Skip to main content

"அஜித் சாரோட படம் பண்ணனும், கண்டிப்பா அந்த இடத்துக்கு வருவேன்" - சித்து குமார்

Published on 22/09/2019 | Edited on 22/09/2019

சிவப்பு மஞ்சள் பச்சை... இயக்குனர் சசியின் சமீபத்திய படைப்பான இந்தத் திரைப்படம் குடும்பம் குடும்பமாகப் பார்க்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது. மாமா - மச்சான் என்ற முக்கிய உறவின் பிரச்சனைகளையும் மகிழ்ச்சிகளையும் காமெடியாகவும் நெகிழ்ச்சியாகவும் கூறி வெற்றி பெற்றிருக்கிறார் சசி. வெற்றியின் முக்கிய பங்கு இசைக்கும் இனிமையான பாடல்களுக்கும் இருக்கிறது. படத்தின் அத்தனை பாடல்களும் பாராட்டப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடல் ஃபேவரிட்டாக இருக்கிறது. மென்மையான காதலர்களுக்கு 'மயிலாஞ்சியே...', பாசமலர் சகோதர சகோதரிகளுக்கு 'ஆழி சூழ்ந்த', ஃபீல் பண்ணும் காதலர்களுக்கு 'உசுரே...', என ஒவ்வொரு வகைக்கும் ஒரு காலர் ட்யூன் கொடுத்து தன் முதல் ஆல்பத்தை முழுமையான வெற்றி ஆல்பமாகக் கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் சித்து குமாரிடம் பேசினோம். தமிழகத்தில் என்ஜினியரிங் படித்த கோடானு கோடி மக்களில் இவரும் ஒருவராம். ஆனால், இசையால் ஈர்க்கப்பட்டு சீக்கிரமே சினிமாவுக்குள் வந்துவிட்டார் சித்து. சித்துவுடன் ஒரு சின்ன சாட்.

 

sidhu kumar



முதல் முதலில் இசையமைப்பாளர் ஆக வேண்டும்னு எப்போ முடிவு பண்ணீங்க?

ஸ்கூல் படிக்கும் போதே எனக்கு மியூசிக் பிடிக்கும். அப்போதான் இன்டர்நெட் புதுசா வந்த டைம். அப்போ நான் ஏ.ஆர்.ரஹ்மான் சாரோட இன்டர்வியூஸ், யுவன் சாரோட இன்டர்வியூஸ் எல்லாம் பார்த்தேன். அதையெல்லாம் பார்த்துதான் மியூசிக் பண்ணனும்னு என்ற ஆர்வம் இன்னும் உறுதியாச்சு.

என்ஜினியரிங் படிச்ச உங்கள மியூசிக் பண்ண யாராச்சும் ஊக்குவிச்சாங்களா?

வேற யாரு... நண்பர்கள்தான். ஸ்கூல் படிக்கும்போது நண்பர்கள் எல்லாம் சேர்ந்து நிறைய பண்ணோம். 'பிக் பாஸ்'ல வர்ற சாண்டி பாடுகிற மாறி நாங்களும் சொந்தமா பாட்டு எழுதி, ட்யூன் போட்டு பாடுவோம். ஸ்கூல் முடிச்சுட்டு அப்பா சிவில் என்ஜினீரிங் சேர்த்து விட்டுட்டாங்க. காலேஜ் போவேன், ஆனா கிளாஸ் அட்டென்ட் பண்ண மாட்டேன். எக்ஸாம் வரதுக்கு முன்னாடி என்ன சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. அப்பாவ கூப்பிட்டு எல்லாத்தயையும் சொல்லிட்டாங்க. அப்போதான் எனக்கு இசைதான் எதிர்காலம்னு அப்பாகிட்ட சொன்னேன். இப்போ மியூசிக் பண்றேன்.

நீங்க வெற்றி பெறுவீங்க என்ற நம்பிக்கையை உங்கள் குடும்பத்துக்கு எப்படி கொடுத்தீங்க?

முதலில் ஃபேமிலிக்கு என் மேல ஹோப் இல்ல. அதனால காசு முக்கியம். அந்த காரணத்தினால் ப்ரோக்ராமிங் பண்ணேன். அந்த வேலையில் மியூசிக் டைரக்டர்ஸுக்கு ப்ரொடியூஸ் பண்ற மாதிரி இருக்கும். அங்க எனக்கு பாலிவுட் இசையமைப்பாளர்களுக்கு வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒன்றரை வருஷத்துக்கும் மேல அங்கதான் இருந்தேன். தனீஷ் பாக்க்ஷி கூட வேலை பார்த்தேன். வேண்டா வெறுப்பா உதவி பண்ணிட்டு இருந்த என்னோட அப்பா அம்மாவுக்கு அப்போதுதான் ஒரு ஹோப் வந்துச்சு. பிறகு இங்க வந்து புனித்குமாரோட ஷார்ட் ஃபில்ம் பண்ணேன். அந்தப் படத்தோட ரீச் நல்லா இருந்துச்சு. அந்தக் குறும்படம்தான் சசி சார் கிட்ட சான்ஸ் வாங்கிக் கொடுத்துச்சு.

 

 

smp team



உங்கள் முதல் படத்தின் ஹீரோ ஜி.வி.பிரகாஷ். ஒரு மியூசிக் டைரக்டருக்கு மியூசிக் போட்டது எப்படி இருந்தது?

ரொம்ப தயக்கமா இருந்தது. ஜி.வி.பிரகாஷ் அண்ணா, சித்தார்த் சார் ரெண்டு பேருமே மியூசிக் தெரிஞ்சவங்க. சசி சார்தான் எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணினாரு. சசி சார் கொடுத்த மோட்டிவேஷன்லதான் இந்தப் படம் பண்ணேன். பாடல்களுக்கு எல்லாம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. ஜி.வி.பிரகாஷ் அண்ணா, சித்தார்த் சார் ரெண்டு பேருமே பாட்டு எல்லாத்தையும் கேட்டுட்டு நல்லா இருக்குன்னு சொன்னாங்க.

மியூசிக்ல உங்களுக்கு யாரு இன்ஸ்பிரேஷன்?

எனக்கு மியூசிக்ல  இன்ஸ்பிரேஷன் யுவன் சார்தான். இப்போனு இல்ல, மியூசிக் தெரியாத வயசுல இருந்தே யுவன் சார் சாங்ஸ் வெறித்தனமா கேப்பேன். இப்போ நிறய மியூசிக் கேக்கறேன். ஆனா நான் தொடங்கிய புள்ளி யுவன்தான்.


யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்கள், இசை மூலமாக அவரோட எமோஷனலா நெருங்கி இருப்பவர்கள். நீங்க எந்த மாதிரி நேரத்துல யுவனுடைய பாடல்களை பக்கத்துல வச்சுப்பீங்க?

எனக்கு மட்டுமில்லை பொதுவாகவே ரெண்டு நேரத்துல யுவனோட பாடல் ரொம்ப தேவைப்படும், பயங்கரமா ஒர்க் ஆகும். காதல் தோல்வி என்றால் யுவன் பாடல்கள்தான். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். வலிக்கு யுவன்தான் மருந்து. ரெண்டாவது, மாஸ் மொமண்ட்ஸ். அவர் மாஸ் பாட்டுலாம் ரொம்ப நல்லா போடுவாரு. 'மங்காத்தா' படத்தோட பிஜிஎம்லாம் பயங்கர மாஸ், எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

வருங்காலத்துல எந்த ஹீரோக்கு படம் பண்ண ரொம்ப ஆசை?

அஜித் சாருக்கு படம் பண்ணனும். கண்டிப்பா அந்த இடத்துக்கு நான் வருவேன், அதுக்காகத்தான் சின்சியரா உழைக்கிறேன்.

'சிவப்பு மஞ்சள் பச்சை' பாத்துட்டு வீட்டுல என்ன சொன்னாங்க?

படத்தை எங்க அப்பா ஊர் ஊரா பார்த்துகிட்டு இருக்காரு. அவருக்கு ரொம்ப சந்தோஷம். 7 வருஷத்துக்கு முன்னாடி என்னோட அம்மா தவறிட்டாங்க. அதுக்கப்பறம் எனக்கு முழு துணையா, உறுதுணையா இருந்து அப்பா பாத்துக்கிட்டு இருந்தாரு. இப்போ இது என்னோட கடமை, அவரை நல்லா பாத்துக்கணும்.

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தைப் போலவே மகிழ்ச்சியுடன் தொடங்கி நெகிழ்ச்சியுடன் முடிந்தது இந்த சாட்.  

 

 

 

சார்ந்த செய்திகள்