ராமநாதபுரம் தேவிபட்டினத்தை சேர்ந்த முனியசாமி என்பவர் இறால் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவரின் தொழிலை மேம்படுத்துவதற்காக ரூ.15 கோடி கடன் வாங்கித் தருவதாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார். அதற்கு ஆவண செலவுக்காக ரூ.14 லட்சம் தர வேண்டும் எனக் கூறி, கடந்த 2019ஆம் ஆண்டு முனியசாமியிடம் பெற்றுள்ளார். பின்பு போலியான ஒரு காசோலையையும் கொடுத்துள்ளார். கடனும் வாங்கி கொடுக்காமல் பெற்று கொண்ட ரூ.14 லட்சத்தையும் திருப்பி கொடுக்காததால் முனியசாமி அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து பணத்தை வாங்கிவிட்டு போலி செக் கொடுத்துள்ளதாக சீனிவாசன் மீது முனியசாமி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார் பவர் ஸ்டார். இந்த நிலையில், செக் மோசடி வழக்கில் ஆஜராகாமல் இருந்ததற்காக, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி நிலவேஸ்வரன் பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.