இந்திய இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள் சேர்க்கும் முறையான ‘அக்னிபத்’ திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இப்பணிகளில் பெறுவோருக்கு பல்வேறு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என பாஜக ஆளும் மாநில அரசுகளும், மத்திய அரசின் சில துறைகளும் அறிவித்துள்ளன. இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற முடியாது என பாதுகாப்புத்துறை உயரதிகாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடியை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “இஸ்ரேல் போன்று பல நாடுகள் தங்கள் நாட்டு இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சியை கட்டாயமாக்கி உள்ளது. ஒழுக்கம், தேசியவாதம், உள்ளிட்ட மதிப்பீடுகளை கற்றுக்கொள்ளவும், தேச பாதுகாப்பு என்ன என்பதை அறிந்துகொள்ளவும் இளைஞர்கள் சில ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். பழங்காலத்தில் இளைஞர்கள் குருகுலம் சென்று கல்வி கற்றது போல் தற்போது அக்னிபத் திட்டத்தில் இணைந்து நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும். நாட்டில் தற்போது உள்ள இளைஞர்கள் பப்ஜி விளையாடுவதிலும், போதை பழக்கத்திற்கு அடிமையாவதால் அவர்களை திறம்பட கையாள மத்திய அரசு கொண்டுவந்த அக்னிபத் திட்டம் உதவும்” எனத் தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.