கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பாவை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமித்துள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார் தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன்.
சூரப்பாவைவிட தகுதியும், திறமையும் அதிகமுள்ள தமிழக கல்வியாளர்கள் 25 பேரின் பட்டியலை கொடுக்க தயார். அவர்களில் ஒருவரை கர்நாடகத்திலோ அல்லது மத்திய அரசின் பல்கலைக்கழகங்களிலோ துணைவேந்தராக நியமிக்கும் திறன் ஆளுநருக்கு உண்டா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாரே?
அந்தத் தகுதியும், திறமையும் உள்ள இவர்கள் மற்ற பல்கலைக்கழங்களிலும், மற்ற மாநில பல்கலைக்கழங்களிலும் மனு செய்ய வேண்டும். அங்கு உள்ள தேர்வு குழு இவர்களை நியமிப்பதற்கு வாய்ப்பு இருந்தால் நிச்சயமாக நியமிப்பார்கள். நாகலாந்து பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழர்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழர்கள் என்ற காரணத்தினால் ஒதுக்கப்படுகிறார்கள் அல்லது தமிழர்களை மனு போட விடுவதில்லை, மனு செய்ய அனுமதிப்பதில்லை என்று சட்டம் இருக்கிறதா? ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றால் மற்றவர்களெல்லாம் தகுதியில்லாதவர்கள் அல்ல. அந்தப் பொறுப்புக்கும், தகுதிக்கும் அவர் சரியாக இருப்பார் என்று தேர்வு குழு முடிவு செய்கிறது. இவர்கள் சொல்வதுபோல் ஒரு தமிழரை தேர்வு செய்திருந்தாலும், ஒரு குறிப்பிட்ட ஜாதி இருக்கிறது, அவர் குற்றப் பின்னணி உள்ளவர், சிலருக்கு வேண்டியவர் என குற்றச்சாட்டு எழும். தேர்வு குழு நியாயமாக நடந்ததா, வெளிப்படையாக நடந்ததா என்று பார்க்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் ஐஐடியில் 6 வருட காலம் பணியாற்றியுள்ளார். அந்த ஐஐடியில் வருட பட்ஜெட் 300 கோடி ரூபாய். அப்படிப்பட்ட நிறுவனத்தை நடத்தியவர்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பஞ்சாப்பிலிருக்கும் இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் இயக்குநராக சூரப்பா இருந்தபோது, புதிய கட்டடங்கள் கட்ட 760 கோடி ஒதுக்கப்பட்டும் 5 ஆண்டுகளாக அதை பயன்படுத்தவில்லை. இதனால் கட்டுமானச் செலவினங்கள் 1958 கோடியாக உயர்ந்தது. இதனை கண்டறிந்த தலைமை கணக்கு தணிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தனது பணிக்காலத்தில் பெரும்பாலான நாட்கள் பணிக்கு வந்ததே இல்லை. நிர்வாகம் சார்ந்த முடிவுகளை விரைந்து எடுத்ததில்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறதே?
இன்று உள்ள சமூக வலைதளங்களை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் ஒரு விஷயத்தை எழுத முடியும். ஒருவரை பிடிக்கவில்லை என்றால் 10 காரணங்களை அவர்களாகவே பட்டியலிட முடியும். பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்திருக்கிறது என்றால் அதற்கான ஆதாரம் எங்கே உள்ளது? ஒதுக்கப்பட்ட பணத்தில் கட்டிடம் கட்டவில்லை என்றால், அதில் ஏதாவது சட்ட சிக்கல் இருந்ததா, நீதிமன்ற வழக்கு ஏதேனும் இருந்ததா என்று எதுவும் தெரியாது. பொதுவான குற்றச்சாட்டு.
தமிழகத்தில் உயர்கல்வித்துறை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு தெரியும். தமிழகத்தில் துணைவேந்தர் பதவிக்கு மனு செய்வதற்கு யோசித்தார்கள். ஏனென்றால் கோடிகளை கொடுத்து விலைக்கு வாங்குபவர்களும், அரசாங்கத்திற்கு வேண்டியப்பட்டவர்களும், தனிப்பட்ட காரணங்களுக்காக துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்ட வரலாறுகள்தான் தமிழகத்தில் அதிகமாக உண்டு கடந்த 10 ஆண்டுகளாக. நல்லவர்களும், திறமைசாலிகளும் மனு போடுவதற்கு கூட விருப்பம் இல்லாமல் இருந்தார்கள். பேராசிரியர்கள் நியமனத்திற்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் கணபதி அவர்கள் 40க்கும் மேற்பட்டவர்களிடம் 30 லட்சம், 40 லட்சம் பெற்றுக்கொண்டு பணி வழங்கினார் என்று ஒரு வருடத்திற்கு மேலாக குற்றச்சாட்டு இருந்தது. சமீபத்தில்தான் அவர் கைது செய்யப்பட்டார். இதேபோல ஒவ்வொரு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மீதும் எத்தனை குற்றச்சாட்டுக்கள். அவர்கள் நியமிக்கப்பட்டதன் அரசியல் பின்னணி என்ன. தேர்தலில் நின்ற கட்சிக்காரர்கள், மந்திரிகளிடம் பி.ஏ.வாக இருந்தவர்கள் என தனித்தனியாக லிஸ்ட் எடுக்கலாம். உயர்கல்வித்துறை சீரடைய வேண்டும் என்றால் தயவு செய்து கல்வியைவிட்டு அரசியல் வாதிகள் தள்ளி நிற்பது நல்லது.
தற்போதுதான் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரின் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்ப்போம். அவர்தான் திறமைசாலி மற்றவர்கள் திறமையில்லாதவர்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. நியமனங்களுக்கு அரசியல் காரணங்களை சொல்லி எதிர்க்கின்றபோது, அதே அரசியல் காரணங்களுக்காக பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளோம்.
2016ல் இருந்து இந்த பணியிடம் காலியாக உள்ளது. இத்தனை நாள் இந்த பணியிடத்தை நிரப்பாமல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி போராட்டங்கள் நடக்கும் நேரத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை துணை வேந்தராக நியமிக்கிறார்களே என்று கேட்கிறார்கள்?
இதற்கு முன்பாக அமைக்கப்பட்ட தேர்வு குழுவினுடைய நீதிபதி அந்தப் பணியை முதலில் ஏற்றுவிட்டு அதற்கு பின்னர் முடியாது என்று கூறிவிட்டார். அதற்கு பின்பு ஆளுநர் மாறி வந்திருக்கிறார். புதிய ஆளுநர் வந்த பின்னர் மீண்டும் தேர்வுக் குழு போடப்படுகிறது. ஒரு ஆளுநர் பல்வேறு பணிகளை செய்ய வேண்டியவர். காவிரி பிரச்சனை 50 ஆண்டுகளாக உள்ளது. இந்த பிரச்சனையை காரணம் காட்டி ஆளுநர் தனது பணிகளை செய்யாமல் இருக்க முடியாது. இவை இரண்டுக்கும் முடிச்சுப் போட வேண்டிய அவசியம் கிடையாது. இது தனித்துறை, அது தனித்துறை.
துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. துணைவேந்தர் நியமிக்கப்பட்டதில் தமிழக அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. துணைவேந்தரை ஆளுநர் தன்னிச்சையாக நியமித்துள்ளார் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளாரே?
இதற்கு முன்பு நியமனங்கள் எப்படி நடந்தது என்று சொல்ல அவர் தயாரா?