நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாகத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.
இதற்கிடையே கரோனா இரண்டாம் அலையால் சில மாதங்களாகவே சில மாதங்களாகவே திரை பிரபலங்களான விவேக், கே.வி. ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன், பவுன்ராஜ், அருண்ராஜா காமராஜ் மனைவி, நிதிஷ் வீரா உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவருவது மக்களிடையே கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அதில்...
"நிலைமை மிகவும் கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருக்கிறது. இதனால் பல இழப்புகள். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். ஆரம்பகால கண்டறிதல் முக்கியமானது! ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி கவனக்குறைவாக இருக்க வேண்டாம். சங்கிலியை உடைப்போம். முக கவசம் அணியுங்கள். வீட்டில் தனித்திருங்கள். பாதுகாப்பாக இருங்கள். தடுப்பூசி போடுங்கள். ஒன்றாக நாம் மிக விரைவில் வெல்வோம்" எனக் கூறியுள்ளார்.