வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதிமாறன் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் செல்ஃபி படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் வர்ஷா , கெளதம் மேனன், வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கலைப்புலி எஸ். தாணு இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் ஜி.வி பிரகாஷ், தாணு உள்ளிட்ட படக்குழு அனைவரும் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பேசிய கலைப்புலி தாணு, "செல்ஃபி என்ற தலைப்பை வைத்து மதிமாறன் என்கிட்ட ஒப்புதல் கேட்டதும் சரி என்றேன். இந்தப்படத்தில் வேலை செய்த அனைவருக்கும் தொழில் பக்தி இருந்தது. எனக்கு மதிமாறனை கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி. இந்தப்படத்தை நான் எடுக்கணும்னு நினைச்சேன்; தம்பிகள் கேட்டதும் சரி தயாரிங்க என்றேன். வெறும் 38 நாட்களில் இந்தப்படத்தை இவ்வளவு சிறப்பாக எடுத்ததிற்கு மதிமாறனுக்கு நிறைய செய்யலாம். ஜி.வி.பிரகாஷ் நமக்கு கிடைத்த ஒரு நல் முத்து. செல்ஃபி படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. ஜி.வி.பிரகாஷ் இன்னும் உயரிய இடத்திற்குப் போக வேண்டும். தம்பி குணாநிதி திறமையாக நடித்திருக்கிறார். முதல் படம் என்று சொல்ல முடியாதளவிற்கு நடித்திருக்கிறார். 160 அடி பாயக்கூடியவன். சபரிஷ் 30 வருடம் அனுபவ உள்ள தயாரிப்பாளர் போல செயல்படுகிறார். நல்ல படங்களை சபரிஷ் தயாரிக்க வேண்டும். கவுதம்மேனனிடம் ஒரு போன் பண்ணி சொன்னதும் உடனே நடிக்க ஒத்துக்கிட்டார். அவர் இயக்குனர் மதிமாறனை மிகவும் பாராட்டினார். வி.கிரியேஷன்ஸ் சார்பாக மதிமாறன் ஒரு படம் பண்ணனும். அதற்கு நான் இப்பவே அட்வான்ஸ் கொடுக்கிறேன்" என்றார். இதனைத்தொடர்ந்து மேடையிலே மதிமாறனின் அடுத்த படத்திற்கு ரூ. 10 லட்சம் கொடுத்து இப்பவே ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதையடுத்து பேசிய ஜி.வி பிரகாஷ், "‘நன்றி தாணு சார். சினிமாவில் அவர் ஒரு காட்பாதர். மதிமாறனுக்கு முதல் நன்றி. இது முதலில் நல்ல படம். இந்த நல்ல படத்தில் நானும் இருந்தது மகிழ்ச்சி. குணாநிதி, வர்ஷா, சுப்பிரமணிய சிவா, உள்பட அனைவருக்கும் நன்றி. சின்ன பட்ஜெட்டில் எடுத்த இந்த படம், நல்ல லாபகரமான படமாக வந்ததில் ரொம்ப சந்தோஷம். படம் வெளிவரும் முன்னே நல்ல லாபமாக மாற்றியவர் தாணு சார்" என்றார்.