இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடனான திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அண்மையில் அறிவித்திருந்தார். இது தொடர்பாக இசையமைப்பாளரும், ஏ.ஆர்.ரஹ்மானின் நெருங்கிய நண்பருமான தாஜ் நூரை நக்கீரன் வாயிலாக சந்தித்தோம். அப்போது அவர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பழகிய அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
"ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு ஆகியோரது விவாகரத்து செய்தியை சேலத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார். எனக்கு மிகவும் ஷாக்காக இருந்தது. அதன் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் அலுவலகத்தில் இருப்பவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியபோது அவர்களுக்கும் இது குறித்து எதுவும் தெரியவில்லை. விவாகரத்து செய்திக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பவுள்ளார் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். நான் 25 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளேன். சில நேரம் எனக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும்போது, என் மனைவி எங்கேயாவது வெளியே செல்ல கூப்பிடுவார். அதனால் எனக்கு சில நேரம் கோபம் வரும். என்ன முடிவெடுக்கலாம் என்று பல யோசனைகளும் பதற்றமும் வரும். எனக்கே இப்படி இருக்கும்போது, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நிறையப் படங்கள் இசையமைக்க வேண்டிய பணிச்சுமை இருக்கும். அந்த நேரத்தில் கணவன் மனைவிக்குள் ஏற்படும் சின்ன சின்ன சண்டைகளின் வெளிப்பாடுதான் விவாகரத்தில் முடிந்திருக்கும். நான் அவருடன் பணியாற்றும்போது அடிக்கடி அவர்களுக்குள் நடக்கும் சண்டைகளை பார்த்திருக்கிறேன். ஆனால், அந்த சண்டைகள் இரண்டே நாளில் நார்மலாகிவிடும். எனக்குத் தெரிந்த 10 நபர்கள் ஏ.ஆர்.ரஹ்மானைப் பார்க்க வேண்டுமென்றால் அதில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும். அதே போல் சாய்ரா பானுவும் அவர்களுக்குத் தெரிந்தவர்களைக் தன் கணவர் பார்க்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும். இதற்கு வாய்ப்பு மறுக்கப்படும்போது, மனைவிக்கும் கோபம் வரத்தான் செய்யும். கணவர் கண்டுகொள்வதில்லை? என்ற ஏக்கமும் சாய்ரா பானுவுக்கும் இருக்கும். இது பிரபலமாக இருப்பவர்களுக்கு வேலை நிமித்தமாக இருக்கக்கூடிய பிரச்சனைதான். சாய்ரா பானுவுக்கு இருக்கும் கோபம் இயல்பான மனிதருக்கு வரும் கோபமாகத்தான் பார்க்கின்றேன்.
இந்த விவாகரத்து விஷயத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒழுக்கத்தைப் பற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றிய ஒரு கிட்டாரிஸ்ட் பெண்ணுடன் தொடர்புப்படுத்திப் பேசுவதைப் பார்த்து கோபமும் சிரிப்பும் வந்தது. ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றிய 15 வருடங்களில் அவரைப் பார்த்துதான் நானே திருந்தினேன். அந்தளவிற்கு மிகவும் அவர் நேர்மையானவர். என்னைப்போலப் பலரும் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒழுக்கத்தைப் பார்த்துத் திருந்தியுள்ளனர். உதாரணத்திற்கு ஒரு பாடகி ஸ்டைலாக உடை அணிந்து வந்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசினாலும் அவர் நேராகக்கூடப் பார்க்க மாட்டார். வேறுறொரு இடத்தில் பணியாற்றிவிட்டு அதே போல் ஏ.ஆர்.ரஹ்மானும் இருப்பார் என்று தவறான நோக்கத்தில் நெருங்கினால் அதோடு அவர்களுடனான தொடர்பை அவர் முறித்துக்கொள்வார். இதை நானும் பார்த்திருக்கிறேன். தன்னுடன் பணியாற்ற வரும் பெண்கள் ஆடை விஷயத்தில் ஒழுங்காக வரவேண்டும் என்று நினைக்கக் கூடியவர். இசைக் கலைஞர்கள் பலர் பெரும்பாலும் குடிப்பழக்கத்தில் இருப்பார்கள். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்ற வரும்போது அதுபோல போதையில் வந்தால், அவர்களுக்கு அதன் பிறகு அவருடன் சேர்ந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்காது. இதுபோல பல இசைக் கலைஞர்களுக்கு நடந்துள்ளது. அதனால் பலரும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்ற வரும்போது ஒழுக்கமாக இருப்பார்கள். போதையில் இருக்கக்கூடியவர்களை ஏ.ஆர்.ரஹ்மான் தெரியாமல் அழைத்துவிட்டால், பணியாற்ற வருவதற்கே பயப்படுவார்கள்.
எங்களுடன் பணியாற்றும்போது கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் ஆன்மிக ரீதியாக சில புத்தங்களை வாசித்துக்கொண்டிருப்பார். ஏ.ஆர்.ரஹ்மான் தன்னை சுற்றி இருப்பவர்களும் தானும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். ஏ.ஆர்.ரஹ்மானுடைய முதல் மகள் திருமணத்தால் ஏற்பட்ட உரசலால்தான் அவரும் அவரது மனைவியும் பிரிந்தார்கள் என்பது ஆதாரமற்ற செய்தி. என்னுடன் சேர்ந்து சிலர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றியபோது எங்களுக்கு அவர் டீ போட்டுக் கொடுத்துள்ளார். அந்தளவிற்கு மிகவும் எளிமையானவர். பொதுவாக அனைவரது வீட்டிலும் கணவன், மனைவி சண்டை வரும்போது மனைவி ஊருக்குப் போகிறேன் என்று சொல்வதும் விவாகரத்து செய்துகொள்வேன் என்று சொல்வதும் இயல்பு. இதுபோல பலமுறை அவர்களுக்குள் சண்டைகள் வந்துள்ளது. இந்த முறையும் அதுபோல கோபத்தில் தன் மனைவி பேசியிருப்பார் என ஏ.ஆர்.ரஹ்மான் நினைத்திருப்பார். ஆனால் எதிர்பாராத விதமாக சாய்ரா பானு அவசர முடிவை எடுத்துவிட்டார். சாய்ரா பானு இன்னும் எவ்வளவு நாள் இப்படி இருக்கப்போகிறார் என்று தெரியவில்லை. ‘நான் சொன்னால் நீங்கள் ஏன் விவாகரத்துக்கு ஒப்புக்கொண்டீர்கள்’ என்று சாய்ரா பானு ஏ.ஆர்.ரஹ்மானிடம் சொல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. இப்படித்தான் இருவரையும் நான் பார்த்திருக்கிறேன்" என்றார்.