Skip to main content

‘எங்களை போன்றோர்களைப் புண்படுத்திவிட்டது’ - அமித்ஷா பேச்சு குறித்து கமல் கருத்து

Published on 19/12/2024 | Edited on 19/12/2024
kamal condemn amitshah regards his ambedkar speech

இந்தியாவில் அரசியல் சாசனம் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் கடந்த 4 நாட்களாக சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் முடிவில் மாநிலங்களவையில், நேற்று முன்தினம் (17.12.2024) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,“அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லியிருந்தால், அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரைக் காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பா.ஜ.க மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் கட்சி பேச வேண்டும்” என்று பேசினார்.

அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் , ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து கையில் அம்பேத்கர் புகைப்படம் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (18.12.2024) போராட்டம் நடத்தினர். மேலும், எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘ஜெய் பீம்’ என முழக்கமிட்டனர். இதனையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. அமித்ஷா பேச்சை கண்டித்து போராட்டங்களும் வெடிக்க தொடங்கியிருக்கின்றன. 

இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அமித்ஷா பேச்சு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, “நவீன இந்தியாவின் கட்டுமானத்துக்கு பாபா சாகேப் அம்பேத்கரின் சிந்தனையே அடித்தளம். அன்னியர்களின் அடக்குமுறையிலிருந்து இந்தியாவை காந்திஜி விடுவித்த தருணத்தில், இந்தியா தனக்குத்தானே சுமத்திக் கொண்டிருந்த சமூக அநீதிகளிலிருந்து டாக்டர் அம்பேத்கர்தான் இந்தியாவை விடுவித்தார். 

அனைவருக்கும் சுதந்திரம், அனைவருக்கும் சம நீதி, பிறப்பால் அனைவரும் சமம் என்னும் பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கையை நம்பி அதற்காகப் போராடும் எந்த இந்தியரும், அப்பெருமகனின் மாண்பு சீர்குலைக்கப்படுவதை சகித்துக் கொள்ள மாட்டார். நவீனத்துவமும் தார்மீகமும் கொண்ட சர்வதேச சக்தியான நாம், அரசியல் சாசனம் உருக்கொண்டதன் 75ஆம் ஆண்டை அர்த்தமுள்ள உரையாடல்கள், விவாதங்கள், அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றிய ஆய்வுகள் என்று நாடாளுமன்றத்தின் மரியாதை மிக்க அரங்குகளை நடத்திச் செல்ல வேண்டும். இந்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்