
காவலர்களுக்கு மட்டும் ஏன் சங்கங்கள் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அமர்வு நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரையைச் சேர்ந்த காவலர் செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற கிளையான மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'தமிழக காவல்துறையில் அதிக பணிச்சுமையை இருக்கிறது. ஓய்வின்றி காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனால் பல்வேறு பிரச்சனைகளை தனிப்பட்ட வாழ்க்கையில் காவலர்கள் எதிர்கொள்கிறார்கள். அவர்களுடைய குறைகளை தீர்க்கும் வகையில் காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை வார விடுமுறை வழங்க வேண்டும் கடந்த 2021 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது வரை இந்த அரசாணை நடைமுறைப்படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 'கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் காவலர்களுக்கு தனியாக சங்கம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் இதுவரை காவல்துறையினருக்கு என தனியாக சங்கம் இல்லை. ஏன் அரசு அதிகாரிகள் அந்த அரசாணையை நடைமுறைப்படுத்தவில்லை.
ஆசிரியர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் அவர்களுடைய பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல சங்கங்கள் இருக்கிறது. ஆனால் காவல்துறையினருக்கு மட்டும் ஏன் சங்கம் இல்லாதது ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா?' என கேள்வி எழுப்பினார். மேலும் 'தமிழக முதல்வரால் வெளியிடப்பட்ட இந்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றாதது வேதனையை தருகிறது' என்றும் கருத்து தெரிவித்தார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 'விளம்பர நோக்கத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது' என தெரிவித்தார். அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதி, '2021 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. அப்பொழுது அந்த அரசாணையும் விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டதா?' எனக் கேள்வி எழுப்பி வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.