய்க்கு சட்டை'- அலப்பறை கொடுத்த 'ஆம்பள சொக்கா' கடை

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
'Shirt for 2 rupees' - Ambala Chokka shop that gave Alapparai

பெரும்பாலும் புதிதாகப் பிரியாணி கடைகள் திறக்கும் பொழுது 10 ரூபாய்க்கு ஒரு பிரியாணி அல்லது ஒரு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற நூதன விளம்பரங்களைப் பார்த்திருப்போம். கடை திறக்கும் நாளிலேயே மக்கள் கூட்டம் கடையில் அலைமோத வேண்டும் எனக் கடையின் உரிமையாளர்கள் இந்த நூதன முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.

தற்பொழுதெல்லாம் பிரியாணி கடைகளைத் தாண்டி அனைத்து வர்த்தக நிலையங்களிலும் இதுபோன்ற அதிரடி ஆஃபர் முறைகள் கொண்டு வரப்படுகின்றன. அப்படி ஒரு ஆஃபரைத்தான் கொடுத்துள்ளது துணிக்கடை ஒன்று. சிவகாசியில் புதிதாகத் திறக்கப்பட்ட 'ஆம்பள சொக்கா' என்ற துணிக்கடையில் அறிமுக நாள் சலுகையாக முதலில் வரும் 50 பேருக்கு 2 ரூபாய்க்கு ஒரு சட்டை என்ற ஆஃபர் வெளியிடப்பட்டிருந்தது. அதேபோல குலுக்கல் முறையில் ஸ்மார்ட் டிவி ஒன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடை திறந்த முதல் நாளே கூட்டமும் அள்ளியது. பி.எஸ்.ஆர் சாலையில் இந்த கடை அமைந்துள்ள பகுதி  போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். ஆஃபர்  காரணமாக அதிகமான இளைஞர்கள் படை எடுத்ததால்அங்கு சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போட்டிபோட்டுக்கொண்டு உள்ளே நுழைந்த இளைஞர்கள் துணிகளை வாங்கி சென்றனர்.

Next Story

''வெட்டி வேரு வாசம்...''-மாற்றத்திற்குத் தயாராகும் விவசாயிகள்

Published on 09/05/2024 | Edited on 09/05/2024
"Vettiveru Vasam..."-Farmers preparing for change

சிதம்பரம் சுற்றுவட்டப் பகுதியில் மானாவாரி நிலங்கள் வைத்துள்ள விவசாயிகள் வெட்டிவேர் விவசாயம் செய்து அசத்துகிறார்கள்.

சிதம்பரம் அருகே புதுச்சத்திரம், கொத்தட்டை, பெரியப்பட்டு உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உள்ள  விளை நிலங்களில்  நிலத்தடி மண்  மணல் பாங்கான இயற்கையாகவே அமைந்துள்ளது. இந்த மண்ணில் விவசாயிகள் ஆண்டாண்டு காலமாக சவுக்கை, தைலம் மரம், கம்பு, சோளம், வெள்ளரி, பாகற்காய்  உள்ளிட்ட மாணவரி பயிர்களை  பயிர் செய்து வந்தனர்.

இந்தப் பயிர்களை விளையவைப்பதில் விவசாயிகளுக்கு பராமரிப்பு உள்ளிட்ட அதிக செலவு ஆவதால் சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் வெட்டிவேர் விவசாயம்  அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த வெட்டிவேர் அழகு சாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள், சாமி சிலைகளுக்கு மாலையாக அணிவிக்கவும், அதேபோல் வீட்டின் வாசற்படியில் வாசனைக்காக தொங்க விடுகிறார்கள். வெட்டிவேர் மூலம் சோப்பு உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்கள் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதைச் சிதம்பரம் பகுதியில்  பெரும்பாலான விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

இதில் விளைநிலம் வைத்திருப்பவர்கள் வெட்டிவேர் விவசாயத்திற்கு அவர்களின் நிலத்தை மொத்தமாக ஆண்டுக்கு ரூ.25 ஆயிரத்திற்கு சிலர் குத்தகைக்கு விட்டு விடுகிறார்கள். இதில் புதுச்சத்திரம், கொத்தட்டை, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட சிதம்பரம் சுற்றுவட்டப்பகுதிகளில் சில விவசாயிகள் வெட்டிவேர் விவசாயம் செய்து அசத்தி வருகிறார்கள்.  இந்த வெட்டிவேர்  பத்து மாத பயிர் ஆகும். இதை விவசாயிகள் பராமரித்து தற்போது நல்ல விலைக்கு விற்பதாகவும் கூறுகின்றனர்.

"Vettiveru Vasam..."-Farmers preparing for change

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளரும், அப்பகுதி விவசாயியுமான ப.கொளஞ்சியப்பன் கூறுகையில், ''சவுக்கை, தைலம் உள்ளிட்ட மரங்களை இந்த மண்ணில் விவசாயம் செய்தால் 3 ஆண்டு முதல் 4 ஆண்டு காலம் பராமரித்து அறுவடை செய்வது சிரமமாக இருந்தது. எனவே தற்போது இந்தப் பகுதியில் வெட்டிவேர் விவசாயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது  இதனை விவசாயிகள் சில பேர் பயிரிட்டு வருகிறார்கள். தற்போது ஒரு டன் வெட்டிவேர் ரூ 1.50 லட்சம் வரை விற்பனை ஆகிறது. சிதம்பரம், பரங்கிப்பேட்டை, ஆலப்பாக்கம், பெரியப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 2 டன் வரை வெட்டி வேர் கிடைக்கிறது. இது விவசாயிகளுக்கு லாபத்தை தருகிறது.  

"Vettiveru Vasam..."-Farmers preparing for change

இதில் வெட்டிவேரை நடவு செய்து 3 மாதத்திற்கு களை எடுத்தல் மற்றும் தண்ணி ஊற்றுதல் என்று பராமரிப்பு செலவுதான். இது நன்கு வளர்வதற்கு கோழி சாணத்தை போட்டு தண்ணீர் ஊற்றுவது தான் அதன் பிறகு அவ்வளவு செலவு இல்லை. நன்கு வளர்ந்து விட்டால் அறுவடை செய்யும் போது பொக்லைன் இயந்திரம் மூலம் வேரை பிடுங்கி ஆட்களை கொண்டு வேரை வெட்டி எடுக்கும் கூலிதான். இதனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள வாசனை திரவியம், நறுமண பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பட்டு வருகிறது. அதேபோல் கோயிலுக்கு மாலை கட்டுவதற்கும் மொத்தமாக வாங்கி செல்கிறார்கள். ஆனால் கோழி சாணத்தை வயலில் போட்ட பிறகு ஒரு வாரத்திற்கு கெட்ட நாற்றம் அடிக்கும் அப்போது யாரும் கிட்ட சொல்ல முடியாது வயலுக்கு அருகே குடியிருப்பு இருந்தால் சிரமாக இருக்கும்'' என்றார்.