தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் வரும் செப்டம்பர் 28, 29 ஆகிய இரண்டு நாட்களில் ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அறிவிப்பின்படி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சியில் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்னும் 24 மணிநேரத்தில் மத்திய கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 24 மணிநேரத்தில் உருவாக இருக்கும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையை நோக்கி தீவிரமடையும். வடமேற்கு, மத்திய மேற்கு மாநிலங்களிலிருந்து தென்மேற்கு பருவமழை இன்னும் 3 நாட்களில் விலகத் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.