தடைகளைக் கடந்து மாநிலங்களவையில் வைகோவின் குரல் ஒலிக்கப்போகிறது. இது மதிமுகவினருக்கு மட்டுமின்றி தமிழக நலன் காக்கப் போராடும் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு வைகோ வேட்பு மனு ஏற்கப்பட்டிருப்பது மதிமுக தொண்டர்களுக்கும், சாதி, மதம், கட்சிகளைக் கடந்த மனித உரிமை, மனித நேயம் போற்றக்கூடிய மக்களுக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தி.
பொதுவாகவே வைகோ பல தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுகிறவர். மாநிலங்களவை தேர்தலிலும் அதுவே நடந்திருக்கிறது. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்று பல தரப்பினரும் விரும்பியதை ஏற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தபோது கிடைத்த ஆதரவு அவரை நெகிழச்செய்தது.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் நாடாளுமன்றத்தில் உரிமை முழக்கமிடக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்ற மகிழ்ச்சி அவரிடம் காணப்பட்டது. அடுத்த ஓரிரு நாளில் நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது, வழக்கம்போல ஆவேசப் புயலாக எழுந்து நின்றார். தடைகள் வருகிறபோதும், எதிர்ப்புகள் எதிர்வருகிறபோதும், நெருக்கடிகள் சூழ்ந்து வருகிறபோதும் மின்னல் வேகத்தில் பந்தைய குதிரையாய் பாய்ந்து ஓடுவதும், அடுத்தக்கட்ட பணிகளில் ஈடுபடுவதும் அவரது குணம். அந்த அடிப்படையில்தான் நீதிமன்ற வாசலில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை வரவேற்பதாக முழங்கினார்.
இந்த நிலையில் அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. வழக்கை பொறுத்தவரையில் மேல்முறையீட்டில் வருகிற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் வரவேற்போம். வைகோ நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நாடாளுமன்றத்திற்கு செல்கிறார். இனி நம்முடைய உரிமைகளுக்காக அங்கே அவர் குரல் ஒலிக்கும் என்றார்.