
சுந்தர்.சி மற்றும் வடிவேலு கூட்டணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உருவாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’. இப்படத்தை சுந்தர்.சி இயக்கி வடிவேலுவுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சுந்தர் சியின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து வழங்குகிறது. இப்படத்தில் கேத்ரின் தெரசா கதாநாயகியாக நடித்திருக்க முனீஷ்காந்த், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்திருக்கிறார்.
இப்படம் வருகிற 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி படத்தின் இயக்குநர் சுந்தர் சி மற்றும் நாயகி கேத்ரின் தெரசா ஆகியோரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். அப்போது படம் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு இரண்டு பேரும் பதிலளித்தனர். இதில் சுந்தர் சி-யிடம் வடிவேலுவுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அதாவது 15 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் இணைந்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “வெளிப்படையா சொல்லணும்னா அந்த கேப்ப நாங்க ஃபீல் பண்ணல. கேப்பே இல்லாத மாதிரிதான் ஃபீல் பண்ணோம். நேத்து ஷூட் முடிச்சு இன்னைக்கு ஆரம்பிக்கிறோம்ன்ற மாதிரி இருந்துச்சு. அது மட்டுமில்லாம ஷூட் போறதுக்கு முன்னாடி வடிவேலு நிறைய டிஸ்கஷன் போச்சு. ஆனால் ஷூட்டிங்க் ஸ்பாட்ல வடிவேலுடைய கெட்டப்பை பார்க்க ஆவலா இருந்துச்சு. மத்தபடி அது எப்போதும் போல ஒரு நாள் வேலைன்னு தான் தோணுச்சு. இரண்டு பேருக்குமே 15 வருஷம் கேப் விழுந்திருச்சுன்னு ஃபீல் வரல” என்றார்.