Skip to main content

“பெண்ணிடம் தோற்று போகிறோம் என்ற ஆணின் எண்ணமே இத்தகைய கொலைக்கு காரணம்...” - மருத்துவர் ஷாலினி

Published on 03/10/2020 | Edited on 03/10/2020
hjk

 

 

உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். பட்டியல் இனத்தை சேர்ந்த அந்த பெண்ணை இரவோடு இரவாக காவல்துறையினர் எரித்து அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியது.

 

இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய அரசியில் கட்சி தலைவர்களும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தின் வடுவே இன்னும் ஆறாத நிலை இன்று காலை மற்றொரு பெண் அதே போல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த பலாத்காரங்கள் ஏன் தொடர்ந்து நடைபெறுகிறது, இதற்கும் சாதிக்கும் தொடர்பு உள்ளதா, இதனை எப்படி தடுப்பது போன்ற பல்வேறு கேள்விகளை நாம் மருத்துவர் ஷாலினி அவர்களிடம் கேள்விகளாக நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

 

உத்தரபிரதேசத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர் நேற்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். எலும்பு உடைக்கப்பட்டு, நாக்கு வெட்டப்பட்டு கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. அதையும் தாண்டி அந்த பெண்ணின் சடலத்தை அவர்களின் பெற்றோரிடமே காட்டாமல் எரித்துள்ளனர். இதற்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவத்தை எப்படி பார்க்கிறீர்கள், காவல்துறையின் நடவடிக்கையை ஏற்றுக் கொள்கிறீர்களா?

 

இது ஒரு தடுக்கப்பட வேண்டிய சம்பவம், அதை பற்றிய அறச்சீற்றம் நமக்கு நிறைய இருக்கு. இது ஏன் ஏற்படுகின்றது, அதற்கு எது அடிப்படை காரணமாக இருக்கிறது, எவ்வாறு தடுப்பது போன்ற கோணங்களில் இந்த சம்பவத்தை ஆராய வேண்டியது அவசியமாகிறது. இதை மேலோட்டமாக கடந்து செல்ல முடியாது, அவ்வாறு செல்லவும் கூடாது. இதை ஒரு பெண்ணாக, தாயாக இதை கண்டிக்கிறேன்.

 

ஆனால் உ.பி காவல்துறையை பொறுத்தவரையில் பெண்ணுக்கு காயங்கள் இருக்கிறதே தவிர இதை குறிப்பிட்டு பாலியல் பலாத்காரம் என்று சொல்லிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்களே? 

 

ஒரு இடத்தில் அடிபடாமல், மற்ற இடத்தில் மட்டும் அடிப்பட்டிருந்தால் அதற்கு பெயர் அடிபடவில்லை என்பதா?  பாலியல் பலாத்காரம் என்பதால் நாம் ரியாக்ட் பண்ணவில்லை, ஒரு உயிர் போனதால் நாம் ரியாக்ட் செய்கிறோம். பாலியல் பலாத்காரம் செய்தார்களா என்பது சட்டப்பூர்வமாக நிரூபிக்க வேண்டிய ஒன்று, ஆனால் இங்கே ஒரு உயிர் போய் விட்டது. எப்படி போனது, வன்முறையால் கொடுமையாக தாக்கப்பட்டு கொலை வரை சென்றுள்ளது.  கை, கால்களை கட்டி அடித்து கொலை செய்யும் அளவுக்கு ஒரு பெண்ணின் மீது ஏன் வன்மம் வருகிறது என்ற கேள்வி இயல்பாகவே நம்மிடம் எழுகிறது. இந்த நோயின் முதல் நாடி எங்கிருந்து வருகிறது என்று நாம் பார்க்க வேண்டும். அதை நாம் கண்டறிவது என்பது இந்த நேரத்தில் மிக முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன். இதை நான் ஒரு சமூக நோய் என்று கூட புரிந்து கொள்கிறேன். ஆனால் தன்னுடைய ஆளுமையில் பிரச்சனை என்றால், ஓடிச்சென்று தாழ்த்தப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்வது என்பது அவனுக்கு எதனால் தோன்றுகிறது என்று பார்க்க வேண்டும். இது உ.பி மாநிலத்தில் மட்டும் இல்லை, அனைத்து மாநிலத்திலும் இதே நிலைமை இருக்கிறது. 

 

நம்முடைய இந்திய ஆண்களுக்கு நாம் பெண்களிடம் உடலுறவு விஷயத்தில் தோற்று போகிறோம் என்ற மனநிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தியாவை தாண்டி ஆசிய நாடுகள் பலவற்றிலும் ஆண்களின் என்ன ஓட்டம் இதுவாகத்தான் இருக்கிறது. இந்த தோல்வி மனப்பான்மை அவர்களை கொடுமைப்படுத்தி கொலை செய்யுமளவுக்கு கொண்டு செல்கிறது. நம்மை இந்த உறவை வைத்து கட்டுப்படுத்துகிறார்களே என்ற எண்ணம் அவர்கள் மனதில் நெடுநாட்களாக இருந்து வருகிறது. அதனால்தான் தனி ஆளாக மட்டும் சென்று இந்த கொலைபாதக செயலை செய்யாமல், நண்பர்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள். இவர்களின் ஆழ்மனதில் இருக்கின்ற வன்மத்தின் வெளிப்பாடே இவர்களை இத்தகைய கொடுமைகளை செய்ய வைக்கிறது. இதை தடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.