Skip to main content

குண்டு வெடிப்பில் அமெரிக்கா சதியா?-அதிர்ச்சியில் இலங்கை!

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

இலங்கை தொடர்குண்டு வெடிப்பின் பின்னணியில் வெளிநாடுகளின் சதி இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே. அவருடன் அரசியல் ரீதியாக மல்லுக்கட்டும் அதிபர் மைத்ரிபால சிறிசேனவும், "இந்த பயங்கரத்தில் சர்வதேச சதி இருப்பதை உணர முடிகிறது' என அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதிபருக்கும் பிரதமருக்கும் முரண்பாடுகளும் பகையும்  அதிகரித்திருக்கும் சூழலில், இருவரும் ஒரே வித சந்தேகத்தை முன்வைப்பது வெடிகுண்டு பயங்கரத்தின் மறைக்கப்படும் பக்கங்களை அம்பலப்படுத்துகின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான், அமெரிக்காவுக்கும் கோத்தபய ராஜபக்சேவுக்குமிடையே இருக்கும் ரகசிய டீலிங் தற்போது அம்பலமாகியிருக்கிறது. 

 

srilanka incidents



அமெரிக்கா, சீனா, இந்தியா, நார்வே, பிரிட்டன், ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளின் உதவியுடன் 2009-ல் நடந்த இறுதி யுத்தத்தில் தமிழீழத்தை அழித்தொழித்தனர் ராஜபக்சேவும் சகோதரர்களும். யுத்தம் முடிவுக்கு வந்தது. சீனா மற்றும் பாகிஸ்தானின்  செல்லப்பிள்ளையாக மாறினார் மகிந்தா. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத இந்தியா, பிரிட்டன், நார்வே நாடுகளின் உதவியுடன் 2015-ல் நடந்த அதிபர் தேர்தலில் மகிந்தாவை வீழ்த்த, மைத்ரியை அதிபராக கொண்டு வந்தது அமெரிக்கா. ஆனால், மைத்ரியும் ஒரு கட்டத்தில் சீனா, பாகிஸ்தானின் ஆதரவாளராக மாறிப்போனார். 

 

rajapaksay



இந்தச் சூழலில்தான், கடந்த 3 ஆண்டுகளாக, அமெரிக்காவிடம் மிக நெருக்கமான, அரசியல் ரீதியாக நட்பை பலப்படுத்தி வருகிறார் கோத்தபய ராஜபக்சே. இரட்டை குடியுரிமையாக அமெரிக்காவின் குடியுரிமையையும் பெற்றவர்.  இலங்கைக்கு அடுத்தாண்டு அதிபர் தேர்தல் வரவிருக்கிறது. இந்த தேர்தலில் மைத்ரியை வீழ்த்தி கோத்தபயவை அதிபராக்க கடந்த 6 மாதகாலமாக ரகசிய வியூகங்களை மேற்கொண்டிருக்கிறது அமெரிக்கா. இதன் ஒரு கட்டமாக, கோத்தபயவின் அமெரிக்க குடியுரிமையை ரகசியமாகத் திரும்ப பெற்றுக்கொண்டிருக்கிறது அமெரிக்க அரசாங்கம். அமெரிக்காவும் ராஜபக்சே சகோதரர்களும் இதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
 

srilanka primeminister



இது குறித்து நம்மிடம் பேசும் இலங்கை புலனாய்வு அமைப்புகளோடு தொடர்புடைய  தமிழீழ ஆதரவாளர்கள், "இலங்கையின் அரசியலமைப்பு சட்டப்படி இரட்டை குடியுரிமை  பெற்றவர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா சென்றிருந்த கோத்தபய, அங்கு தங்கியிருந்த 3 வாரங்களும் அமெரிக்க உயர் ஸ்தானிகர்களுடன் பல கட்ட ஆலோசனைகளை நடத்தியிருக்கிறார். தனது இமேஜுக்கு பாதிப்பில்லாமல், அமெரிக்காவே தன்னுடைய குடியுரிமையை வித்ட்ரா செய்தது போல இருக்க வேண்டும் என்பது கோத்தபயவின் கோரிக்கை. அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதிபர் தேர்தலில் கோத்தபய போட்டியிடுவது கசியக்கூடாது என்பதற்காகவே குடியுரிமை ரத்து ரகசியமாக வைக்கப்படுகிறது. கோத்தபயவின் வெற்றிக்காகத்தான் இலங்கையில் வெடிகுண்டு பயங்கரங்கள் தொடர்ந்து நடந்தேறுகின்றன. அதிபர் தேர்தல் வரை இலங்கையை பதட்டத்திலேயே வைத்திருக்க திட்டமிடுகிறது அமெரிக்கா'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.

அமெரிக்க-கோத்தபயவின் இந்த ரகசிய திட்டங்களுக்கு செக் வைத்திருக்கிறார், ராஜபக்சே கும்பலால் 2009-ல் படுகொலை செய்யப்பட்ட இலங்கை "சண்டே லீடர்' பத்திரிகையின் இணையாசிரியர் லசந்தா விக்ரமதுங்கேவின் மகள் அகிம்ஷா விக்ரமதுங்கே. மகிந்தாவின் நண்பராக இருந்தபோதும் அவரது அரசியல் படுகொலைகளை அம்பலப்படுத்திய லசந்தா, இதன்காரணமாக, ராஜபக்சே சகோதரர்களால், தான் கொல்லப்படலாம் என்பதை சண்டே லீடரில் பதிவு செய்தார். அது அச்சாகி ரிலீஸ் ஆவதற்கு முதல் நாள் படுகொலை செய்யப்பட்டார். தனது தந்தையின் படுகொலைக்கு கோத்தபயதான் காரணம் என குற்றம்சாட்டி வந்தார் லசந்தாவின் மகள் அகிம்ஷா விக்கிரமதுங்கே. 

அவரது தற்போதைய செயல்பாடுகள் குறித்து நம்மிடம் பேசும் கொழும்பு பத்திரிகையாளர்கள், "கோத்தபயவின் நடவடிக்கைகளை அறிந்த அகிம்ஷா, அமெரிக்காவில் தனது நண்பர்களான சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்தார். தனது தந்தையின் படுகொலைக்கு கோத்தபயதான் காரணம் எனவும், இவர்மீது நிறைய போர்க்குற்றங்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டி அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தில் கோத்தபயவிற்கு எதிராக ஏப்ரல் 7-ந் தேதி வழக்குத் தொடர்ந்தார் அகிம்ஷா. நீதிமன்றம் 10-ந் தேதி கோத்தபயவுக்கு சம்மன் அனுப்பியது. அமெரிக்க குடியுரிமை பெற்றவரான கோத்தபய மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு முடியும்வரையில் குடியுரிமையை ரத்து செய்யவோ, திரும்பப் பெறவோ முடியாது. கோத்தபயவை அதிபர் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கவே அவர் மீது அகிம்ஷா இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா அரசின் உயரதிகாரிகளின் உதவியுடன் வழக்கை தடுத்து நிறுத்த கோத்தபய முயற்சிப்பார் என யோசித்த அகிம்ஷாவின் சட்ட நிபுணர்கள், கோத்தபய மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும், அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனையும்  அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்'' என விவரித்தனர். அமெரிக்கா+கோத்தபய கூட்டுச் சதியில் இலங்கை அரசியல் களம் அதிர்ந்து அலறுகிறது.