Skip to main content

பம்பரத் தாத்தா வர்றாருடோய்... - சிறுவர்களைக் கவர்ந்த வைகோ! - கடந்த காலத் தேர்தல் கதைகள் #3

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

வைகோ... இன்று வரை இந்திய நாடாளுமன்றம் கண்டுள்ள  முக்கியமான, சிறந்த உறுப்பினர்களில் ஒருவர். அவரது கூட்டணி மாற்றங்கள், கட்சி செயல்பாடுகளில் விமர்சனம் உள்ளவர்கள் கூட அவரது நாடாளுமன்ற செயல்பாடுகளை பாராட்டுவார்கள். அவர் கடைசியாக நாடாளுமன்றம் சென்று பதினைந்து ஆண்டுகளாகிவிட்டாலும் இன்றும் அவரது செயல்பாடுகள் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனதில் இடம் பெற்றிருக்கின்றன. இப்படிப்பட்ட பார்லியமென்டேரியனான வைகோ, இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. திமுக கூட்டணியில் மதிமுக ஈரோட்டில் மட்டுமே போட்டியிடுகிறது. மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதியளித்துள்ளது திமுக. வைகோ மீண்டும் நாடாளுமன்றம் செல்லவேண்டும் என்பது மதிமுக தொண்டர்களையும் தாண்டிய பலரின் எதிர்பார்ப்பு. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் வைகோ. தமிழகம் முழுவதும் சென்று கூட்டணிக்கட்சிகளுக்கும் பிரச்சாரம் செய்தார். 2014இல் அவரது பிரச்சாரம் எப்படி இருந்தது... கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

 

vaikoம.தி.மு.க. பொதுச் செயலாளரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான வைகோ, தானே நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்கு கேட்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட சில கிராமங்களில் அப்போது அவர் பிரச்சாரம் செய்தபோது உடன் இருந்தோம். குண்டும் குழியுமான சாலைகளிலும் கூட அவரது பிரச்சார வேன் அசராமல் பயணித்தது. ‘ஏழைகளின் கட்சி’ என அவரே சொல்வது போல, அந்த வேனில் படுக்கை வசதியோ, டாய்லெட் வசதியோ எதுவும் இல்லை. இயற்கை உபாதைகளுக்கும் கூட, சாதாரண கிராமவாசி போல  முட்செடிகள் பக்கம்  அவர் ஒதுங்குகினார். 

 

vaikoவைகோ செல்லும் ஒவ்வொரு பிரச்சார ஸ்பாட்டிலும் டிரம்ஸ் அடிக்கிறார்கள். 500 வாலா பட்டாசு வெடிக்கிறார்கள். ஊர்த்தலைவரோ, கூட்டணி கட்சி பொறுப்பாளரோ யாராவது ஓரிருவர் சால்வை அணிவிக்கிறார்கள். மற்றபடி, பெரிய அளவிலெல்லாம் ஆட்களைத் திரட்டவில்லை. "பம்பரத் தாத்தா வர்றாரு டோய்..'' என்று பள்ளிச் சிறுவர்கள் பாசமாக ஓடி வந்தார்கள். யதார்த்தமான சூழலில், மெல்லிய குரலில் வெகு இயல்பாகப் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். கூட்டணி கட்சிகளின் பெயரைச் சொல்லும் போது, 'எனது அருமை சகோதரர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தே.மு.தி.க. ஆதரவோடு..' என்பதை அழுத்திச் சொல்கிறார். பத்து பேரோ, இருபது பேரோ நிற்கும் இடங்களில் 1 நிமிடத்துக்கும் குறைவாக பேச்சு,  ஐம்பது பேருக்கும் மேல் கூடிவிட்டால், 2 நிமிடங்கள் பேச்சு, எண்ணிக்கை நூறைத் தாண்டிவிட்டால், 8 நிமிடங்கள் வரை பேசினார். 

எழுச்சியே இல்லாத கிராமங்களில்  “தமிழகத்தில் மோடி அலை வீசுகிறது; மோடி பிரதமர் ஆவது உறுதி" என்ற சென்ற தேர்தலின் வழக்கமான பிரச்சாரத்தை அவர் மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் எதிர்ப்பையும்கூட தீவிரமாகக் காட்டாமல், "நான் அரசியல் கட்சிகளை இப்போது விமர்சிக்க விரும்பவில்லை.." என்று தவிர்த்துவிட்டார். வாக்களிக்கும் வயதினரைக் காட்டிலும் சிறுவர் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் "நான் குழந்தைகளை ரொம்ப பிரியமா நினைக்கிறவன்.. பம்பரம் பிள்ளைகள் விளையாடுறதுன்னு தேர்ந்தெடுத்தேன். இளம் பிள்ளைகள் இங்கே ரொம்பப் பேரு இருக்காங்க.. நீங்கதான் அப்பா, அம்மாகிட்ட சொல்லணும்..'' என்றார். எதிர்ப்படும் பெண்களிடம் "நான் தாய்மார்களை தெய்வமா நினைக்கிறவன்.. சாராயக் கடை, மதுக் கடைகளுக்கு எதிரா வெயில்லயும், மழையிலயும் 1500 கி.மீ. நடந்திருக்கேன்.. நீங்க டிவியில பார்த்திருப்பீங்க..'' என்று உணர்வுப்பூர்வமாகப் பேசினார். 

 

vaikoஅப்போது அங்கிருந்த நந்திரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவர் நம்மிடம், "விஜயகாந்தை பாருங்க.. முக்கியமான ஊருல மட்டும் பிரச்சாரம் பண்ணுறாரு.. எம்புட்டு கூட்டம் கூடுது.. டி.வி.ல பார்க்கிறோம்ல.. நறுக்குன்னு நாலு இடத்துல பேசிட்டு போறத விட்டுட்டு.. ஆளுங்க  இல்லாத நேரத்துல..  பட்டிக்காட்டுல வந்து பிரச்சாரம் பண்ணி.. உடம்பை கெடுத்துக்கிட்டு.. டயத்தை வேஸ்ட் பண்ணுறாரு..'' என்றார் வைகோ மீது உண்மையான அக்கறை உள்ளவராக. 

"ஓட்டு யாருக்கு?'’ என்ற நமது கேள்விக்கு மீனாட்சிபுரம் கருத்தம்மா "இவரு பம்பரத்துக்கு போடச் சொல்லுறாரு. இனிமேதான் யோசிக்கணும், யாருக்கு போடறதுன்னு?'' என்று இழுக்க.. அவரது பக்கத்து வீட்டுக்காரரான முத்து மாரியம்மாளோ "என் புள்ளைக்கு மஞ்சள் காமாலை ஊசி போட்டாரு வைகோ.. அவருக்குத்தான் என் ஓட்டு..'' என்றார்.   

சின்னமூப்பன்பட்டி என்ற ஊரில் அந்த இரவு நேரத்திலும் ஓரளவுக்கு மக்கள் கூடியிருந்தார்கள். ஆரத்தி எடுக்க பெண்கள் ஆர்வம் காட்டினார்கள். கூட்டத்தைப் பார்த்து குஷியாகி "இது மாதிரி எந்த ஊருலயும் நான் கூட்டத்தைப் பார்க்கல.. நான் வெளிப்படையா பேசுறவன்.. என்கிட்ட ஒளிவு மறைவு கிடையாது..  மனசுல நினைச்சதை சொல்லுறவன்..'' என்ற வைகோ, "என்னைப் பத்தி நானே சொல்லிக்கிறதா?'' என்று சங்கோஜப்பட்டவாறே சில விஷயங்களை மக்கள் முன் வைத்தார் - "உங்க மனசுல வைகோ ரொம்ப நல்லவன், நம்மள மாதிரி ஏழைபாழைகள் சொன்னா உடனே செய்வான்ங்கிற நம்பிக்கை இருக்கு.. வெளிநாட்டுல யாராச்சும் விபத்துல மாட்டிக்கிட்டா.. ஏய் வைகோ வுக்கு ஒரு போனைப் போடுங்கிறாங்க.. நான் எந்தப் பதவியிலும் இல்லை. ஆனா.. எப்படியாவது பிரதமர்ட்டயோ, யார்ட்டயோ சொல்லி, அவங்கள காப்பாற்ற முயற்சி பண்ணுறேன். உலகத்துல உள்ள எல்லா தமிழர் களும் நமக்கு ஒருத்தன் இருக் கான்னு நினைக்கிறாங்க இல்லியா?"  

அதற்கு முந்திய தேர்தல் தோல்வி ஆறாத ரணமாக உள்ளுக்குள் இருந்ததோ என்னவோ?  பிரச்சாரத்தின்போது தனது உள்ளக் குமுறலை அடிக்கடி வெளிப்படுத்தினார் வைகோ - "போன எலக்ஷன்ல நின்னேன்.. வீட்டுக்கு வீடு பணம் கொடுத்தாங்க. பணத்துக்காக ஓட்டு போட்டு போன தடவை என்னை தோற்கடிச்சீங்க. இந்த தேர்தல்ல அதைவிட அதிக பணம் கொடுக்கப் போறாங்க. உங்க ஓட்டை விலைக்கு வாங்கப் போறாங்க. ஒரு ஓட்டுக்கு ஆயிரம், ரெண்டாயிரம்னு கொடுக்கப் போறாங்க. பணம் வீடு வீடா வரப் போகுது. வந்திரும்.. அதை தடுக்க முடியாது. அதனால.. நீங்க நல்லா யோசனை பண்ணி, எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்'' என்று உருக்கமாகப் பேசினார். 

இடையில் ஒரு முறை பிரச்சாரத்துக்காக விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டைக்கு வைகோ சென்றபோது, அவருடன் வந்த கட்சியினரின் வாகனத்தை பெரிய வள்ளிக்குளம் என்ற இடத்தில் சோதனை செய்ய முற்பட்டது பறக்கும்படை. வாக்குவாதம் உண்டாகி "காரை விட்டு கீழே இறங்குங்கடா'' என்று போலீஸ்  அக்கட்சியினரிடம் ஒருமையில் பேசும் அளவுக்கானது. போலீசாருக்கும் தொண்டர்களுக்குமிடையே பிரச்சினை வலுத்ததைக் கண்ட வைகோ, வேனிலிருந்து கீழே இறங்கி "எதற்கு அநாகரிகமாக நடந்து கொள்கின்றீர்கள்? மரியாதைக் குறைவாக பேசுகின்றீர்கள்?" என்று போலீஸாரிடம் நியாயம் கேட்க, போலீசாரும் "நாங்க என்ன மரியாதைக் குறைவாக நடந்துகொண்டோம்?'' என்று வைகோவின் முகத்துக்கு நேராகக் கேட்டுவிட்டனர். உஷ்ணமான தொண்டர்கள் "தலைவருக்கே அவமரியாதையா?" என்று குரல் எழுப்ப, வைகோவும் "நாங்க கொண்டு வந்த சூட்கேஸை நல்லா செக் பண்ணிக்கோங்க...'' என்று திறந்து காட்டி, கட்சியினருடன் சாலையில் அமர்ந்துவிட்டார். இந்த மறியலால் விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் அப்போது சுமார் 30 நிமிடங்கள் வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த விவகாரம் நடக்கும் முன்பு ஒருமுறை "எங்களை செக் பண்ணுறீங்கள்ல... முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரை செக் பண்ணுவீங்களா?" என்று தனது வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது வைகோ பேசியதும், அதற்கு தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் "முதலமைச்சரின் ஹெலிகாப்டர் என்றாலும் சோதனையிடுவோம்'’ என்று சொல்லியதும், அ.தி.மு.க. தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்தே, வைகோவின் பிரச்சார பயணத்தில் போலீஸ் இத்தனை கெடுபிடி காட்டியதாம். இப்போது ஜெயலலிதா இல்லை, அதிமுகவும் ஒன்றாக இல்லை. மதிமுக, திமுகவுடன் நிற்கிறது.

சென்ற தேர்தல் பிரச்சாரத்தில் தனது சாதனைகளை மட்டுமல்ல.. வேதனையையும் முன் வைத்தார் வைகோ! எவ்விதச் சலனமுமின்றி கேட்டு வைத்தார்கள் வாக்காளர்கள். ஆனால், மீண்டும் அவருக்கு தோல்வியையே பரிசளித்தார்கள். இந்தத் தேர்தலில், கடந்த இரண்டு முறையாக தன்னை எதிர்த்து நின்று, அதில் ஒரு முறை வென்றும்விட்ட காங்கிரசின் மாணிக் தாகூருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வைகோ. ஆரம்பத்தில் சொன்னதுதான், அவரது கூட்டணி மாற்றங்களில் குறை காணலாம். ஆனால், இன்று வரை இந்திய நாடாளுமன்றம் கண்டுள்ள  முக்கியமான, சிறந்த உறுப்பினர்களில் ஒருவர்.


-சி.என்.இராமகிருஷ்ணன்

படம் : அசோக்

 

Next Story

கேரளாவிற்குச் சுற்றுலா சென்ற மாணவர் உயிரிழப்பு; துரை வைகோ எம்பி-யின் துரித நடவடிக்கை!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
tn student who passed away Kerala sent his hometown by action Durai Vaiko

பட்டயக் கணக்காளருக்கு படித்து வரும் மதுரையைச் சேர்ந்த 12 மாணவர்கள் நேற்று(20.6.2024) இரவு கேரளா மாநிலம் வர்காலாவுக்கு சுற்றுலாவாகச் சென்றுள்ளார்கள். 12 பேரில் 7 பேர் மாணவர்கள், 5 பேர் மாணவிகள். பட்டயக் கணக்காளர் படிப்புக்கான இடைநிலை தேர்வை முடித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் இன்று(21.6.2024) காலை வர்காலாவில் உள்ள கடலுக்குச் சென்றுள்ளார்கள். கடலில் மாணவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தபோது ரகு என்ற மாணவனை கடல் அலை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. பிறகு, உயிருக்கு ஆபத்தான நிலையில் ரகுவின் உடல் கரை ஒதுங்கியிருக்கிறது.

ரகுவின் உடலைப் பார்த்த மாணவர்கள் உடனடியாக அங்கிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி ரகு உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த  ம.தி.மு.க முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, உடனடியாக திருவனந்தபுரம் ஆட்சித் தலைவரை தொடர்பு கொண்டு பேசினார். ரகுவின் நிலைமையை எடுத்துச் சொல்லி மற்ற மாணவர்களையும் பாதுகாப்பாக தமிழகம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். 

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் உதவியாளரையும் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று உதவிடுமாறு தெரிவித்து உள்ளார். அவரும் மாணவர்களை பத்திரமாக தமிழகம் அனுப்பும் பணியை ஒருங்கிணைத்து வருகின்றார். துரை வைகோவின் கோரிக்கையை ஏற்று திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக அப்பகுதி வட்டாட்சியரை நேரில் அனுப்பி உள்ளார்.

எதிர்பாராத விதமாக இறந்த ரகுவிற்கு பிரதப் பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகளை விரைந்து முடிக்கவும், மற்ற மாணவர்களைப் பாதுகாப்பாக தமிழகம் அனுப்பி வைக்கவும் திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியரிடம் துரை வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், தமிழக மாணவர்களைப் பத்திரமாக அனுப்பும் பணியில் துரிதமாக செயல்பட்ட திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் உதவியாளருக்கும் துரை வைகோ நன்றி தெரிவித்துக் கொண்டார். நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றுள்ள சசி தரூருக்கு துரை வைகோ தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Next Story

தற்காலிக சபாநாயகர் நியமனம்; காங்கிரஸ் எதிர்ப்பு

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Appointment of Temporary Speaker; Opposition to Congress

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பாஜக தலைமையிலான கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது மக்களவையின் தற்காலிக சபாநாயகர் குறித்த உத்தரவை இந்திய குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அறிவிப்பின்படி மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தப் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் எனவும், எம்பிக்கள் பதவியேற்ற பிறகு மக்களவையின் புதிய சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதேநேரம் தற்காலிக சபாநாயகர் நியமனத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் நாடாளுமன்ற விதிகளை பாஜக மீதியுள்ளது என தெரிவித்துள்ள காங்கிரஸ், சபாநாயகர் தேர்தலுக்கு முன் மூத்த எம்.பி தான் அவைக்கு தலைமை தாங்க வேண்டும் என்பது விதி. 8 முறை எம்பியாக இருந்த காங்கிரசின் கொடி குன்னிலை நியமிக்கவில்லை. தற்காலிக சபாநாயகராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பர்த்ருஹரி மஹ்தப்  ஏழு முறை மட்டுமே எம்.பியாக இருந்தவர் என காங்கிரஸ் விமர்சனத்தை வைத்துள்ளது.