தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனை டிஸ்மிஸ் செய்து, அவரது இலாகாவை ஆர்.பி உதயக்குமாரிடம் கூடுதலாக ஒப்படைத்து அதிரடி காட்டி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி.
இதுபற்றி அதிமுகவினர் சிலர் கூறும்போது, 'உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு எதிராக மணிகண்டன் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் நியாயமானவை தான், ஏற்றுக் கொள்ளக் கூடியவை தான். பொதுவெளியில் அதனை பேசியது தான் பிரச்சனை என்றால், திண்டுக்கல் சீனிவாசனை பலமுறை அமைச்சரவையில் இருந்து நீக்கி இருக்க வேண்டும்.
தேர்தலில் தோற்றதுக்கு பிஜேபி கூட கூட்டணி வச்சதுதான் காரணம் என்று வெளிப்படையாகவே பேசிய 'சட்ட'மான அமைச்சர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை என்று போர்க்கொடி உயர்த்திய ராஜன் செல்லப்பா, குன்னம் ராமச்சந்திரன் அவ்வப்போது ராஜினாமா மிரட்டல் விடும் தோப்பு வெங்கடாசலம் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இப்போது முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த மணிகண்டனை தூக்கி எறிந்திருக்கிறார். இதன் மூலம் அவர் ஜெ.வாக மாறி வருகிறார்' என்றனர்.
'முத்தலாக் மசோதா விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அதிமுகவின் இரட்டை நிலைப்பாடு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஓபிஎஸ்ஸின் மகன் மக்களவையில் மசோதாவை ஆதரிக்க, மாநிலங்களவையில் அதிமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். எனவே, கட்சியும், ஆட்சியும் தம்மிடமே இருக்க வேண்டும் என நினைக்கிறார். அதற்கான காய் நகர்த்தலே முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த மணிகண்டனை நீக்கியது. அதேபோல், அந்த இலாகாவை அதே சமூகத்தை சேர்ந்தவரிடம் ஓப்படைத்து, பேலன்ஸ் பண்ணி இருக்கிறார். அதே நேரத்தில் முதல்வரின் அதிரடிகள் தொடரும்' என்றார் அதிமுக நிர்வாகி ஒருவர்.
அவரே தொடர்ந்து, 'வேலூர் தேர்தல் முடிவு வந்த பிறகு 'வீரமான' அமைச்சருக்கும், 'விஜய'மான மற்றொரு அமைச்சருக்கும் கல்தா கொடுக்க முடிவு செய்திருக்கிறார் எடப்பாடியார். வழக்குகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், அவர்களாலும் மறுக்க முடியாது எதிர்ப்பும் தெரிவிக்க முடியாது.
இது தவிர விரைவில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் வழக்கும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, பாதகமான தீர்ப்பு வந்தால், ஓபிஎஸ் வகையறாக்களின் பதவி பறிபோகும். எனவே, முழுமையாக கட்சியும், ஆட்சியும் தனது கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று காய் நகர்த்தி வருகிறார் எடப்பாடியார்' என்று தெரிவித்தார்.