Skip to main content

இது கேரளாவின் 'பேட்ட vs விஸ்வாசம்'! - மசாலா நெடியில் மலையாள ரசிகர்கள்

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

கடந்த வருட இறுதியில் ரஜினிகாந்த்தின் 'பேட்ட' ட்ரைலர் ரிலீஸாகியது. ட்ரைலரில் ரஜினி யாருக்கோ பேசிய வசனங்கள் எல்லாம் அஜித் நடித்திருக்கும் 'விஸ்வாசம்' படத்தை எதிர்த்துதான் பேசுகிறார் என்று சமூக ஊடக ரசிகர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டு ஒரு சோஷியல் மீடியா கலவரம் உருவானது, உண்மையில் ட்ரைலர் கட் செய்யப்பட்ட விதமும் கொஞ்சம் ரசிகர்களை குதூகலித்துக் கொந்தளிக்க வைக்கும் வகையில்தான் இருந்தது. அதைத் தொடர்ந்து வெளியாகிய அஜித் படத்தின் விஸ்வாசம் ட்ரைலரும் ரஜினி பேசிய வசனங்களுக்கு பதில் சொல்வது போலவே எடிட் செய்யப்பட்டிருந்தது. இதனால் இவ்விரு ஹீரோக்களின் ரசிகர்களும் சமூக வலைதளத்தில் மோதிக்கொள்ளத் தொடங்கினார்கள். பின்னர், இந்த இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகி செம ஹிட் அடித்தன. இது 2019இன் தமிழ் சினிமா மாஸ் ஹீரோக்கள் மல்லுக்கட்டு. 
 

lalettan

 

 

கேரளாவில் கிட்டத்தட்ட இதே போன்ற சூழல் உருவானது. மோகன்லால் நடிப்பில் 'லூசிஃபர்' என்றொரு படத்தின் டீஸர் கடந்த வருட இறுதியில் ரிலீஸானது. இதனை அடுத்து மம்முட்டியின் 'மதுரராஜா' படத்தின் டீஸர் கடந்த மார்ச் 20ஆம் தேதி வெளியானது. டீஸரை பார்த்தவர்களுக்கு எல்லாம் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் மலையாள சினிமா, மம்முக்காவின் படம் இப்படி லோக்கல் மாஸாக இருந்தது. டீஸரை பார்க்கும்போதே இது பக்கா மசாலா படம் என்பது உறுதியானது. "இந்த மதுர ராஜா டபுள் ஸ்ட்ராங் இல்ல, ட்ரிபிள் ஸ்ட்ராங்" என்று தெலுங்கு சினிமாவை மிஞ்சும் அளவிற்கு அந்த டீஸரில் இறுதியாக வந்த பஞ்ச் டயலாக் இருந்தது. 'தலைவா...' என்று தமிழில் பின்னணி இசை வேறு மாஸ் ஏத்தியது. ஒரு பக்கம் இதை மம்முட்டி ரசிகர்கள் கொண்டாட பின்னாடியே லாலேட்டன் நடித்த 'லூசிஃபர்' படத்தின் ட்ரைலர் வெளியானது. அந்த ட்ரலர் மாஸ் + க்ளாஸ் கலவையாக இருந்தது. ட்ரைலர் முழுவதும் ஸ்டண்ட், நெருப்பு பறப்பது என்று தெறியாக இருந்தது. இப்படத்தை கேரள நடிகரும் மோகன்லாலின் தீவிர ரசிகருமான பிரித்விராஜ்தான் இயக்கியுள்ளார். ரஜினியின் 'பேட்ட' படத்தை அவரது ரசிகர் கார்த்திக்சுப்புராஜ் எப்படி மாஸாகவும் கிளாஸாகவும் இயக்கி ரசிகர்களுக்கு விருந்தளித்தாரோ அதை போலத்தான் லூசிஃபர் படமும் உள்ளது. இப்படி மலையாளத்தின் இரண்டு முக்கிய ஹீரோக்களின் பட டீசர், ட்ரைலர்கள் ரசிகர்களை கொண்டாட வைத்தன. ஆனால், பேட்ட - விஸ்வாசம் போல இரண்டு படங்களும் ஒன்றாக வெளியாகவில்லை. லூசிஃபர் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, வர்த்தக ரீதியாகவும் பல சாதனைகளை படைத்து வருகிறது.
 

மம்முட்டியின் படமான 'மதுரராஜா' படத்தின் ட்ரைலர் வெளியானது. டீஸர் பார்க்கும்போது இந்தப் படத்தின் மேல் இருந்த அபிப்பிராயம், ட்ரைலரின் மூலம் கொஞ்சம் மாறியிருக்கிறது என்று சொல்லலாம். லூசிஃபர் ட்ரைலரின் தாக்கம் மதுரராஜா ட்ரைலரில் நன்றாகத் தெரிகிறது. முன்பு டீஸரை பார்த்தபோது வெறும் மசாலாவாகத் தெரிந்த படம், தற்போது கிளாசாகவும் தெரிகிறது. தமிழில் பேட்ட vs விஸ்வாசம் என்று ட்ரைலரில் இருந்ததுபோல, லூசிஃபர் vs மதுரராஜா இருக்கிறது. ஆனால், இங்கு வசனங்களால் மோதிக்கொள்ளவில்லை. இவ்விரு படங்களுமே அரசியல் படங்கள்தான். இரண்டு படங்களுக்குமே தமிழ் தொடர்பு இருக்கிறது. 'லூசிஃபர்' படத்தில் மாநிலத்தை ஆளும் முதல்வர் மறைந்துவிட, ஆட்சியை தொடர்வது யார் என்பதும் அதை சுற்றிய நிகழ்வுகளும்தான் கதைக்களம். இவ்வகையில் இது தமிழக அரசியல் நிகழ்வுகளை நினைவுகூர்கிறது. 'மதுரராஜா'வில் தமிழ் நடிகர் ஜெய் நடித்துள்ளார். இடையிடையே வசனங்களில் தமிழ் தெரிகிறது. 'தலைவா...' என்று பின்னணி இசையிலும் தமிழ் ஒலிக்கிறது.
 

mammukka

 

 

மலையாள சினிமா முன்பு எதார்த்த சினிமாவிற்கு பெயர்போனதாக இருந்தது. ஆனால், தற்போது தமிழ் தெலுங்கு சினிமாக்களுக்கு சவால் விடும் வகையில் மசாலாக்கள் அவர்கள் படங்களிலும் சேர்க்கப்படுகிறது. அதில் வெற்றியையும் பார்த்து வருகின்றனர். லூசிஃபர் வெற்றியை சுவைத்துவிட்டது. அடுத்து களத்தில் இறங்க இருக்கும் மதுரராஜா அந்த வெற்றியை சுவைப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

சார்ந்த செய்திகள்