![Upendra and Kichcha Sudeep starring Kabzaa release date announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/oqvGbbRHTMaKuCy5BdlqjgP-3Xq_ZJpzrE5GIHOKlWU/1674652658/sites/default/files/inline-images/285_8.jpg)
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருக்கும் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடித்துள்ள படம் 'கப்ஜா'. கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.சந்திரசேகர் தயாரிக்க, நடிகை ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, சுதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர்.சந்துரு இயக்கியுள்ள இப்படத்திற்கு ரவி பஸ்ஸூர் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளான மார்ச் 17 ஆம் தேதியன்று, அவருடைய புகழைக் கொண்டாடும் வகையில் இப்படம் வெளியாகிறது. இப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், “1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்க முடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக்கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் படம் தான் கப்ஜா” என்றார்.