![ghfsbfsds](http://image.nakkheeran.in/cdn/farfuture/P2jzwahU9r9FIANn3oEX349OR7DQF4zW_NSpn8LfiSk/1623649940/sites/default/files/inline-images/E30CWpfUcAcyL8h.jpg)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துப் பிரபலமான இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், சென்ற ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்குக் காரணம் பாலிவுட்டில் நடக்கிற குடும்ப ஆதிக்கமே என்று சமூக ஊடகங்களில் பலரும் குற்றம்சாட்டினர். சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை மும்பை காவல்துறை, பீகார் காவல்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய ஐந்து அமைப்புகள் விசாரித்தன. இருப்பினும், அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற மர்மத்திற்கு இதுவரை அவர்களால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டு இன்றுடன் ஓராண்டாகிறது. இதையொட்டி #SushantSinghRajput என்ற ஹேஷ்டேக்கும் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகிவருகிறது. மேலும், பிரபலங்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்துவருகின்றனர். அந்தவகையில், புதிதாக ட்விட்டரில் இணைந்திருக்கும் நடிகை தபு சுஷாந்த் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில்... "நான் சந்தித்த மிகச் சிறந்த நபர்களில் ஒருவர் அவர். அவரது ஆற்றல், உற்சாகம் மற்றும் அவரது முழு மகிழ்ச்சியான புன்னகை ஆகியவை என்றென்றும் நம் இதயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்" என கூறியுள்ளார்.