நடிகர் ராஜேஷ், சினிமா, இலக்கியம், ஜோதிடம், ஆன்மீகம், சினிமா பிரபலங்களுடனான அவருடைய நெருக்கம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ் பற்றி இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஆகாய பதிவுகள் மற்றும் எல்லையற்ற ஞானங்களால் நிரம்பியது ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ். இதில், ஒவ்வொரு விஷயத்திற்கும் பல கேள்விகள் கேட்க வேண்டும் என்கிறார்கள். நீங்கள் வணங்கும் தெய்வத்தை நினைத்துக்கொண்டு கேளுங்கள்; உங்களுக்கு விடை கிடைக்கும் என்கிறது ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ். லிசா பெர்னட் என்ற பெண்மணிதான் இதை எழுதினார். மூன்று வயதில் அந்தப் பெண்மணிக்கு காதில் ஏதோ ஒலி கேட்டுக்கொண்டே இருந்துள்ளது. பின்னர், வேற்று கிரக மனிதர்கள் இவரிடம் பேசுவது மாதிரியான உணர்வு, எதிர்காலத்தை உணர்வது மாதிரியான உணர்வு ஆகிய விஷயங்களை 5 ஆண்டுகள் தொடர்ந்து உணர்ந்துள்ளார். மனநலம் நன்றாக உள்ளவர்கள்தான் ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தை படிக்க வேண்டும். இந்தப் புத்தகத்தை படித்த பிறகு,மனநலம் சார்ந்து ஏதாவது பிரச்சனை வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்கிறார் லிசா பெர்னட்.
ஆகாஷிக் ரெக்கார்ட்ஸில் லார்ட்ஸ், மாஸ்டர்ஸ், டீச்சர்ஸ் உட்பட மொத்தம் நான்கு பேர் உள்ளனர். அவர்கள் நான்கு பேரும் நீங்கள் கேளுங்கள் என்பதைப்போல தங்கள் கைகளை விரித்துக்கொண்டு உள்ளனர். விழுத்திருந்து தியானம் செய்யவேண்டும் என்கிறது ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ். தன்னைப் பற்றி தெரிந்துகொள்வது ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ் முதல்படி. பிறரை குணப்படுத்துவதற்கான ஹீலிங் ஆற்றலை பெறுவது இரண்டாம்படி. உடம்பில் கைவைத்தாலே குணப்படுத்திவிடக்கூடிய ஹீலிங் ஆற்றலெல்லாம்கூட, ஆகாஷிக் ரெக்கார்ட்ஸில் உள்ளது. அடுத்த நிலை மற்றவர்களுக்காக பார்ப்பது. ஆகாஷிக் ரெக்கார்ட்ஸில் நாம் ஏதாவது கேள்விகேட்க வேண்டும் என்று நினைத்தால் சொந்தப்பெயரை பயன்படுத்த வேண்டும். நமக்கு பிறக்கும்போது என்ன பெயர் வைத்தார்களோ அதை பயன்படுத்தித்தான் கேள்விகேட்க வேண்டும். வீட்டில் பயன்படுத்தும் செல்லப்பெயரை சொல்லி கேட்டால் அதில் பதில் கிடைக்காது.
நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் நம்முடைய செயல்களுக்கான எதிர்வினைதான். அதனால்தான் முடிந்தவரை அனைவருக்கும் நல்லது செய்யவேண்டும். யார் மீதும் பொறாமை கொள்ளக்கூடாது. அவன் பிறந்தான், அவன் ஜாதகப்படி நன்றாக வாழ்கிறான் என்று நினைத்தால் யார் மீதும் நமக்கு பொறாமை ஏற்படாது. பிறர் மீது நமக்கு ஏற்படும் பொறாமை எதிர்மறை எண்ணங்களாக மாறி நம்முடைய உடலைக் கெடுத்துவிடும்.