நாடாளுமன்ற தேர்தலில் பண புழக்கம் அதிகம் நடைபெற்றதாக கூறி தேர்தல் ஆணையம் வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலை நிறுத்தியது. தள்ளி வைக்கப்பட்டிருந்த வேலூர் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவு 9ம் தேதி நடைபெற்றது. தொடக்கம் முதலே அதிமுக ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், 11 மணிக்கு மேல் வெற்றி திமுகவின் பக்கம் நகர்ந்தது. அது கடைசி ரவுண்ட் வரை தொடர்ந்தது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஏசிஎஸ் 4,77,199 வாக்குகளும் பெற்றார்.வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் சுமார் 8,141 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.
கண்டிப்பாக வெற்றிபெற்று விடுவோம் என்ற எதிர்பார்த்த ஏசிஎஸ் தரப்பு இதனால் கடும் அதிர்ச்சி அடைந்ததாக அப்போதே ஒரு பேச்சு ஓடியது. கிட்டதட்ட நான்கு நாட்களாக அமைதியாக இருந்த அவர் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து வேலூர் தேர்தல் தோல்வி பற்றி பேசினார். இந்நிலையில், மக்களவை தேர்தலில் தோற்ற அவரை மாநிலங்களவை மூலம் நாடாளுமன்றம் அழைத்து செல்ல மத்திய பாஜக முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி கர்நாடக மாநிலத்தில் இருந்து அவர் பாஜக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஜாதி ரீதியாகவும், பண பலத்திலும் ஏசிஎஸ் பெரிய கையாக இருப்பதால் அவர் தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதற்கு உதவுவார் என்ற அடிப்படையில் இந்த முடிவை மத்திய பாஜக எடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.