திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சூது கவ்வும்’. இதில் விஜய் சேதுபதி, அஷோக் செல்வன், பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட், தங்கம் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயரித்துள்ளனர். மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க எம்.எஸ். அர்ஜுன் இயக்கியுள்ளார். கருணாகரன், ஹரிஷா, ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ள நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் கடந்த மார்ச்சில் வெளியானது. பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் அண்மையில் ட்ரைலர் வெளியானது. மேலும் படம் வருகிற டிசம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சென்னையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் மேடையில் ஒன்றாக நின்று பேசினர். அப்போது அனைவரும் கலகலப்பாக பேசிய நிலையில் சந்தோஷ் நாராயணனும் மேடையில் நின்று கொண்டிருந்த ஒவ்வொருவரை பற்றியும் ஜாலியாக பேசினார்.
அதன் ஒரு பகுதியில் பா.ரஞ்சித் குறித்து அவர் பேசுகையில், “நான் எலெக்ட்ரானிக் மியூசிக் புரொடியூசர் என சுற்றிக் கொண்டு இருந்தேன். பா.ரஞ்சித் தான் நாட்டுப்புற இசை என்றால் என்ன என்பதை நிறைய பேரிடம் சந்திக்க வைத்து என்னுடைய கலை வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு ஆற்றினார்” என்றார். பின்பு அருகில் நின்றுகொண்டிருந்த பா.ரஞ்சித்தை பார்த்து, “இனிமேல் உங்க படத்துக்கு நான் தான் மியூசிக் பண்ணுவேன். வேற யாரையும் விட மாட்டேன். இது என்னுடைய கட்டளை” என சிரித்தபடியே சொன்னார்.
சந்தோஷ் நாராயணன் பா. ரஞ்சித்தின் அட்ட கத்தி மூலம் சினிமாவிற்கு வந்து, தொடர்ந்து ரஞ்சித்தின் அனைத்து படங்களுக்கும் இசையமைத்து வந்தார். ஆனால் ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது மற்றும் தங்கலான் படத்திற்கு இசையமைக்கவில்லை. இதனால் இருவருக்கும் மனக்கசப்பு இருப்பதாக ஒரு தகவல் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.