கொடநாடு கொலை வழக்கில் நக்கீரன் நடத்திய தொடர் புலனாய்வில், முக்கிய குற்றவாளிகளான சயானும், கனகராஜும் வந்த பாதையை நக்கீரன் ஆய்வு செய்து, கொடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்கள் யாரிடம் கொடுக்கப்பட்டது என்பதும் அது எப்படி எடப்பாடி பழனிசாமி கையில் போய்ச் சேர்ந்தது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கொடநாட்டில் கொள்ளையடித்துவிட்டு ஒரு காரில் கனகராஜும் சயானும் புறப்பட்டார்கள். அவர்களுக்கு அப்போது கொடநாடு கொள்ளையின்போது காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டது தெரியாது. கொடநாட்டில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் அறையிலிருந்த முன்னாள் அமைச்சர்களான ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் சொத்து டாக்குமெண்ட்டுகளை எடுத்துக்கொண்டு புறப்பட்ட கனகராஜுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணமிருந்தன.
எல்லாமே இண்டர்நெட் கால் எனப்படும் பிரைவேட் நம்பர்களிலிருந்து பேசப்பட்டது. அதில் ஒரு ஃபோன்தான் கொடநாட்டில் ஓம்பகதூர் என்கிற காவலாளி கொள்ளையின்போது இறந்துவிட்டார் என சொன்னது. பதற்றமடைந்த கனகராஜ், பல்வேறு எண்களுக்கு வாட்ஸ்அப் கால்களில் பேசினார். சயானும் பலரிடம் பேசினார். (இப்போது சயானுக்கு அந்த எண்கள் பற்றி ஞாபகமில்லை என போலீசில் தெரிவித்திருக்கிறார்).
அங்கிருந்து புறப்பட்ட கனகராஜ், கொடநாட்டிலிருந்து கோத்தகிரி வழியாக கோவை வருகிறார். கோவை நகரத்தில் சுங்கம் பகுதியில் அமைந்துள்ள சயானின் அறைக்குச் சென்று காலைக்கடன்களை முடித்துவிட்டு கோவையிலிருந்து பைபாஸ் சாலை வழியாக சேலம் நோக்கி பயணிக்கிறார். அவருடன் வந்த சயானை அந்த சாலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அமைந்துள்ள டோல்கேட்டை தாண்டியவுடன் உட்கார வைத்துவிட்டு, எதிர்ப்புறம் சாலையில் காரில் அவருக்காக காத்திருந்த அண்ணன் தனபாலை சந்திக்கிறார்.
கொடநாடு கொள்ளையை முடித்துவிட்டு வந்த தம்பி கனகராஜை, பெருந்துறைக்குச் செல்லும் சாலையில் கோவை - சேலம் வழியில் சந்திக்கும் இடத்தில் கட்டிப்பிடித்துப் பாராட்டிய அண்ணன் தனபால், கனகராஜுக்கு புதிய செல்ஃபோன்களையும், சிம் கார்டுகளையும் பரிசளிக்கிறார். அவற்றைப் பெற்றுக்கொண்டு புதிய எண்களுக்கு வந்த இண்டர்நெட் கால்களை அட்டண்ட் செய்தபடி சயானுடன் பயணிக்கிறார். (இந்த ஃபோன் கால்களையெல்லாம் போலீசார் கண்டுபிடித்துவிட்டனர்.)
அவர் நேராகச் சென்றது சேலம் புறநகர்ப் பகுதியான அரியானூர் என்கிற இடத்திற்கு. அங்கு ஒரு பழைய பேக்கரியும் செல்ஃபோன் கடையும் இருக்கிறது. அங்கே சயானை அமர வைத்துவிட்டு கொடநாட்டில் கொள்ளையடித்த டாக்குமெண்ட்டுகளோடு அரைமணி நேரம் காரில் பயணித்து யாரோ ஒருவரிடம் கொடுத்துவிட்டு வந்தார் என்கிறார் சயான்.
சயானின் இந்த ஸ்டேட்மெண்ட்டை வைத்து அவர்கள் இருவரும் எந்த இடத்திற்குப் போனார்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நக்கீரன் இறங்கியது. ஆனால் சயான் ஊட்டியைவிட்டு வெளியே போகக் கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித்திருக்கிறது. அதனால் சயானை அழைத்துக் கொண்டு செல்லக் கூடாது என தடை விதித்தார்கள் போலீசார். ஊட்டி நகர அரசு வக்கீலான ஆனந்த்தும் சயான் ஊட்டியைவிட்டு வெளியே போகக் கூடாது என தடை விதித்தார்.
இந்த வழக்கில் அடிப்படையான இந்த உண்மையை கடந்த 4 வருடங்களாக போலீசார் ஏன் கண்டுபிடிக்கவில்லை என போலீசாரிடமும் வழக்கறிஞர் ஆனந்த்திடமும் வாதிட்டோம். அவர்கள், நிபந்தனை ஜாமீனில் உள்ள சயான் அந்த நிபந்தனைகளை மீறினால் மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிடும் என எச்சரித்தார்கள். எனவே சயானை வீடியோ காலில் வைத்துக்கொண்டு, அவர் கொடநாட்டிலிருந்து எப்படி சேலம் போனார் என கிட்டத்தட்ட 3 மணி நேரம் அவருடன் பேசிக்கொண்டே பயணித்தோம்.
கோத்தகிரி வழியாக கோவைக்கு வந்த சயான், அங்கிருந்து நேராகப் பெருந்துறை செக் போஸ்ட்டைக் கடக்கும்வரை சரியாக பாதைகளை சொல்லிக்கொண்டே வந்தார். பெருந்துறைக்குச் செல்லும் அறிவிப்பு பலகை அமைந்துள்ள சாலையில் வந்து தனபாலை கனகராஜ் சந்தித்துவிட்டு சென்றார் என அந்த இடத்தை அடையாளம் காட்டினார்.
சயானும் கனகராஜும் பயணிக்கும் 2017 காலகட்டத்தில், சேலம் - கோவை சாலையில் பாலங்கள் இல்லை. எடப்பாடி முதலமைச்சராக இருக்கும்போது அவர் ஏகப்பட்ட பாலங்களைக் கட்டி சாலையின் அமைப்பையே மாற்றிவிட்டார். நம்முடன் வீடியோ காலில் பேசியபடி வந்த சயானுக்கு அந்த இடங்கள் அடையாளம் தெரியவில்லை. சுமார் ஒன்றரை மணிநேரம் சேலத்தை சுற்றி வந்தோம். அவர் சொன்ன முக்கிய அடையாளமான பேக்கரியும், செல்ஃபோன் கடையும் ஒருங்கே அமைந்துள்ள இடம் மாறாமல் அரியானூர் பகுதியில் இருந்தது.
அந்தக் கடைகள் 2017ஆம் ஆண்டிலிருந்து அங்கேயே அப்படியே இருக்கிறதா என கேட்டு உறுதிசெய்துவிட்டு சயானுக்கு காட்டினோம். அவர் தனது நினைவலைகளை உரசிப் பார்த்து வீரபாண்டிக்குப் பக்கத்தில் உள்ள அரியானூரில்தான் கனகராஜ் என்னை இறக்கிவிட்டார் என்று கூறினார். அந்த சாலையின் ஒட்டுமொத்த கட்டமைப்புமே 2019இல் அங்கு கட்டப்பட்ட பாலத்தினால் மாறிவிட்டது. மறுபடியும் மறுபடியும் சயானுக்கு அந்த பகுதிகளைக் காட்சிப்படுத்தி உறுதிசெய்துகொண்டோம். ஆனால் அங்கிருந்து, கனகராஜ் அரைமணி நேர பயணத்தில் எங்கு சென்றார் என சயானுக்கு தெரியவில்லை. அங்கிருந்து வீரபாண்டி வழியாக ஆட்டையாம்பட்டி மற்றும் திருச்செந்தூர் போகக்கூடிய சாலையில்தான் கனகராஜ் சென்றார் என சயான் கூறினார். நாம் அந்த சாலையை நோக்கி செல்லும்போது அங்கு ஒரு பெரிய அதிமுக மன்றம், எடப்பாடி பழனிசாமி, சேலம் இளங்கோவன் படத்துடன் அமைந்திருந்தது.
நாம் அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களிடம் "இளங்கோவன் இங்கு வருவாரா?'' எனக் கேட்டோம். இளங்கோவனின் வீடு புத்திரகவுண்டம்பாளையம் என்றாலும் இந்தப் பகுதியில் கனகராஜ் சயானை இறக்கிவிட்ட அரியானூரிலிருந்து 4கி.மீ. தொலைவில் உள்ள ஆட்டையம்பட்டி என்கிற ஊருக்கு அடிக்கடி வருவார் என்று சொன்னார்கள். நாம் ஆட்டையம்பட்டிக்குச் சென்றோம். அங்குள்ள அதிமுக மற்றும் திமுக பிரமுகர்களிடம் "இளங்கோவன் யார் வீட்டுக்கு வருவார்?'' என விசாரித்தோம். "ஆட்டையம்பட்டியிலுள்ள டி.பி.எஸ். திரையரங்கத்திற்கு எதிரே உள்ள ஒரு வீட்டிற்கு இளங்கோவன் வருவார்'' என்று அவர்கள் சொன்னார்கள்.
அந்த வீடு டி. சிவக்குமார் என்பவருக்கு சொந்தமானது. அந்த சுமாரான கிராமத்தில் இரண்டு பிரம்மாண்டமான வீடுகளை சாலை ஓரத்திலேயே சிவக்குமார் கட்டியிருந்தார். ராஜபாளையம் என்கிற ஊராட்சிக்குத் தலைவராக முன்பு பதவி வகித்தவர் இந்த சிவக்குமார்.
திமுகவிலிருந்து அதிமுகவிற்கு சென்ற இவர், இளங்கோவனுக்கு மிக நெருக்கமான நண்பரானார். காலப்போக்கில் அவரது பினாமியாகவும் மாறினார். இளங்கோவன் வீட்டிற்கு காலையும் மாலையும் தவறாமல் செல்வது சிவக்குமார் வழக்கம். சிவக்குமாரின் வீட்டிற்கும் இளங்கோவன் வந்து செல்வார். ஜெயலலிதாவிடம் டிரைவராக இருந்த கனகராஜும், இளங்கோவனுக்கும் சிவக்குமாருக்கும் பழக்கமான நண்பர்கள் என ஆட்டையம்பட்டியைச் சார்ந்த திமுக மற்றும் அதிமுக பிரமுகர்கள் நம்மிடம் தெரிவித்தார்கள்.
அரியானூரிலிருந்து அரைமணி நேரத்தில் சென்று திரும்புவது என்றால் ஆட்டையம்பட்டியிலுள்ள சிவக்குமாரின் வீட்டிற்குத்தான் கனகராஜ் வந்திருக்க வேண்டும். அவர் அங்கு அடிக்கடி வருவார் என ஆட்டையம்பட்டியிலுள்ள அரசியல்வாதிகள் தெரிவித்தார்கள்.
நாம் நேராகச் சென்று சிவக்குமார் வீட்டை படம் எடுத்தோம். நாம் படமெடுப்பதைக் கண்ட சிவக்குமார், 4, 5 பேர் புடைசூழ வந்து... "நீங்கள் யார்?'' எனக் கேட்டார். நாம் அவரிடம் "உங்களிடம் பேச வேண்டும்'' எனக்கூறி, "உங்களுக்கு இளங்கோவனை தெரியுமா?'' எனக் கேட்டோம். அவர், "தெரியும் எதற்காகக் கேட்கிறீர்கள்?'' என்று திருப்பிக் கேட்டார்.
நாம், "கொடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட அமைச்சர்களின் சொத்து ஆவணங்களை உங்களிடம்தான் கொண்டுவந்து கொடுத்தார் என ஆட்டையம்பட்டியில் உள்ளவர்கள் உங்களுக்கும், ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜுக்கும், இளங்கோவனுக்கும் உள்ள முக்கோண நட்பை அடிப்படையாக வைத்துச் சொல்கிறார்கள்'' என்றோம். அவர் அதை ஏற்கவில்லை. மறுத்தார்.
ஆனால், இந்த விவரத்தைப் பற்றி நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள் அனைவரும், "இது உண்மையாக இருக்க 100 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது'' என்று நக்கீரனின் புலனாய்வு பயணத்தைப் பாராட்டினார்கள்.
போலீசின் பயணமும் தெளிவாக இருந்தால் குற்றவாளிகள் தப்பவே முடியாது.