அல்லு அர்ஜுனின் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த், ஆஹா ஓடிடி தளத்தை தொடங்கி நடத்தி வருகிறார். தெலுங்கில் பிரபல ஓடிடி தளமாக அறியப்பட்ட ஆஹா தளம், தற்போது தமிழிலும் எண்ட்ரி கொடுத்துள்ளது. சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ஆஹா தளத்தின் அறிமுக விழாவில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
விழாவில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், "அல்லு அரவிந்த் சாரை பற்றி சொல்லவேண்டுமானால் அவர் எது தொட்டாலும் துலங்கும். ரொம்பவும் கைராசிக்காரர். லக்ஷ்மியும் சரஸ்வதியும் அவர் வீட்டில் எப்போதும் குடியிருக்கும். மூன்று பெரிய நடிகர்களை அவர் கையாலேயே உருவாக்கிவிட்டுள்ளார். மற்றவர்களை எளிதில் மன்னித்துவிடுவார் என்பது அவரிடம் உள்ள மிக உயர்ந்த குணம். ஒரு படத்தின் உரிமையை வாங்குவதற்காக அவர் சென்னை வந்திருந்தார். சென்னையில் இருந்த தயாரிப்பாளர் அவரை முறையாக வரவேற்கவில்லையாம். இதை சிரஞ்சீவி சாரிடம் சொன்னதும் அவர் நீங்கள் கிளம்பி வந்துவிடுங்கள் என்றாராம். ஆனால், அவர் பொறுமையாக இருந்து அந்தப் படத்தின் உரிமையை வாங்கிவிட்டு கிளம்பினாராம். அந்தப் படம் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இன்றைக்கு 80 சதவிகித வியாபாரம், டிஜிட்டல், சாட்லைட்டை நம்பித்தான் உள்ளது. வெறும் 20 சதவிகிதம் மட்டும்தான் திரையரங்கில் உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் தமிழுக்கு இது மாதிரியான ப்ளாட்ஃபார்ம் வருவதை தமிழ் சினிமா துறையில் இருக்கும் ஒருவனாய் வரவேற்கிறேன். ஆஹா குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்" எனப் பேசினார்.