“விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமன் வெளிப்படையாக பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தது மட்டுமில்லாமல் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்குச் செலுத்தி இருக்கிறார். அந்த வாக்கு சாவடியில் இருந்துகொண்டு அவர் தெரிவித்தது ‘நரேந்திர மோடியைவிட சிறந்த பிரதமர் யாரும் இல்லை’என்றார். நண்பர்களே, ஜிஹாதிஸும் காங்கிரஸாரும் பாக் பிடியில் சிக்கிக்கொண்ட வீரர்களை இந்தியாவுக்கு திரும்பி அழைத்து வராது. ஆனால், அபிநந்தன் இந்தியா திரும்பியது மட்டுமில்லாமல் நரேந்திர மோடிக்கு வாக்குச் செலுத்தியிருக்கிறார். அபிநந்தன், உங்களை வரவேற்கிறோம்” என்ற பதிவுடன் விங் கமாண்டர் அபிநந்தனை போல இருக்கும் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தில் இருப்பது அபிநந்தனா என்கிற கேள்வி பலருக்கு எழுந்திருக்கிறது. ஆனால், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது போல அந்த புகைப்படத்தில் இருப்பதால் பாஜக சமூக வலைதள பக்கங்கள், பாஜக ஆதரவாளர்கள் என அனைவரும் இதை பகிர்ந்து வருகின்றனர். சிலர் இது நிஜம் என்று நம்பி விங் கமாண்டரை விமர்சிக்கவும் செய்கின்றனர். ஆனால், இது உண்மையா என்று ‘ஸ்க்ரோல்’ பத்திரிகை அபிநந்தன் புகைப்படத்தையும், வைரலாக பரவிய புகைப்படத்தை வைத்தும் சரி பார்த்துள்ளது.
ஏன் ஒரு விங் காமண்டர் ஒரு தனிக்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாதா? எதற்கு இதை இவ்வளவு பெரிய பிரச்சனையாக்குகிறார்கள் என்றூ சிலர் கேட்கலாம். இந்திய விமானப்படையில் பணி புரியம் வீரர்கள் யாரும் அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது. விமானப்படை விதிமுறைகளின்படி 1969ஆம் ஆண்டிலிருந்து வீரர்கள் யாரும் பணியிலிருக்கும்போது அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
அபிநந்தனின் சாதாரண புகைப்படத்தையும், சமூக வலைதளத்தில் வைரலாக பரவும் இரு படங்களையும் வைத்து ஒப்பிட்டு பார்ப்போம்...
அபிநந்தனுக்கு உதட்டிற்கு கீழ் மச்சம் ஒன்று இருக்கிறது. வைரலாக பரவும் படத்தில் மச்சம் இல்லை.
வைரல் படத்தில் வலது கண்ணுக்கு கீழே ஒரு மச்சம் இருக்கிறது. அபிநந்தன் படத்தில் அந்த மச்சம் இல்லை.
அபிநந்தன் புகைப்படத்தில் அவருடைய முகவாய் நேராக இருக்கிறது. ஆனால், பாஜக ஆதரவாளர் என்று சொல்லப்படுபவரின் புகைப்படத்தில் அதுபோல இல்லை.
இறுதியாக இரண்டு படங்களை சற்று உத்துப்பார்த்தால் அபிநந்தன் புகைப்படத்திற்கும் பாஜக ஆதரவாளர் என்று சொல்லப்படுபவரின் புகைப்படத்திற்கும் வேறுபாடுகள் இருக்கிறது.