பழனி பாபா குறித்தும் அவருடைய கொலை வழக்கு குறித்தும் தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விவரிக்கிறார்.
அத்வானி ரத யாத்திரை நடத்தியபோது, அயோத்தியில் கட்டும் கோவிலுக்கு இங்கிருந்து செங்கல் எடுத்துச் செல்லலாம் என்றால்... அசுத்தமாக இருக்கும் பாபர் மசூதியை சுத்தம் செய்ய இங்கிருந்து தானும் விளக்கமாறு எடுத்துச் செல்ல விரும்புவதாக கோவை கமிஷனரிடம் மனு அளித்தார் பழனி பாபா. இஸ்லாமியராக இருந்தாலும் பைபிளை முழுமையாக அவர் படித்தார். வரலாற்றின் மீது அவருக்கு நிறைய ஆர்வம் இருந்தது. சிறை சென்று திரும்புவது என்பது அவருக்கு ஒரு வாடிக்கையாகவே இருந்தது. எம்.ஜி.ஆரோடு நெருக்கமாக இருந்தார். அவரை ராமச்சந்திரா என்று பெயர் சொல்லி அழைத்தவர் பழனி பாபா.
ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆரோடு அவருக்கு பிரச்சனை ஏற்பட்டது. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது "இந்திரா காந்தி சரியாகத்தான் சுடப்பட்டார்" என்றார். வழக்கு விசாரணையின் போது "ஆமாம். சரியாக சுடவில்லை என்றால் அவர் இறந்திருக்க மாட்டார் என்று தான் கூறினேன்" என்று விளக்கம் சொன்னதால் விடுவிக்கப்பட்டார். அவருடைய வாதத்திறமை அலாதியானது. எம்.ஜி.ஆர் சனாதனிகளின் பிடிக்குள் செல்கிறாரோ என்கிற சந்தேகம் ஏற்பட்டதால் அவரைக் கடுமையாக எதிர்த்தார் பழனி பாபா. அதனால் பிரச்சனை ஏற்பட்டதால் கலைஞரிடம் வந்தடைந்தார்.
அதன் பிறகு பழனி பாபாவைத் தன் பக்கம் ஈர்த்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். ஒடுக்கப்பட்ட மக்களை இணைக்க வேண்டும் என்கிற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார் பழனி பாபா. ஒருமுறை பொள்ளாச்சியில் தன்னுடைய நண்பர் வீட்டுக்கு அவர் சென்றார். அப்போது கேரளாவிலிருந்து அங்கு வந்த அவருடைய எதிரிகள் வாள் மற்றும் கத்தியின் மூலம் அவரைக் கொடூரமாகக் கொன்றனர். 46 வயதில் அவர் இறந்தார். அவருடைய கொலை வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
எந்தப் பதவிக்கும் வர அவர் விரும்பியதில்லை. ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பினார். திருமாவளவனுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். பெரியார் மற்றும் அம்பேத்கர் மீது அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். கம்பராமாயணத்தின் மீது அவருக்கு விமர்சனங்கள் இருந்தன. வெறுப்பு அரசியலை அவர் எப்போதும் எதிர்த்தார்.