![gdsgdsgsdgdsgs](http://image.nakkheeran.in/cdn/farfuture/qoUfX3Pr3DyYVWLVMKwxV-4fymURiNcj09rXdI2ZuzQ/1620375248/sites/default/files/inline-images/bhagyarajpoornima1.jpg)
இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.
இந்த நிலையில், பிரபல நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ், அவரது மனைவி நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருடைய மகன் நடிகர் ஷாந்தனு தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "என் பெற்றோர் கே. பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எங்கள் பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருக்கிறோம். கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக்கொள்ளுங்கள். அவர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்" என பதிவிட்டுள்ளார்.