Skip to main content

உலகத் தமிழ் மாநாடுகளும்... அது கடந்து வந்த பாதையும்...

Published on 05/07/2019 | Edited on 05/07/2019


தமிழ்... இந்த மூன்றெழுத்து இல்லாமல் நாம் இல்லை. அந்த மூன்று எழுத்து இல்லாமல் தமிழக அரசியலே இல்லை. அந்த அளவுக்கு பாமரனில் இருந்து பார்லிமென்ட் வரை மொழி உணர்வின் தாக்கம் ஏதோ ஒருவிதத்தில் இன்றும் இருந்து கொண்டுதான் வருகிறது. அதன் தாக்கத்தின் எதிரொலிப்பாகத்தான் 300க்கும் மேற்பட்ட பாஜக எம்பிக்களை எதிர்த்து "தமிழ் வாழ்க" என்று நாடாளுமன்றத்தில் நம்மால் குரல் கொடுக்க முடிந்திருக்கிறது. தமிழ் மீது நமக்கு இருக்கும் பற்றும் நேசமும் வேறுயாரும் சொல்லிக் கொடுப்பதனால் வருவதில்லை. அவ்வாறு சொல்லிக்கொடுத்து வந்தால், அது தாய்மொழி பற்றும் அல்ல. ஆனால், அந்த மொழிக்கான அங்கீகாரத்தை உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே, நாம் தாய்மொழிக்கு செய்யும் நீதி. அந்த வகையில், தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தவும், தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கவும் பல ஆண்டுகளாக நடத்தப்படுவதுதான் உலகத் தமிழ் மாநாடுகள். இதுவரை ஒன்பது உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மூன்று உலகத்தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளது. இதுவரை கொண்டாடப்பட்ட உலகத்தமிழ் மாநாடுகளை பற்றிய ஒரு பார்வை பின்வருமாறு...

 

 10th World Tamil Conference

 

உலகம் முழுவதும் உள்ள தமிழறிஞர்களை ஒன்றிணைத்து தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் 1964ல், டில்லியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் துவக்கப்பட்டது. அப்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. முதல் உலகத் தமிழ் மாநாடு 1966 ஏப்ரலில், மலேசியத் தலைநர் கோலாலம்பூரில் சிறப்பாக நடந்தது. இரண்டாவது மாநாடு, சென்னையில் 1968ல் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை முன்னின்று மாநாட்டை சிறப்பாக நடத்தினார். இந்த மாநாட்டின் முதல் நாளில் சென்னை கடற்கரையில் 9 தமிழ் அறிஞர்களின் சிலைகள் எடுக்கப்பட்டன. திருவள்ளுவர், அவ்வையார், கம்பர், ஜி.யு.போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ.உ.சி., வீரமாமுனிவர் ஆகியோருடன் சிலப்பதிகார நாயகி கண்ணகிக்கும் சிலை எடுக்கப்பட்டது.

 

 10th World Tamil Conference

 

 

மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு 1970ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றது. முதல் உலகத்தமிழ் மாநாட்டைப் போல, இந்த மாநாடு தமிழ் ஆய்வுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது. நான்காவது உலகத் தமிழ் மாநாடு, 1974ல் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் நடந்தது. முதல் மூன்று மாநாடுகளைப் போல் இம்மாநாடு எளிதாக நடைபெறவில்லை. யாழ்ப்பாண நகர மேயர் ஆல்பிரட் துரையப்பா ஒரு தமிழராக இருந்தும், இந்த மாநாட்டு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூண்டது. தமிழ் பகுதியிலிருந்து பொதுமக்கள் மாநாட்டைப் பார்க்க திரண்டு வந்தனர். அப்போது, பருத்தித்துறை வழியாக வந்தவர்கள் சிங்களர்களால் மறிக்கப்பட்டனர். அவர்கள் மண்டபம் வந்தடைந்த பின்னர், யாழ் வீரசிங்கம் மண்டபம் நிறைந்து வழிந்தது. காவல்துறையினர் சென்று வர பாதையில்லை என்றுகூறி, தடியடி கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றை வீசினர். இதனால், மக்கள் கலைந்து செல்லும்போது துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியானார்கள்.

 

 10th World Tamil Conference

 

ஐந்தாவது மாநாடு, 1981ல் மதுரையில் நடந்தது. அப்போது முதல்வராக எம்.ஜி.ஆர்., இருந்தார். மதுரையில் உலகத் தமிழ் சங்கம் துவங்கவும், தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் துவங்கவும் அப்போது எம்.ஜி.ஆர்., முடிவு செய்தார். ஆறாவது மாநாடு, 1987ல் கோலாலம்பூரில் நடந்தது. இந்த மாநாட்டில் கருணாநிதி துவக்க நாள் சிறப்புரையாற்றினார். ஏழாவது மாநாடு, 1989ல் மொரிஷியசில் நடந்தது. 1995ல் எட்டாவது மாநாடு தஞ்சாவூரில் நடந்தது. ஒன்பதாவது மாநாடு மலேசியாவில் நடைபெற்றது. 

 

அந்த வகையில் தமிழ்நாட்டில் மூன்று  உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றது. உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அண்ணாவிடம், மாநாட்டில் பங்கேற்க கூடாது என மருத்துவர்கள் தொடர்ந்து வற்புறுத்திவந்த நிலையில்,  அனைத்தையும் மீறி மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் பேரறிஞர் அண்ணா. தமிழகத்துக்கு பெயர் வைத்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், உலகத்தமிழ் மாநாட்டையும் நடத்தி தமிழின் பெருமையை உலகறிய செய்தார் அண்ணா. கிட்டதட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு 4வது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்தினார் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி கலந்துகொண்டு சிறப்புறையாற்றினார். "உலக தமிழ் மாநாடு, வணக்கம்' என தமிழில் பேச்சை துவங்கிய இந்திரா காந்தி இந்தி மொழி திணிக்கப்படாது என வாக்குறுதி அளித்தார். இந்நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு 1995 ஆம் ஆண்டு எட்டாவது உலகத்தமிழ் மாநாடு தஞ்சாவூரில் நடைபெற்றது. 2004ல் தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்து பெற்ற பிறகு கடந்த 2010 ஆம் ஆண்டு உலக செம்மொழி மாநாடு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் கோவையில் சிறப்பாக நடத்தப்பட்டது. விழாவுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வருகை புரிந்து சிறப்புரையாற்றினார்.

 

 10th World Tamil Conference

 

இந்நிலையில், தற்போது 10வது உலகத்தமிழ் மாநாடு அமெரிக்காவின் சிகாக்கோ நகரில் இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு நடக்க உள்ளது. இந்நிகழ்வில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட எழு பேர் கொண்ட குழுவினர் கலந்துகொள்கிறார்கள். மேலும், தமிழகத்தில் இருந்து பட்டிமன்ற பேச்சாளர்களான சாலமன் பாப்பையா, பாரதி பாஸ்கர், ராஜா ஆகியோரும், ஜேம்ஸ் வசந்தன், சீர்காழி சிவசிதம்பரம், கவிஞர் சல்மா, இயக்குநர் கரு.பழனியப்பன், பாலசந்திரன் ஐ.ஏ.எஸ் போன்றவர்களும் கலந்துகொள்கிறார்கள்.
 

தமிழ் மொழிக்கு என்று நீண்ட நெடிய வரலாறு உண்டு. உலகின் மிகச்சிறந்த மொழி தமிழ் என்று மொழி வல்லுனர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். புராதன காலம் முதல் இன்றுவரை கவிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்களால் தமிழ் மொழி வளர்க்கப்பட்டு இந்த பெயரை பெற்றுள்ளது.இப்போது தமிழ்மொழி, தமிழகத்தில் மட்டுமல்லாது, கிழக்கு மற்றும் தெற்கு ஆப்ரிக்கா, பர்மா, பிஜி, இந்தோனேசியா, இலங்கை, டிரினிடாட், மலேசியா நாடுகளிலும் பேசப்பட்டு வருகிறது. சிறப்பான இந்த மொழி மேலும் வளர வேண்டும் என்பதை காட்டிலும், அதன் தொன்மைக்கும், புகழுக்கும் தேசம் விளைவிக்கும் எந்த நடவடிக்கைக்கும் நாம் எதிராக இருப்பதே தமிழுக்கு நாம் செய்யும் தொண்டாக இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை...