கேப்டன்' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அதிரடி கதாநாயகன் விஜயகாந்த், சினிமா துறையில் தனது 40 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அதற்காக படப்பை சாலையிலுள்ள கரசங்காவில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு விஜயகாந்துக்கும் அவர்களுக்குமான நட்பு, அவரது அரசியல் பயணம் ஆகியவற்றைப் பற்றி புகழ்ந்து பேசினர். ஆரம்ப காலத்தில் விஜயகாந்துடன் சில படங்களில் இணைந்து நடித்த நடிகரும், அரசியல் களத்தில் விஜயகாந்த்தை கடுமையாக விமர்சித்தவருமான சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இவ்விழாவில் விஜயகாந்த் குறித்துப் பேசியது...
"நான் இந்த மேடையில் இங்கு நிற்கிறேன் என்றால், அதற்கு காரணம் கேப்டன் விஜயகாந்த்தான். எங்களின் அரசியல் பயணம் வேறு, வேறாக இருக்கலாம், ஆனால் நான் ஒரு நல்ல மனிதருக்காக இங்கு வந்திருக்கிறேன். இந்த கலையுலகத்தில் பலரை சந்தித்திருக்கிறேன். அதில் எனக்கு வாழ்வு தந்த ஒருவர் என்று சொன்னால் அது விஜயகாந்த்தான். நாங்கள் இருவரும் ஒரே மேடையில் பேசவேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த எனக்கு சுதீஷ் அவர்களும், என் கேப்டன் அவர்களும் இந்த வாய்ப்பை அளித்ததற்கு நன்றிகள்.
பலர் எங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் கேப்டனை பற்றிய மீம்ஸ் வந்தால் கூட அதை நான் பார்க்கவே மாட்டேன். இந்த மீம்ஸ் போடுபவர்களுக்கு கேப்டனை பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் எனக்கு அவரை நன்கு தெரியும். தெரியாதவர்களை பற்றி பேசுபவன் முட்டாள் என்று சொல்பவன் நான். அதேபோல கேப்டனை பற்றி எதுவும் தெரியாமல் மீம்ஸ் போடுபவர்களும் அவ்வாறுதான். விஜயகாந்த் என்ற ஒரு நல்ல மனிதரை பற்றி உங்களுக்கு தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்".
"நான் கலைத்துறைக்கு வந்து ஒரு காலகட்டத்தில் பெரும் துன்பத்தை சந்திக்க நேர்ந்தது. துன்பம் என்றால் என் பணத்தை எல்லாம் இழந்துவிட்டேன், வெறும் கையுடன் மவுன்ட் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது தான் கேப்டனின் மேக்கப்மேன் ராஜு என்னை ராஜாபாதர் தெருவுக்கு அழைத்து சென்று கேப்டனை சந்திக்க வைத்தார். அப்போதுதான் இயக்குனர் செல்வமணியுடன் சேர்ந்து ஒரு படம் நடித்துக்கொண்டிருந்தார். அதில் எனக்கு வில்லன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. படம் முடிந்து டப்பிங் போகும்போது, என்னை அழைத்து கேப்டன் சொல்கிறார். இதில் நீங்கள் நல்ல பெயர் வாங்குவீர்கள் என்று. யார் அவ்வாறு சொல்வார்கள். நல்ல மனிதராக இருந்தால் மட்டுமே ஒரு வில்லனாக நடிக்க வந்தவனுக்கு அதிக வாய்ப்பு அளிக்கமுடியும். அவர் சுயநலம் இல்லாத மனிதர். அன்று தொடங்கியது அவருடனான நல்ல பழக்கம், நான் கேப்டன் பிரபாகரனில் நடிக்கும் போது எனக்கு கழுத்து முறிவு ஏற்பட்டது. இதுவே வேறு ஒருவராக இருந்தால், என் கதாபாத்திரத்தை குறைத்துவிட்டு படம் எடுக்க கிளம்பியிருப்பார்கள். ஆனால், கேப்டனோ எனக்காக படத்தை ஒத்திவைத்தார். நான் குணமாகி வரும்போதும் என்னை அக்கறையுடன் கவனித்து நடிக்க வைத்தார். நான் என் உள் மனதை தொட்டு சொல்கிறேன் நல்ல மனிதர், வள்ளல் என்றால் அது விஜயகாந்த்தான்"
"நாங்கள் இருவரும் அரசியல் பயணத்தில் இருதிசைகளில் பயணித்து கொண்டிருக்கலாம், ஆனால் எங்கள் இருவரின் எண்ணம் ஒன்று. அது மக்களுக்கு நல்லது செய்வதுதான். சினிமா படப்பிடிப்பில் எல்லாருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடிய பழக்கம் அவருக்கும் உண்டு, எனக்கும் உண்டு. அப்படி எல்லோரும் இருக்க மாட்டார்கள். தற்போது கேரவனில் இருந்துகொண்டு யாரையும் பார்க்க மாட்டேன் என்கிறார்கள் ஹீரோக்கள். நாங்கள் எல்லோருடனும் கலந்து கொண்டு சாப்பாடு நன்றாக இருக்கிறதா என்று கேட்போம். உணவில்லை என்றால் ராஜாபாதர் தெருவுக்கு போங்க அங்க சாப்பாடு இருக்கும் என்று சொல்வோம். அங்க யார் இருக்கா? என்று கேட்டால் விஜயகாந்த் இருக்கிறார் அதனால்தான் சொல்கிறோம் என்று கூறுவோம். பலர் நல்லவர்கள் போன்று தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்கள். நான் இந்த மேடையில் அதைப்பற்றி சொல்லமாட்டேன். ஆனால், அவர்கள் எல்லாம் நல்லவர்கள் கிடையாது"
"அவர்கள் எல்லாம் வீரர்கள் உள்ள களத்திலே, வீரர்களாக வரமுடியாமல். வீரர்கள் இல்லாத களத்திலே, வீரர்களாக வர நினைக்கின்றனர். போருக்கு செல்பவன், எதிரே இருக்கும் படை பலமாக இருக்கும்போது அதை எதிர்ப்பவன் வீரன். பலவீனமாக இருக்கும் போது அதை எதிர்ப்பவன் வீரன் அல்ல. இந்த மேடையில் இருக்கும் சத்யராஜாக இருக்கட்டும், விஜயகாந்தாக இருக்கட்டும் என்னை உட்பட நாங்கள் வீரர்கள் தான். எப்பொழுதும் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் நாங்கள் தான். ஆக நாமெல்லாம் ஒன்றுபடும்போது அது சிறப்பாக இருக்கும். பத்திரிகை தோழர்கள் இதைவைத்து இருவரும் கூட்டணி சேர்கிறார்களா என்று கேள்வி எழுப்பாதீர்கள் ? காலத்தின் கட்டாயமாக இருந்தால் அதுவும் நடக்கலாம். ஏன் நாங்கள் இருவரும் தானே, சிறப்பாக சினிமா சங்கத்தை நிறுவினோம். தற்போதுள்ள சங்க நிர்வாகிகள் என்னை உறுப்பினரிலிருந்தே தூக்கி எறிந்துவிட்டார்கள். சரி அதைப்பற்றி பேசக்கூடாது"
"தமிழர்களை ஒருவன் அருவாள் எடுத்துக்கொண்டு வெட்டவருகிறான் என்றால், உங்களை ஓடிவந்து முதலில் காப்பாற்றுபவர்கள் நாங்களாகத்தான் இருக்கும். வீரர்கள் போன்று தற்போது நடித்துக்கொண்டிருப்பவர்கள் அல்ல. உண்மையான வீரர்களை பாருங்கள், உண்மையான தமிழனை பாருங்கள். யார் உண்மையாக தமிழ் உணர்வு கொண்டவன், யார் தமிழர்களுக்காக உண்மையாக குரல் கொடுப்பவன் என்று சிந்தித்து பாருங்கள் மக்களே. தமிழ்நாட்டில் வெற்றிடம் இருக்கு என்று சொல்கிறார்கள், நான் சொல்கிறேன் இங்கு இருப்பவர்களை அடையாளம் காட்ட தெரியவில்லை. அதனால் முதலில் அடையாளம் காட்ட தெரிந்துகொள்ளுங்கள். நாற்பது ஆண்டுகாலம் மட்டுமல்ல மேலும் பல நூறாண்டுகள் கேப்டன் அவர்களே எங்களுக்கு தலைவனாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் இந்த மேடைக்கு வந்து பேசவேண்டும் என்று நீங்கள் எல்லாம் எதிர்பார்த்தீர்களா என்று எனக்கு தெரியவில்லை நான் இது போன்ற மேடையை எதிர்பார்த்தேன். சட்டமன்றத்தில் நாங்கள் இருவரும் வேறுமாதிரியாகத்தான் பேசுவோம், இதெல்லாம் அரசியலில் சாதாரணமப்பா. கடைசியாக ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவரை பற்றி மீம்ஸ் போடுபவர்களுக்கு எந்த தகுதியும் இல்லவே இல்லை. நீங்கள் எல்லாம் அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய இடத்தில் இல்ல, அவன்தான் அதை விளங்கக் கூடிய இடத்தில் இருக்கான். இல்லாவிட்டால், விளங்காமல் போய்விடுவான்", நன்றி