தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்து கொண்டிருக்கும் தனுஷ், அவ்வப்போது டைரக்ஷன் செய்வதையும் தன் பாணியாக வைத்திருக்கிறார். அந்த வகையில் இவரது டைரக்ஷனில் வெளியான ப.பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது 50 வது படத்தை அவரே இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கும் திரைப்படம் ராயன். தனுஷ் இயக்கி நடிக்கும் படம் என்றதுமே இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா, இல்லையா?
சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த தனுஷ் தன் தம்பிகள் சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் தங்கை துஷாரா விஜயனுடன் சென்னைக்கு பிழைப்பு தேடி வருகிறார். வந்த இடத்தில் அவர்களுக்கு செல்வராகவன் அடைக்கலம் தர அவர்களுடனே இந்த நால்வரும் வளர்கின்றனர். தந்தை இல்லாத குறையைத் தீர்ப்பது போல் தனது தம்பிகளையும் தங்கையையும் தகப்பன் போல் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளும் தனுஷ் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் குடும்பத்தை சாந்தமாக நடத்திக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே அந்த ஏரியாவில் மிகப் பெரும் டான்களாக இருக்கும் பருத்திவீரன் சரவணன் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் இடையே பகை நிலவுகிறது. இவர்களை தீர்த்து கட்ட பிரகாஷ்ராஜ் தலைமையிலான போலீஸ் ஒரு பக்கம் திட்டம் தீட்டி வருகிறது. இன்னொரு பக்கம் தனுஷின் முதல் தம்பி சந்திப் கிஷன் அவ்வப்போது ரவுடித்தனம் செய்து கொண்டு தனுஷ் குடும்பத்திற்கு பெரும் குடைச்சல் கொடுத்து வருகிறார். அந்த சமயம் பருத்திவீரன் சரவணன் உடைய மகன் ஒரு கேங் வாரில் கொல்லப்படுகிறார். அந்த பழி சந்திப் கிஷன் மேல் விழ மொத்த கேங்கையும் போட்டுத் தள்ள தனுஷ் களத்தில் குதிக்கிறார். இதனால் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் எந்த அளவு பாதிப்பு ஏற்பட்டது? ரவுடிகளிடமிருந்தும், போலீஸிடம் இருந்தும் தனுஷ் மற்றும் குடும்பத்தினர் தப்பித்தார்களா, இல்லையா? என்பதே ராயன் படத்தின் மீதி கதை.
இது நாள் வரை நடிப்பில் அசுரத்தனமான பெர்ஃபாமன்சை கொடுத்து கைதட்டல் பெற்று வரும் தனுஷ், இந்த முறை டைரக்ஷனிலும் அதே கைதட்டல்களை இப்படத்தின் மூலம் பெற்றிருக்கிறார். படம் ஆரம்பித்தது முதல் இறுதிவரை ஒவ்வொரு காட்சியையும் மிக நேர்த்தியாகவும் எதார்த்தமாகவும் ரசிக்கும்படி செதுக்கி இப்படத்தை ஒரு தரமான படமாக கொடுத்திருக்கிறார். ஒரு இயக்குநராக காட்சிக்கு காட்சி அவருடைய உழைப்பும் மெனக்கடலும் மிக அதிகமாகவே நன்றாக தெரிகிறது. அந்த அளவு ஒவ்வொரு காட்சியையும் மிக சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார். அதேபோல் ஒரு கேங்ஸ்டர் படத்திற்கு என்ன தேவையோ அந்த அளவு எதார்த்தமான கதாபாத்திரங்களையும் அவர்களிடம் எதார்த்தமான நடிப்பையும் மிக சிறப்பாக வெளிக்கொண்டு வந்து இப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார். படத்தின் முதல் பாதி மிகவும் சுவாரஸ்யமாக எதார்த்தமான திரை கதையோடு ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. அதேபோல் ஆரம்பிக்கும் இரண்டாவது பாதி சற்றே கதையிலிருந்து வேறு பக்கம் விலகி அதே போல் எதார்த்தங்களிடமிருந்தும் சற்று விலகி வேறொரு பாதையில் பயணித்து முடிவில் ஒரு பழி தீர்க்கும் கதையாக முடிந்திருக்கிறது.
படத்தின் மேக்கிங் திரைகதையும் உலகத்தரம் வாய்ந்ததாக அமைந்திருந்தாலும் படத்தில் ஏனோ ஒரு ஜீவன் இல்லாமல் இருப்பது படத்திற்கு மைனஸ். ஒரு கதையாக பார்க்கும் பொழுது இதில் பெரிதாக கதை இல்லாமல் இருப்பதும் சற்று அயற்சியை கொடுத்திருக்கிறது. அதேபோல் இரண்டாம் பாதியில் சில லாஜிக் மீறல்களும் குறிப்பாக படத்தின் மையக் கருவிலேயே அந்த லாஜிக் மீறல்கள் இருப்பதால் அதுவும் படத்திற்கு சற்று பாதகமாக அமைந்திருக்கிறது. இருந்தும் ஒரு முழு படமாக இதை பார்க்கும் பட்சத்தில் தனுஷ் ரசிகர்களுக்கும், இந்த கால இளைஞர்களுக்குமான படமாக இப்படம் அமைந்து இருக்கிறது. குறிப்பாக படத்தில் வரும் சென்டிமென்ட் ஆன விஷயங்கள் எந்த அளவு ரசிகர்கள் தங்களுக்குள் அதை கனெக்ட் செய்கிறார்களோ அந்த அளவு இந்த படம் வரவேற்பை பெறும். அந்த வரவேற்பு எந்த அளவு என்பதை சற்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்...
படத்தின் நாயகன் தனுஷ் வழக்கம்போல் தன் அசுரத்தனமான நடிப்பை இந்த படத்திலும் கொடுத்து ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். பொதுவாக பக்கம் பக்கமாக வசனம் பேசும் தனுஷ் இந்த படத்தில் அதிகமாக வசனங்களே பேசாமல் மௌனமாகவே இருந்து கண் பார்வையிலேயே தான் ஒரு தேர்ந்த நடிகன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார். இவருக்கு பக்கபலமாக தம்பிகளாக வரும் சந்திப் கிஷனும் காளிதாஸ் ஜெயராமும் அவரவர் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். குறிப்பாக சந்திப் கிஷனின் காதலியாக வரும் அபர்ணா பாலமுரளி மிக சிறப்பான யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி சூரரைப் போற்று படத்திற்குப் பிறகு இந்தப் படத்திலும் பெயர் சொல்லும் அளவிற்கு மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவரது துருதுருப்பான நடிப்பும் அவருடைய கதாபாத்திர வடிவமும் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
தனுஷ் தங்கையாக வரும் துஷாரா விஜயன் நடிப்பு மட்டுமல்லாமல் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் இப்படத்திற்கு கொடுத்து கொஞ்சம் சண்டையும் செய்து கவர்ந்திருக்கிறார். நடிப்பில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அதனை காட்டிலும் ஆக்சன் காட்சிகளிலும் அதகலப்படுத்தி இருக்கிறார். தனுஷ் குடும்பத்திற்கு அடைக்கலமாக இருக்கும் செல்வராகவன் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வில்லனாக வரும் பருத்திவீரன் சரவணன் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். முக்கிய வில்லனாக வரும் எஸ்.ஜே சூர்யா வழக்கமான பரபரப்பு இல்லாமல் பிளாட்டான வில்லதனம் காட்டி பயமுறுத்துகிறார். முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதியில் தான் அவர் அதிக நேரம் வருகிறார். வந்த நேரத்தையும் மிக சிறப்பாக பயன்படுத்தி நேர்த்தியான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கவருகிறார். போலீசாக வரும் பிரகாஷ்ராஜ் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அனுபவம் நடிப்பின் மூலம் செதுக்கியிருக்கிறார். மற்றபடி உடனடித்த மற்ற கதாபாத்திரங்களும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றனர்.
இப்படத்தின் இன்னொரு நாயகனாக பார்க்கப்படுவது இசை புயல் ஏ.ஆர் ரகுமானின் பின்னணி இசை. இவரின் தெறிக்க விடும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. முக்கியமான கேங்ஸ்டர் சம்பந்தப்பட்ட காட்சிகளும், அதற்குரிய ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பான இசையை கொடுத்து தியேட்டரில் கைத்தட்டல்களை பெருக்கி இருக்கிறார். குறிப்பாக அடங்காத அசுரன் பாடல் இன்றைய காலை இளைஞர்களின் வைபாக அமைந்திருக்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு படத்தை வேறு ஒரு தரத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. இப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆக இவரது ஒளிப்பதிவு பார்க்கப்படுகிறது. ஜாக்கியின் கலை இயக்கம் படத்திற்கு இன்னொரு மிகப்பெரிய பிளஸ். படத்தில் வரும் செட்டுகள் அனைத்தும் அப்படியே ஒரிஜினலாக இருப்பது படத்திற்கு சாதகமாக அமைந்திருக்கிறது.
தனது ஐம்பதாவது படத்தை வித்தியாசமாகவும் அதே சமயம் ரசிக்கும்படியும் கொடுத்து இயக்குநராக தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் இயக்குநர் தனுஷ். முதல் பாதியில் இருந்த கிரிப் இரண்டாம் பாதியிலும் கொடுத்திருந்தால் இந்த படம் தனுஷ் கேரியரில் இன்னொரு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்திருக்கும்.
ராயன் - ராவான ரவுடி!