பிரபல கன்னட நடிகர் தர்ஷன் நடிப்பில் ஹரிகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கிராந்தி'. இப்படத்தில் ரச்சிதா ராம், ரவிச்சந்திரன் மற்றும் சுமலதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 18 ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டை படக்குழு நடத்தியது. அங்கு மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் ரசிகர்கள் நிறைய பேர் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் ரச்சிதா ராம் பேசிக்கொண்டிருந்த போது கீழே கூட்டத்தில் இருந்து மேடையில் நின்று கொண்டிருந்த நடிகர் தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்டது. பின்பு பேசிய தர்ஷன், "அது உன் தவறல்ல தம்பி. பரவாயில்லை" என்றார். எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தர்ஷன் அண்மையில் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில், “அதிர்ஷ்ட தேவதை வீட்டுக்கு வந்தால் அவருடைய ஆடைகளைக் களைய வேண்டும்” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் எழுந்தன. அதற்கான எதிர்வினைதான் இது எனப் பரவலாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமுக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சிவராஜ்குமார் இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் கிச்சா சுதீப், “நம் நிலம், கலாச்சாரம் அனைத்தும் அன்பும் மரியாதையும் சார்ந்தது. அந்த வீடியோவை பார்த்து வெறுப்படைந்தேன். அனைவரும் கண்ணியமாக நடத்தத் தகுதியானவர்கள். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு. இதை புனித்தே ஆதரிக்கமாட்டார்” என நீண்ட அறிக்கை ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் சில கன்னட நடிகர்கள் இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.