இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். போட்டா போட்டியில், ‘யார் முதல்வர் வேட்பாளர்?’ என்பதை தெரிந்துகொள்ள நாளை (7-ஆம் தேதி) வரையிலும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.
ஆனால்.. இருவருக்குமிடையே நடக்கின்ற ஈகோ ஃபைட், தென் மாவட்டங்களில் சிலரை, ‘உள்ளே-வெளியே’ அரசியல் பண்ண வைத்திருக்கிறது. ‘ஆதரவு எடப்பாடிக்கா? ஓ.பி.எஸ்.ஸுக்கா?’ என்பதை தீர்க்கமாகச் சொல்ல முடியாத பரிதவிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டுவது போன்ற, இரட்டை நிலையை சிலர் எடுத்திருக்கின்றனர்.
இத்தகையோரில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பெயர் பலமாக அடிபடுகிறது. விருதுநகர் மாவட்டத்திலிருந்து, ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் போன்றோரை அழைத்துக்கொண்டு, திருமங்கலம் சென்று ஆர்.பி.உதயகுமாரை 5-ஆம் தேதி சந்தித்ததால், சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனும், ஓ.பி.எஸ் ஆதரவாளராகவே பார்க்கப்படுகிறார்.
திருமங்கலத்தில் தன்னைச் சந்தித்த, ராஜவர்மன் உள்ளிட்ட விருதுநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகளிடம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் “விருதுநகர் மாவட்டம் அ.தி.மு.கவின் கோட்டை என்பதை ஓட்டை விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்..” என்று ‘அட்வைஸ்’ செய்துவிட்டு, செய்தியாளர்களிடம் “கரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை சாத்தூர் தொகுதியில் நடத்தவேண்டும் என்பதற்காகவே என்னை ராஜவர்மன் சந்தித்தார்..” என்று சந்திப்புக்கான காரணத்தைக் கூறியிருக்கிறார். ராஜவர்மனோ, “இது தனிப்பட்ட சந்திப்புதான்.. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதலின்படியே கட்சிப் பணியாற்றி வருகிறேன். சந்திப்பில் எந்த உள்நோக்கமும் கிடையாது. நாங்கள் ஒற்றுமையாகவே செயல்பட்டு வருகிறோம்..” என்று விளக்கம் தந்திருக்கிறார். ஆனாலும், மனதுக்குள் ஒன்றை (ஓ.பி.எஸ்) வைத்துக்கொண்டு, வெளியில் ‘நாங்கள் பொதுவானவர்கள்’ என்பதுபோல் இவர்கள் காட்டிக்கொள்வதாகவே பேசப்படுகிறது. இதற்கு, வலுவான காரணமும் இருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் நகமும் சதையுமாக ஒட்டிக்கொண்டே இருந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும், ராஜவர்மன் எம்.எல்.ஏ.வும், தற்போது கீரியும் பாம்புமாகிவிட்டனர். ‘மீண்டும் எடப்பாடியே முதல்வர்’ என்ற கோஷத்தை தொடங்கி வைத்தவர் ராஜேந்திரபாலாஜி. அதனால், அரசியல் எதிர்காலக் கணக்கினைக் கூட்டிக் கழித்துப் பார்த்து, பாசத்தை ஓ.பி.எஸ் மீது காண்பித்தார் ராஜவர்மன். குலதெய்வம் கோவிலுக்கோ, ஆண்டாள் கோவிலுக்கோ, ஓ.பி.எஸ் வரும்போதெல்லாம், அசத்தலான வரவேற்பு அளிக்க ராஜவர்மன் தவறுவதில்லை. வெளிப்படையான எடப்பாடி ஆதரவாளர் என்பதால், ஓ.பி.எஸ் வரும் திசையில், ராஜேந்திரபாலாஜி தலைகாட்டுவதே இல்லை.
‘எப்படியும் விருதுநகர் மாவட்டத்தைப் பிரித்து தன்னையும் ஒரு மாவட்டச் செயலாளராக கட்சித் தலைமை அறிவித்துவிடும்..’ என்ற நம்பிக்கையில் ராஜவர்மன் இருந்துவருகிறார். மாவட்டச் செயலாளர் பதவி பறிபோனாலும், மாவட்ட கழகப் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டு, தன்னை எதிர்ப்பவர்களுக்கு. தொடர்ந்து ‘டஃப்’ கொடுத்து வருகிறார், ராஜேந்திரபாலாஜி.
‘நீங்க அந்த (எடப்பாடி) பக்கம் என்றால்.. நாங்க இந்த (பன்னீர்செல்வம்) பக்கம்!’ என்று ராஜேந்திரபாலாஜியை மனதில் வைத்து அரசியல் செய்வது தனக்கு பிரயோஜனப்படாது என்பதை அறிந்துதான், ‘நாங்கள் ஒற்றுமையாகவே செயல்படுகிறோம்..’ என்று சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேட்டியளித்திருக்கிறார் ராஜவர்மன்.
“அ.தி.மு.க செயற்குழுவில் எடப்பாடிக்கு எதிராக முழங்கிய அண்ணன் (ஓ.பி.எஸ்.) ‘ராஜேந்திரபாலாஜிய மாவட்டச் செயலாளர் பொறுப்புல இருந்து நீக்கணும்னு நீங்கதான் (இ.பி.எஸ்.) அறிக்கையில் மொதல்ல கையெழுத்துப் போட்டீங்க. நானும் (ஓ.பி.எஸ்.) கையெழுத்துப் போட வேண்டியதாச்சு. அப்புறம், உங்களுக்கு ஆதரவா ட்வீட் போட்டாரு. நீங்க சொன்னபடியெல்லாம் அறிக்கை விட்டாரு. திரும்பவும் அவரையே மாவட்ட கழகப் பொறுப்பாளர் ஆக்கணும்னு நீங்கதான் சொன்னீங்க. உங்களை ஆதரிப்பதற்காக என்னை எதிர்க்கிறார் என்று தெரிந்தும்கூட, ராஜேந்திரபாலாஜியை மாவட்ட கழகப் பொறுப்பாளர் ஆக்குறதுக்கு நான் மறுப்பு தெரிவிக்கல.’ என்று, ‘பகைவருக்கும் அருள்வாய் நன்னெஞ்சே!’ என்கிற ரீதியில் அல்லவா பேசினார் அண்ணன்..” எனச் சுட்டிக்காட்டுகின்றனர், அவரது விசுவாசிகள்.
“அப்படியென்றால், எடப்பாடி ஆதரவு நிலையில் உறுதியாக இருக்கிறார் ராஜேந்திரபாலாஜி. ஓ.பன்னீர்செல்வமோ, ராஜேந்திரபாலாஜி மீது வருத்தமோ, கோபமோ கொள்ளாதவராக இருக்கிறார். இப்படி ஒரு குணாதிசயமுள்ள ஓ.பன்னீர்செல்வம் எப்படி ‘வல்லாளகண்டன்’ எடப்பாடிக்கு எதிராக அதிரடி அரசியல் பண்ணுவார்?” எனக் கேட்கின்றனர், நடுநிலையாக உள்ள கட்சி நிர்வாகிகள்.
மேலும் அவர்கள், “நல்லவராக இருந்தால் மட்டும் போதாது! வல்லவராகவும் இருக்க வேண்டும்! ஜெயலலிதா இருந்தபோது வேண்டுமானால், ஓ.பி.எஸ். காட்டிய விசுவாசத்துக்கு (தற்காலிக) மரியாதை (முதலமைச்சர் பதவி) கிடைத்திருக்கலாம். இன்னும் சொல்லப்போனால், ஓ.பன்னீர்செல்வத்தால், வார்த்தைக்கு வார்த்தை அம்மா என்று பணிவோடு கூறப்படும் ஜெயலலிதாவே, எம்.ஜி.ஆரின் கடைசி காலத்தில், அவருக்கு விசுவாசமாக நடந்துகொண்டதில்லை. ‘திண்ணை எப்போது காலியாகும்?’ என்று, தான் முதலமைச்சராக வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். விசுவாசத்தை தூக்கி எறிவதுதான் அரசியல் என்பதைக் கணித்ததாலேயே, ஜெயலலிதாவால் முதலமைச்சராக முடிந்தது. இதையெல்லாம், ஓ.பன்னீர்செல்வம் எப்போது புரிந்துகொள்ளப் போகிறாரோ?” என்கிறார்கள்.
ஓ.பி.எஸ். ஆதரவாளர்களோ “பொறுத்திருந்து பாருங்கள்! பண பலத்தோடு முதலமைச்சர் அதிகாரமும் அவரிடம் (எடப்பாடி) இருக்கிறது. அதனால், காற்று இப்போது அவர் பக்கம் வீசுகிறது. தேர்தலின்போது படிவத்தில் அண்ணன் ஓ.பி.எஸ். கையெழுத்தில்லாமல் வேட்பாளரை நிறுத்த முடியுமா? தமிழகத்தில், சரிபாதி அ.தி.மு.க வேட்பாளர்களாக அண்ணன் கை காட்டுபவர்களே போட்டியிடுவார்கள். இந்தக் கணக்குதான் அவர் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருக்காலும் இதில் விட்டுத்தர மாட்டார்.” என்று அழுத்தமாகச் சொல்கின்றனர்.
என்ன கணக்கோ? என்ன அரசியலோ? இதுதான், எம்.ஜி.ஆர். சொன்ன அண்ணாயிசமோ?